2009 ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சலஸ் தேசம், பிள்ளைகளின் சிறையிருப்பிற்கான செலவுத் தொகையை அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து வசூலிப்பதை நிறுத்தியது. புதிதாக கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்றாலும், இந்த கொள்கை மாற்றம் வருவதற்கு முன்பிருந்தே செலுத்தாத தொகை, கடனாகவே இருந்தது. 2018 ஆம் ஆண்டு, அத்தேசம், எல்லா கடன் தொகைகளையும் ரத்து செய்தது.

இவ்வாறு, கடனை ரத்து செய்தது, பிழைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்த சில குடும்பங்கள் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் சொத்துக்கள் அல்லது கூலியின் மீதிருந்த கடன் சுமை நீக்கப்பட்டதால், அவர்களின் அனுதின சாப்பாட்டிற்கு ஒரு வழி பிறந்தது. இத்தகைய கஷ்டங்களினாலேயே, தேவனாகிய கர்த்தர், ஏழாம் வருஷத்தின் முடிவில் கடன் யாவையும் விடுதலை பண்ணும் படி சொல்கின்றார். (உபா. 15:2). கடன் சுமையால் ஜனங்கள் குறுகிப் போவதை தேவன் விரும்பவில்லை.

தன் ஜனங்களில் சிறுமைப் பட்டிருந்த ஒருவனுக்குப் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், அவனிடத்தில் வட்டி  வாங்க வேண்டாம் என (யாத்திராகமம் 22:25) கூறுகின்றது. தனக்கு சரியான விளைச்சல் இல்லாததினால், கஷ்டத்தை அநுபவிக்கின்ற தன்னுடைய அயலானுக்கு உதவும் படி கொடுக்கின்ற கடன் தொகையில், லாபம்  சம்பாதிக்க எண்ண வேண்டாம். ஒவ்வொரு ஏழு ஆண்டுகளிலும் கடனை முற்றிலும் விட்டு விடுவாயாக, எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும் படியாக இப்படிச் செய்ய வேண்டும் என்கின்றார். (உபா. 15:4).

இந்நாட்களில், இயேசுவின் விசுவாசிகள் கூட இந்த கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. கடன் நிமித்தம் போராடிக்கொண்டிருப்பவர்களும் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து  வாழும்படி, அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்யும் படி, தேவன்  அவ்வப்போது நம்மை தூண்டிக்கொண்டேயிருக்கின்றார். நாம் இத்தகைய கருணையையும், தாராள குணத்தையும் மற்றவர்களுக்கு காண்பிக்கும் போது, நாமும் தேவனுடைய குணத்தைப் பிரதிபலித்து, மற்றவர்களுக்கு நம்பிக்கையைக்  கொடுப்பவர்களாகின்றோம்.