முப்பத்திரண்டு ஆண்டுகளாக பயம், ஒரு மனிதனுடைய வாழ்வை ஆண்டு கொண்டது. தான் செய்த ஒரு குற்றத்தினிமித்தம் பயந்து, தன்னுடைய சகோதரியின் பண்ணை வீட்டிலேயே, ஒருவரையும் சந்திக்காமலும், வேறிடம் எங்கும் செல்லாமலும் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன், தன்னுடைய தாயாரின் அடக்க வைபவத்தையும் தவிர்த்தான். ஆனால் தன்னுடைய அறுபத்திநான்காம் வயதில், தன் மீது எந்த குற்றச் சாட்டும் பதியப்படவில்லை என்பதை அறிந்தான், அவனும்  இயல்பு வாழ்வுக்குத் திரும்பினான். அவனுக்குத் தண்டனையைக்குறித்த ஓர் அச்சம் இருந்தது உண்மைதான், ஆனால், அந்த பயம் அவனை கட்டுப்படுத்தும்படி, தன்னை ஒப்புக்கொடுத்திருந்தான்.

பெலிஸ்தனான கோலியாத், ஏலா பள்ளத்தாக்கில் இஸ்ரவேலரிடம் சவால் விட்ட போது, அவர்களும் இத்தகைய பயத்தினால் இழுக்கப்பட்டனர். அவர்களுக்கிருந்த பயம் உண்மையானது தான். அவர்களின் எதிரியான கோலியாத் ஒன்பது அடி, ஒன்பது அங்குலம்  உயரம் இருந்தான், அவனுடைய போர் ஆயுதங்கள் மட்டும் 125 பவுண்டு எடையுள்ளனவாயிருந்தன (1 சாமு. 17:4-5). நாற்பது நாட்கள், காலையும், மாலையும், இஸ்ரவேலரின் படைகளைத் தன்னோடு யுத்தம் செய்ய வருமாறு சவால் விட்டான். ஆனால், அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய  ஒருவனும் முன்வரவில்லை.  இஸ்ரவேலரின் சேனைகளின் அணிவகுப்பண்டை தாவீது வரும் வரை, ஒருவனும் அவனை எதிர் கொள்ள முன்வரவில்லை. தாவீது கோலியாத்தைப் பார்த்தான், அவனுடைய இகழ்ச்சி வார்த்தைகளைக் கேட்டான், அவனை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான்.

இஸ்ரவேலர் அனைவரும், கோலியாத்தை தாங்கள் எதிர்த்து நிற்க கூடாதபடி, மிகப் பெரியவனாகப் பார்த்தனர், சிறிய பையனாகிய தாவீதோ, அவனை, தனக்குள் இருக்கும் தேவனைக் காட்டிலும் மிகச் சிறியவனாகக் கண்டான். அவன், “யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார்’’ என்றான் (வச. 47).

நம்மையும் பயம் ஆட்கொள்ளும் போது, தாவீதைப் போன்று நம்முடைய கண்களை தேவனுக்கு நேராகத் திருப்பி, நம்முடைய பிரச்சனையைக் குறித்த சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.  நமக்கிருக்கும் அச்சுறுத்தல் உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நமக்கெதிராக இருக்கும் பிரச்சனையைக் காட்டிலும், நம்மோடிருக்கும் தேவன், நமக்காக யுத்தம் செய்யும் தேவன், பெரியவர்.