சி.எஸ் லூயிஸ் எழுதிய “மியர் கிறிஸ்டியானிட்டி” என்ற புத்தகத்தில், “நம் தேவனுக்கு நேரம் பொருத்தமானதல்ல என்பதை மிக உறுதியாகக் கூறமுடியும். அவருடைய வாழ்வில், ஒரு கணத்திற்குப் பின் மற்றொன்று என்ற கணிப்பேயில்லை. இவ்வுலகை உருவாக்கினது முதற்கொண்டு, எல்லா காலமும் அவருக்கு நிகழ்காலம் தான்.” என்று எழுதுகின்றார். ஆனாலும், காத்திருக்கும் காலம், நமக்கு நீண்டதாகத் தோன்றும். ஆனால், காலத்தை உருவாக்கிய தேவனை, நாம் நம்பும்படி கற்றுக்கொள்ளும் போது, நம்முடைய நிலையற்ற வாழ்வு அவருடைய கரத்தில் பாதுகாப்பாயிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். 

சங்கீதம் 102ல், சங்கீதக்காரன் புலம்பும் போது, “என் நாட்கள் சாய்ந்து போகிற நிழலைப் போலிருக்கிறது; புல்லைப் போல் உலர்ந்து போகிறேன். கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்” என்கின்றார் (வச. 11-12). இச்சங்கீதத்தின் ஆசிரியர், தன்னுடைய துன்பங்களினால் சோர்வடைந்த போது, “தேவரீர் என்றென்றைக்கும் அரசாளுகிறீர்”  என்று வெளிப்படுத்துகின்றார். தேவனுடைய வல்லமையையும், மாறாத இரக்கத்தையும் நாம் அளவிட முடியாது என்கிறார் (வச. 13-18) திக்கற்ற வேளையில் (வச. 19-24), சங்கீதக்காரன், தன்னுடைய கண்களை, எல்லாவற்றையும் படைத்தவராகிய தேவனிடம் திருப்புகின்றார், (வச. 25) படைப்புகள் யாவும் அழிந்து போம், ஆனால் நம் தேவனோ நிலைத்திருப்பார். (வச. 26-27).

காலம் ஓடாதது போலும் அல்லது நீண்டும் காணப்பட்டால், நாம், தேவன் செயல் படவில்லையென தேவனைக் குறை கூற நேரலாம். நாம் பொறுமையிழக்கலாம், அல்லது ஒரேயிடத்தில் இருந்து சலிப்படையலாம். நம் நடைபாதையிலுள்ள ஒவ்வொரு கல்லைக் கூட அவர், நமக்காகத் திட்டமிட்டுள்ளார். நம்முடைய தேவைகளை நாமே பார்த்துக் கொள்ளும் படி, அவர் நம்மை விட்டு விடுபவரல்ல. அவர் மீதுள்ள நம்பிக்கையோடு நாம் வாழும் போது, நிகழ் காலத்தில் நாம் தேவனோடு நடப்பவர்களாவோம்.