தந்தையின் ஆசிர்வாதம்
எங்களுடைய ஆலயத்தில் அநேக மக்கள், தங்களுடைய தகப்பனாருடன் சரியான உறவில் இல்லாத படியால், ஓர் அன்பான தந்தையாக நின்று, அவர்களை ஆசிர்வதிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர். தங்களுடைய பிள்ளைகளிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்த்தல், பிள்ளைகளை அன்போடு சந்திப்பதில்லை, அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் தூரத்தில் வைத்துவிடல் போன்ற பல காரணங்களுக்காக மன்னிப்பை கேட்பதன் மூலம் ஆசிர்வதித்தல், மேலும் பிள்ளைகளைக் காண்பதில் பெருமகிழ்ச்சியடைதல், அவர்களை ரசித்தல், அவர்கள்மேல் மிகவும் அன்பு செலுத்துவது, போன்ற பல காரணங்கள் மூலம் அவர்களை ஆசிர்வதித்தேன். நான் இவ்வாறு ஆசிர்வாதங்களைப் பகிர்ந்து கொண்ட போது, என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. நானும் என் தந்தையிடமிருந்து இத்தகைய வார்த்தைகளைப் பெற வேண்டியுள்ளது, என்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுக்கவேண்டியுள்ளது என்பதை நினைத்துப் பார்த்தேன்.
நம்முடைய உலகத் தந்தையைக் குறித்து, நாம் வைத்திருக்கும் உருக்குலைந்த வடிவத்தை மாற்றி, மறுபடியும் புதிப்பித்து தருகின்றவர் நம்முடைய தந்தையாம் தேவன் என்று வேதாகமம் கூறுகின்றது. நம்முடைய பரம தந்தை, நம்மை “தம்முடைய பிள்ளைகளாக” ஏற்றுக் கொண்டதினால், அவர் நம்மேல் பாராட்டின “மிகப் பெரிய அன்பு” விளங்குகின்றது (1 யோவா. 3:1) நாம் தேவனுடைய மகன் அல்லது மகள் என்பதே, இந்த நிலையற்ற, பயம் நிறைந்த உலகில், நாம் வாழுவதற்கு தேவன் தந்துள்ள அடிப்படை ஆதாரம். “நாம் தேவனுடைய பிள்ளைகள்” என்று அழைக்கப் படுகின்றோம், ஆனால்,” இனி எவ்விதமாயிருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை’’ என்று யோவான் கூறுகின்றார் (வச. 2). நம்முடைய பரமத் தந்தை நம்மை நேசித்து, நம்முடைய தேவைகளையெல்லாம் சந்தித்து வருகின்றார், அதை அவர் நிறுத்துவதேயில்லை என்ற நம்பிக்கையே, ஒவ்வொருநாளும் வரும் சவால்களைச் சந்திக்க பெலன் தருகின்றது. அவர் கூறியவற்றில் நாம் நிலைத்திருக்கும் போது, நாமும் அவரைப் போலாவோமென்று யோவான் எழுதுகின்றார் (வச. 2).
நம்முடைய எதிர்பார்ப்புகள், காயங்கள், தோல்விகளின் மத்தியில், நம்முடைய நல்ல தந்தை, குறைவற்ற அன்பையும் நம் மீது பொழிகின்றார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை வலியுறுத்துகின்றார், ஏனெனில், அவர் நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருக்கின்றார்.
கொடுப்பவரின் மகிழ்ச்சி
டிக்கிள் மீ எல்மோ(Tickle Me Elmo), காபேஜ் பாட்ச் கிட்ஸ் (Cabbage Patch Kids ), த ஃபர்பீ (The Furby) இவையெல்லாம் என்னவென்று நினைவிருக்கின்றதா ? இவையெல்லாம், கிறிஸ்மஸ் காலத்தில், சிறுவர்களுக்கு கொடுக்கப்படும் பிரசித்திப் பெற்ற வெகுமதிகள். இந்த வரிசையில் வரும் வேறு சில வெகுமதிகள்- மோனோபோலி, நைன்டென்டோ கேம் பாய், மற்றும் வீ என்ற விளையாட்டுகள்.
நாமெல்லாருமே கிறிஸ்மஸ் காலத்தில் வெகுமதிகள் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவோம். ஆனால் முதல் கிறிஸ்மஸ் அன்று, தேவன் கொடுத்த வெகுமதியின் மூலம், அவர் அடைந்த மகிழ்ச்சியை ஒப்பிடவே முடியாது. இந்த பரிசு, ஒரு குழந்தையாக, பெத்லகேமில், ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது (லூக். 2:7).
அவர் தாழ்மையாகப் பிறந்த போதிலும், அவருடைய பிறப்பை தேவதூதன் அறிவித்தான். அந்த தூதன், “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (வச. 10-11), என்றான். இந்த அற்புத செய்திக்குப் பின்னர், “பரம சேனையின் திரள்” தோன்றி, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக,” என்று தேவனைத் துதித்தார்கள் (வச. 13-14).
இந்த கிறிஸ்மஸ் காலத்தில், நீங்கள் நேசிக்கும் நபர்களுக்கு பரிசுகளைக் கொடுத்து மகிழுங்கள், ஆனால் எதற்காக வெகுமதிகளைக் கொடுக்கிறோம் என்பதைக் காணத் தவறிவிடாதிருங்கள். தேவன் நமக்குத் தந்த மிகப் பெரிய நற்கொடை, அவருடைய படைப்புகளாகிய நம்மை, பாவத்திலிருந்து மீட்பதற்கு தன்னுடைய சொந்த மகனையே தந்ததில் அடங்கியுள்ளது. அவர் தம்மைத் தந்ததால், நாமும் கொடுக்கின்றோம். நாம் நன்றியோடு ஆராதிப்போம்!
தோல்வி என்பதே இல்லை
“தோல்வி என்பதே இல்லை” என்றார், சூசன் பி. அன்டொனி (1820-1906). அவள், அமெரிக்காவில் பெண்கள் உரிமைக்காக, அசைக்க முடியாத உறுதியோடு போராடினவள் அவள் வன்மையான விமர்சனங்களையும், பின்னர், கைது, விசாரணை, சட்ட விரோதமாக வாக்களித்ததால் குற்றவாளி என்ற தீர்ப்பு என பலவிதமான பிரச்சனைகளைச் சந்தித்தாள். ஆனாலும் அன்டொனி, பெண்கள் ஓட்டுரிமையை பெறும் வரை போராடுவதெனத் தீர்மானித்தாள். அவளுடைய போராட்டத்தின் நோக்கம் நேர்மையானது எனக் கருதினாள். அவளுடைய போராட்டத்தின் விளைவை, காண்பதற்கு அவள் உயிரோடு இல்லாவிட்டாலும், அவளுடைய அறிக்கை உண்மையென நிரூபிக்கப் பட்டது. 1920ல், அரசியல் அமைப்பின் பத்தொன்பதாவது சட்ட திருத்தம், பெண்களுக்கு ஓட்டுரிமையை வழங்கியது.
தோல்வியென்பது, நெகேமியாவின் செயல்களிலும் இல்லை, ஏனெனில், வல்லமையான உதவியாளராக தேவன் அவரோடிருந்தார். அவருடைய நோக்கத்தை ஆசிர்வதிக்கும் படி தேவனிடம் கேட்ட பின்பு, அவர் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்ட ஆரம்பிக்கின்றார். நெகேமியாவும், அவரோடு, பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து, எருசலேமுக்குத் திரும்பிய சிலரும் சேர்ந்து இந்த வேலையை முடித்தனர். பகைவரிடமிருந்து மக்களைக் காப்பாற்ற அலங்கம் தேவைப்பட்டது. ஏமாற்றுதல், அச்சுறுத்தல் மூலமாக, அவருடைய நோக்கத்திற்கு எதிர்ப்புகள் வந்தன. ஆனால் எந்த எதிர்ப்பும், அவருடைய வேலையைத் தடுக்க முடியவில்லை. தன்னை தடுக்க எண்ணியவர்களுக்கு, “நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது” என்று சொல்லி அனுப்பினான் (நெகே. 6:3). பின்பு அவன், “தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்” என்று ஜெபித்தான் (வச. 9). அவனுடைய விடாமுயற்சியினால் அந்த வேலையை முடிக்க முடிந்தது (வச. 15).
நெகேமியாவை தேவன் பெலப்படுத்தி, எதிர்ப்புகளை மேற்கொள்ளச் செய்தார். நீ எடுத்துக் கொண்ட எந்தவொரு வேலையை விட்டு விட நினைக்கின்றாய்? அதனைத் தொடர்ந்து செய்வதற்குத் தேவையானவற்றை தேவனிடம் கேள்.
இருதயத்தில் எழுதப் பட்டுள்ளது
நான் பேராசிரியராகப் பணியாற்றுவதால், என்னுடைய மாணவர்கள், சிபாரிசு கடிதம் பெறுவதற்கு அடிக்கடி என்னிடம் வருவர். தலைமைத்துவ நிலைகளுக்கு, வெளி நாட்டில் கல்வி பயில, பட்டப் படிப்பிற்குச் செல்ல அல்லது வேலைக்குச் செல்ல என பல்வேறு காரணங்களுக்காக வருவதுண்டு. ஒவ்வொரு கடிதத்திலும், நான் எனது மாணவர்களின் குணத்தையும், அவர்களுடைய கல்வித் தகுதியையும் பாராட்டி எழுத எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
பழங்காலத்தில், கிறிஸ்தவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்யும் போது, தங்களுடைய ஆலயத்திலிருந்து ஒரு பாராட்டு கடிதத்தைப் பெற்றுச் செல்வர். இத்தகைய கடிதம், அந்த சகோதரனோ அல்லது சகோதரியோ நல்ல வரவேற்பை பெறுவதற்கு உறுதியளிக்கும்.
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபையில் பேசுவதற்குச் சென்ற போது, அவனுக்கு இத்தகைய ஒரு பாராட்டு கடிதம் தேவையில்லாதிருந்தது, ஏனெனில், அவர்கள் அவனை அறிந்திருந்தனர். பவுல் சுவிசேஷத்தை உண்மையான மனதோடு பிரசங்கித்ததாகவும், தன்னுடைய ஆதாயத்திற்காக அல்ல என்றும் அந்த சபைக்கு எழுதப்பட்ட இரண்டாம் கடிதத்தில் எழுதுகின்றார் (2 கொரி. 2:17). தன்னைக் குறித்து இப்படி எழுதும் போது, அவர் தனக்குத்தானே பாராட்டுக் கடிதம் எழுதுவதாக வாசகர்கள் எண்ணக்கூடும்.
ஆனால், அவருக்கு ஒரு பாராட்டு கடிதமும் தேவையில்லை, ஏனெனில் கொரிந்து சபை மக்களே, அவருடைய பாராட்டு கடிதம் என்கின்றார். கிறிஸ்து அவர்களுடைய வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றமே, அனைவராலும் பார்க்கக்கூடிய, அவருடைய கடிதம் என்கின்றார். “அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால் எழுதப்பட்டிருக்கிறது.” (3:3) பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்திற்கு அவர்களுடைய வாழ்க்கை தானே சாட்சி என்கின்றார். அவர்களுடைய வாழ்க்கை “சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்படும்” நிருபம் என்கின்றார்.(3:2) இயேசுவை பின்பற்றும் நமக்கும் இது உண்மை. நம்முடைய வாழ்வு, சுவிசேஷத்தின் நன்மையை எடுத்துக் கூறும் உண்மை கதையாய் இருக்க வேண்டும்.
Sample Title
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Et egestas quis ipsum suspendisse. Lorem ipsum dolor sit amet. Scelerisque purus semper eget duis at tellus. Suspendisse potenti nullam ac tortor vitae purus faucibus ornare suspendisse. Quam lacus suspendisse faucibus interdum posuere lorem ipsum. Dolor sit amet consectetur adipiscing elit…