வல்லமையான எழுத்தாளரான கெய்ட்லின்,  தன்னைத் தாக்கியவர்களை எதிர்த்துப் போராடிய போது ஏற்பட்ட மன அழுத்தத்தை விவரிக்கின்றார். அவளுடைய உடல் சார்ந்த போராட்டத்தைக் காட்டிலும், மனதின் போராட்டம் மிகவும் ஆழமாக இருந்தது. அது உண்மையென்பதையும் உணர்ந்தாள். “எத்தனை விரும்பத்தகாதவள் நான், நீ பழக விரும்பும் பெண்ணாக நான் இல்லை.” என்றாள். தான் நேசிக்கப்படத் தகுந்தவளல்ல, பயன் படுத்தி விட்டு, தூக்கி எறியப் பட, நான் விரும்பவில்லை எனவும் கூறினாள்.

தேவன் நம்மை புரிந்து கொள்கின்றார். அவர் அன்போடு இஸ்ரவேலரைப் பாதுகாத்தார், ஆனால் அவர்களோ அவருடைய மதிப்பைக் குறைத்தனர். “எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்” (சகரி. 11:12) இது, ஓர் அடிமையின் மதிப்பு. வேறொருவனுடைய கவனக்குறைவால், எஜமானன் ஒருவனின் அடிமை மரித்துப் போனால், அதற்கு ஈடாக, அவன் முப்பது சேக்கல் நிறை வெள்ளியைக் கொடுக்க வேண்டும் என்பதாக யாத்திராகமம் 21:32ல் காண்கின்றோம்.இந்த மிகக் குறைந்த மதிப்பினை தேவனுக்குக் கொடுத்து, தேவனை அவமதித்தனர். அப்பொழுது தேவன் சகரியாவிடம், “அதைக் குயவனிடத்தில் எறிந்து விடு, இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு,” என்று தேவன் இளப்பமாகக் கூறுகின்றார் (சகரி. 11:13).

இயேசுவின் நண்பன், அவருக்கு துரோகம் மட்டும் இழைக்கவில்லை, அவமானமும் அடையச் செய்தான். யூத மதத் தலைவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தனர், எனவே அவர்கள் யூதாஸுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுத்தனர், ஒரு மனிதனுக்கு கொடுக்கக் கூடிய மிகக் குறைந்த விலை மதிப்பைக் கொடுத்தனர். அவன் அதை வாங்கிக் கொண்டான் (மத். 26:14-15; 27:9) யூதாஸ் இயேசுவை மிகக் குறைவாக மதிப்பிட்டான், அவரை கீழ்த்தரமான தொகைக்கு விற்றுப் போட்டான்.

இயேசுவையே தரக்குறைவாக மதிப்பிட்ட மக்கள், உன்னையும் தரக்குறைவாக மதிப்பிடும் போது ஆச்சரியப்பட வேண்டாம். மற்றவர்கள் உனக்கு தரும் மதிப்புமல்ல, நீ உன்னை நினைத்து வைத்திருக்கும் மதிப்புமல்ல, உன்னுடைய மதிப்பு, தேவனாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. உன்னுடைய மதிப்பை, தன்னுடைய ஜீவனைக் கொடுக்கின்ற அளவுக்கு விலையேறப் பெற்றதாக தேவன் கருதுகின்றார்.