அவருடைய வார்த்தையால் வழி நடத்தப்படுதல்
பால் ஆர்னால்ட் லண்டன் பிபிசி (BBC) வானொலி நிலையத்தில், முதன் முறையாகச் சேர்ந்த போது, அவருடைய முதல் வேலை, ரேடியோ நாடகங்கள் ஒலி பரப்பப் படும் போது, “நடக்கும் ஒலியை” ஏற்படுத்துவதாகும். நடிகர்கள் நடப்பது போன்ற காட்சிகள் வரும் போது, அவர்கள் தங்களுடைய வசனங்களை வாசிக்கும் போது, மேடை மேலாளரான பால், அதற்குத் தகுந்த, நடக்கும் ஒலியைத் தன்னுடைய பாதங்களைக் கொண்டு ஏற்படுத்துவார். நடிகரின் பேச்சுக்கும், வாசிக்கும் வரிகளுக்கும் ஏற்றாற் போல், தன்னுடைய ஒலியைக் கொடுப்பார். இதிலுள்ள சவால் என்னவெனின், அந்த கதையில் வரும் நடிகனோடு ஒத்துப் போக வேண்டும், எனவே, “நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்வோம்” என்றார்.
இத்தகைய ஒரு தெய்வீக ஒன்றிணைப்பைப் பற்றி சங்கீதக்காரன் சங்கீதம் 119ல் கூறுவதைக் காண்கின்றோம். இது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றாற் போல் ஒத்து வாழ்தலை வலியுறுத்துகின்றது. “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் என சங்கீதம் 119:1 கூறுகின்றது. தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழி நடக்கும் போது, நாம் நம்முடைய வழிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.(வ.9) நமக்குள்ளே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளாமலும் (வச. 23), பொருளாசைக்குத் தப்பிக்கொள்ளவும் (வச. 36), பாவத்திற்கு எதிர்த்து நிற்கவும் (வச. 61), தேவனுக்கு பயப்படுகின்ற நண்பர்களைப் பெற்றுக்கொள்ளவும் (வ.63), மகிழ்ச்சியோடு வாழவும் (வச. 111) முடியும்.
வேத அறிஞர் சார்ல்ஸ் பிரிட்ஜஸ் வசனம் 133 ஐக் குறித்து விளக்கம் அளிக்கும் போது, “நான், இவ்வுலகில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், இது தேவனுடைய வார்த்தையின் படி உள்ளதா, நான் கிறிஸ்துவை மாதிரியாகக் காட்டுகின்றேனா?” என்பதாகக் கேட்கும்படி கூறுகிறார்.
இவ்வாறு நாம் நடக்கும் போது, இவ்வுலகிற்கு நாம் இயேசுவைக் காட்டுகிறோம். நாம் அவரோடு நெருங்கி நடக்கும் போது, நம்மைக் காண்கின்ற மக்கள், நம்மில் தலைவராக, நண்பராக, இரட்சகராக, இயேசுவைக் காண தேவன் நமக்கு உதவுவாராக.
மிகப் பெரிய கலைப்பும், மாற்றமும்
ராபர்ட் கோல்ஸ் எழுதிய, த கால் ஆஃப் சர்விஸ்(The Call of Service) என்ற புத்தகத்தில், சேவை செய்வதற்கான காரணங்களை ஆராயும் போது, ஒரு வயதான பெண்ணின் சேவையைப் பற்றி கூறுகின்றார். அவள் ஒரு பள்ளி பேருந்து ஓட்டுநர். ஒவ்வொரு நாளும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, அவள் அதிக கவனம் செலுத்துவாள், வீட்டுப் பாடத்தில், கேள்விகளைக் கேட்பாள், அவர்களுடைய வெற்றியைக் கொண்டாடுவாள், “இக்குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதை நான் காணவேண்டும்” என்று தன்னுடைய நோக்கத்தை வெளிப்படுத்துவாள். இதற்கு மற்றுமொரு காரணமும் உள்ளது.
இவள் வாலிப்பெண்ணாக இருந்த போது, இவளுடைய அத்தையின் வார்த்தைகள், இவளுடைய உள்ளத்தைத் தொட்டிருக்கின்றது. “நம் தேவன் நம்மைப் பார்க்கும் படியாக, நாம் ஏதாவது செய்யவேண்டும், இல்லையென்றால், மிகப் பெரிய கலைப்பின் போது, நாம் காணாமல் போய் விடுவோம்” என்பதாக அவளுடைய அத்தை கூறியிருக்கின்றாள். நியாயத்தீர்ப்பின் நாளில் நடைபெறும் மிகப் பெரிய மாற்றத்திற்குப் பின், நாம் நரகத்தில் தள்ளுண்டு போய் விடக்கூடாது என்பதற்காக இப்பெண், “தேவனுடைய கவனத்தைப் ஈர்ப்பதற்காக” சில காரியங்களை நியமித்து வைத்துள்ளாள், ஆலயத்திற்குச் செல்லவேண்டும், அப்படியானால் “நான் உண்மையுள்ளவளாயிருக்கிறேன்” என்பதை தேவன் பார்ப்பார் என்றும், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு நான் கடினமாக உழைத்தால், “நான் செய்வதைக் குறித்து, மற்றவர்கள் கூறுவதை தேவன் கேட்பார்” என்றும் நினைத்திருக்கின்றாள்.
நான், அவள் செய்யும் வேலையைக் குறித்து வாசித்து, கவலையுற்றேன். தேவன் நம்மை கவனித்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை இவள், எப்படி அறியாதிருக்கிறாள்? (மத். 10:30). அந்த மிகப் பெரிய குழப்பத்தின் நாளில், நியாயத்தீர்ப்பிலிருந்து நமக்கு விடுதலை தந்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்வார் என்பதை இவள் எப்படி அறியாமல் இருக்கிறாள்? (ரோம. 8:1). நம்முடைய நற்கிரியைகளினால் நாம் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை இவள் எப்படித் தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றாள்? இரட்சிப்பு என்பது விசுவாசிக்கிறவர்களுக்கு தேவனால் அருளப்படுகின்ற ஈவு (எபே. 2:8-9).
இயேசுவின் வாழ்வும், மரணமும், உயிர்த்தெழுதலும், நாம் தேவனோடு வாழப்போகின்ற எதிர் காலத்தை நமக்குத் தருகின்றது, நாம் விடுதலையோடு பிறருக்குச் சேவை செய்து மகிழ்ந்திருப்போம்.
கொடுப்பதில் வளருதல்
“நான் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன்” என்று என்னுடைய இரண்டு வயது பேரன், மகிழ்ச்சியில் கத்திக் கொண்டே, என்னுடைய கரங்களில் ஒரு பெட்டியைத் திணித்தான். “அவனே அதைப் தெரிந்தெடுத்தான்” என்று என்னுடைய மனைவி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அந்தப் பெட்டியைப் பிரித்த போது, அங்கு அவனுக்குப் பிடித்தமான கார்டூன் அங்கத்தினரின் உருவம், கிறிஸ்மஸ் பரிசாக வைக்கப்பட்டிருந்தது. “நான் பார்க்கலாமா?” என்று ஆவலோடு கேட்டான். பின்னர் அவன் அந்த, “என்னுடைய” பரிசை வைத்து அந்த நாள் முழுவதும் விளையாடினான், நான் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டேன்.
கடந்த காலங்களில், நான் விரும்பியவர்களுக்குக் கொடுத்த பரிசுகளை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படித்த போது, என்னுடைய மூத்த சகோதரனுக்கு இசை ஆல்பம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன், அதைக் கேட்பது எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னும் தாராளமாகக் கொடுக்கும்படி, தேவன் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என்று நினைத்துப் பார்த்தேன்.
கொடுப்பது என்பது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு. “மற்றெல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறது போல, இந்த தர்மக் காரியத்திலும் பெருகவேண்டும்” என்று பவுல் எழுதுகின்றார்
(2 கொரி. 8:7). நம்மிடம் இருப்பவையெல்லாம் தேவன் தந்தவை என்று எண்ணி, நாம் கொடுக்கும் போது கிருபை பெருகும். ஏனெனில், “வாங்குகிறதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே பாக்கியம்” என்று இயேசு கூறியிருக்கிறாரே. (அப். 20:35).
தேவன் மிகச் சிறந்த தன்னலமற்ற ஈவை, நமக்காகத் தந்துள்ளார். தன்னுடைய ஒரேகுமாரனை, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும்படி ஒப்புக்கொடுத்து, பின்னர் அவரை உயிரோடு எழுப்பினார். இந்த விலையேறப்பெற்ற ஈவைப் பெற்றுக்கொண்டவர்கள், அளவற்ற செல்வத்தைப் பெற்றுக் கொண்டவர்கள். நம்முடைய இருதயம் தேவனுக்கு நேராகத் திருப்பப்படும் போது, நம்முடைய கரங்கள் அன்போடு மற்றவர்களுக்குக் கொடுக்கும்.
கிறிஸ்மஸ் விருந்தாளி
1944 ஆம் ஆண்டு, கிறிஸ்மஸ் அன்று மாலை, “ஓல்ட் பிரிங்கர்” என்று அழைக்கப்பட்ட ஒரு கைதி, சிறைச்சாலை மருத்துவமனையில், மரிக்கும் தருவாயில், சக கைதிகளால் நடத்தப்படும் எளிய கிறிஸ்மஸ் ஆராதனையை எதிர்பார்த்திருந்தார். அவர், “எப்பொழுது இசை ஆரம்பமாகும்?” என்று வில்லியம் மேக்டோகல் என்ற கைதியிடம் கேட்டார். இவரும் பிரிங்கரோடு, சுமத்ராவிலுள்ள முன்டோக் சிறைச்சாலையில், கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். “சீக்கிரத்தில்” என்றார், மேக்டோயல். “நல்லது, அப்படியானால் நான் அவர்களின் பாடலை, தூதர்களின் பாடலோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்,” என்று மரிக்கும் நிலையிலுள்ள பிரிங்கர் கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிங்கர் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை விட்டு விலகிப் போயிருந்தாலும், கடைசி நாட்களில், அவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு, தேவ சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார். யாரையும் கசப்பான முகத்தோடு பார்க்கும் அவர், இப்பொழுது புன்முறுவலோடு, “முற்றிலும் மாற்றம் அடைந்தேன்” என்று கூறுவதாக மேக்டோகல் தெரிவித்தார்.
மெலிந்து போன, பதினோரு கைதிகளாலான பாடகர் குழு, பிரிங்கரின் விருப்பப்படி, அமைதியான இரவு (Silent Night) என்ற பாடலைப் பாடி முடித்ததும், பிரிங்கரும் அமைதியாக மரித்தார். அவர் மீண்டும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், இப்பொழுது தேவனோடு பரலோகத்தில் இருப்பார் என்றும், “பிரிங்கருக்கு சாவு என்பது, இனிய கிறிஸ்மஸ் விருந்தாளியாக அமைந்தது” என்றும் மேக்டோகல் கூறினார்.
பிரிங்கர், சாவை எதிர் நோக்கிய விதம், எனக்குச் சிமியோனை நினைவுபடுத்துகின்றது. இந்த பரிசுத்தவானுக்கு, “கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடைய மாட்டாய்” என்று பரிசுத்த ஆவியினாலே அறிவிக்கப் பட்டிருந்தது. (லூக். 2:26) சிமியோன் தேவாலயத்தில் இயேசுவைக் கண்டு, “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்… உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” என்றார் (வச. 29,32).
பிரிங்கரோடு சேர்ந்து, மிகப் பெரிய கிறிஸ்மஸ் பரிசாக நாம் பெற்றுக்கொள்வதும், பகிர்ந்து கொள்வதும், இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தைக் காத்துக் கொள்வதேயாகும்.
ஆம், ஆம்… என்னும் தொடர் சங்கிலி
ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று, என்னுடைய பாட்டியம்மா எனக்கு ஒரு முத்து மாலையைக் கொடுத்தார்கள். அந்த அழகிய முத்துக்கள் என் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தன. ஒரு நாள், அந்த மாலையின் கம்பி அறுந்து, அதின் முத்துக்களெல்லாம் மரத்தினாலான தரையில் சிந்தி, குதித்து, நாலாபக்கமும் சிதறின. நான் அந்த தரையில் தவழ்ந்து, ஒவ்வொரு சிறிய முத்தையும் பொறுக்கினேன். ஒவ்வொன்றும் தனித் தனியே சிறியதாக இருந்தாலும், அவையனைத்தையும் சேர்த்து கோர்த்திருந்த போது எத்தனை அழகாய் இருந்தது!
சில வேளைகளில் தேவன் கேட்கும் காரியங்களுக்கு, நான் ஆம் என்று கூறுவதும், அந்த தனி முத்தைப் போன்று முக்கியமற்றதாகக் காணப்படலாம். இயேசு கிறிஸ்துவின் தாயாராகிய மரியாளின் அற்புதமான கீழ்ப்படிதலைப் பார்க்கும் போது, நான் என்னை ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். மேசியாவை தன்னுடைய கருவில் சுமக்க வேண்டுமென தேவன் அழைத்த போது மரியாள், தன்னை உடனே அர்ப்பணிக்கின்றாள். “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள். (லூக். 1:38). அந்நேரத்தில் அவளிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் அவள் புரிந்து கொண்டிருந்தாளா? மேலும் தன்னுடைய மகனை, பின்னர் சிலுவையில் அறைவதற்கும், ஒப்புக்கொடுக்கப்போவதை அறிந்திருந்தாளா ?
லூக்கா 2:19 ல் காண்கின்றோம், தேவதூதர்களும், மேய்ப்பர்களும் இயேசுவைப் பணிந்து கொண்ட பின்பு,” மரியாளோ, அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள்.” அவள் நடந்த காரியங்களையெல்லாம் தன்னுடைய இருதயத்தில் “சேகரித்து” வைத்தாள், அத்தனையும் “ஒன்றாக இணைத்து”ப் பார்த்தாள். இதே வார்த்தைகளை லூக்கா 2:51 ல் மீண்டும் பார்க்கின்றோம். அவள் தன் வாழ்க்கையில் அநேகம் முறை, ஆம், ஆம்… என்றே பதிலளிக்கின்றாள்.
நம்முடைய தந்தை நமக்கு கொடுக்கின்ற ஒவ்வொரு அழைப்பிற்கும், நாமும் மரியாளைப்போன்று, கீழ்ப்படிதலோடு, ஆம் என்று சொல்வதை நம்முடைய நோக்கமாகக் கொள்வோம். நம் வாழ்க்கை முழுவதும் நாம் கூறுகின்ற ஆம் அத்தனையும் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்படும்.