நம்முடைய ஆசிர்வாதங்களும், அவருடைய அன்பும்
2015 ஆம் ஆண்டு ஒரு பெண், காலம் சென்ற தன் கணவனுடைய கம்ப்யூட்டரை மறு சுழற்சி மையத்திற்கு கொடுத்தாள். அந்த கம்ப்யூட்டர் 1976ல் உருவாக்கப்பட்டது. ஆனால், அது எப்பொழுது செய்யப்பட்டது என்பதைவிட, அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதே முக்கியம். அது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரான ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் தன்னுடைய கையால் உருவாக்கிய 200 கம்ப்யூட்டர்களில் ஒன்று. அதன் மதிப்பு 0.25 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது ! சில பொருட்களின் உண்மையான மதிப்பு அதை உருவாக்கியவராலேயே கிடைக்கின்றது.
தேவன் நம்மை அவருடைய சாயலால் உருவாக்கியதால் நாம் அவருக்கு அதிக விலையேறப் பெற்றவர்கள் (ஆதி. 1:27). சங்கீதம் 136ல் ஆதி இஸ்ரவேலர்களின் சில முக்கிய நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் விடுபட்ட விதம், (வச. 11-12), வனாந்தரப் பயணம் (வச. 16), கானான் தேசத்தைச் சுதந்தரித்தல் (வச. 21-22) என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேல் சரித்திரத்தின் நிகழ்வுகள், ஒவ்வொரு முறை குறிப்பிடப்படும் போதும், அதனோடு “அவர் கிருபை என்றுமுள்ளது” என்ற பல்லவி திரும்பத் திரும்ப வருகின்றது. இந்தப் பல்லவி, இஸ்ரவேலரின் சரித்திர நிகழ்வுகள் தற்செயலாய் நடந்தவையல்ல என்பதை அவர்களுக்கு நினைவு படுத்துகின்றது. ஒவ்வொரு நிகழ்வும், தேவன் திட்டமிட்டு செயல் படுத்துவதையும், தான் படைத்த ஜனங்களின் மேல் அவர் வைத்துள்ள மாறாத அன்பினையும் காட்டுகிறது.
என்னுடைய வாழ்வில் தேவன் கிரியை செய்கிறதையும், அவருடைய அன்பின் வழிநடத்துதலையும், நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும், பரத்திலிருந்து உண்டாகி, என்னை உருவாக்கி, என்னை நேசிக்கின்ற சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. (யாக். 1:17) என்பதையும் நான் நினைவுகூற அடிக்கடி தவறி விடுகிறேன். நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு ஆசிர்வாதமும், நம் மீது மாறாத அன்பு கொண்டுள்ள தேவனாலேயே வருகின்றது என்பதை புரிந்துகொள்ள நீயும், நானும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தேவனுடைய விருப்பதின் படியே ஆகட்டும்
நாங்கள் நியூயார்க் செல்லும் வழியில் ஒமகசே என்ற ஜப்பானிய உணவகத்திற்குச் சென்றிருந்த போது, நாட்டே, ஷெர்லின் ஆகிய இருவரும் அதனை மிகவும் ரசித்தனர். ஒமகசே என்பதற்கு ” உன்னுடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன் “என்று அர்த்தம். இவ்வகை உணவகங்களுக்கு வருபவர்களின் உணவை சமையற்காரரே தீர்மானிப்பார். இந்த வகை உணவகத்திற்கு முதல் முறையாக வந்திருந்த போதிலும், இதில் தவறு ஏற்பட வாய்ப்பு இருந்த போதிலும், அந்த சமையற்காரர் தேர்ந்தெடுத்து தயாரித்த உணவை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர்.
இந்த கருத்தினைப் போன்று, நாம் தேவனிடம் எடுத்துச் செல்லும் ஜெபங்களை “நான் உம்முடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்” என்று கூறுவது சிறந்ததாகும். இயேசு அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிப்பதைக் கண்ட சீடர்கள் (லூக். 5:16) இயேசுவிடம் தங்களுக்கும் ஜெபிக்க கற்றுத் தருமாறு கேட்கின்றனர். இயேசு, அவர்களின் அனுதின தேவைகளுக்காகவும், மன்னிப்பிற்காகவும், சோதனையில் விழாதபடி காக்கவும் ஜெபிக்க கற்பிக்கின்றார். இந்த ஜெபத்தின் மற்றொரு பகுதி நம்மை முற்றிலுமாக தேவனுக்கு அர்ப்பணிக்கும் படி கூறுகிறது. “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும் படி கற்பித்தார்.
நம்முடைய தேவைகளை நாம் ஜெபத்தில் தேவனிடம் ஊற்றிவிட வேண்டும். அவர் நம்முடைய இருதயத்தின் விருப்பங்களைக் கேட்க விரும்புகின்றார், அவற்றைக் கொடுப்பதில் அதிக மகிழ்ச்சியடைகின்றார். ஆனால் நாம் குறைவுள்ள மனிதர்கள், நமக்கு எது நல்லது என்பது தெரியாது எனவே, தாழ்மையான சிந்தையோடு, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே சாலச் சிறந்தது. அவர் நம்பத்தகுந்தவர், அவர் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நமக்கு தருவார் என்ற நம்பிக்கையோடு, ஜெபத்திற்கான பதிலையும் அவரிடமே விட்டு விடுவோம்.
பரதீசில் எரிமலையின் அக்கினிக் குழம்பு
வெப்ப மண்டல பசுமை காடுகள் வழியே, மெதுவாக நகர்ந்து வரும் நெருப்பு குழம்பு ஏற்படுத்திய ஓசை, அந்த அமைதியான சூழலில் கேட்டுக்கொண்டிருந்தது. அருகில் குடியிருப்பவர்களின் முகம் விறைத்துப் போனாலும், ஆச்சரியப்பட்டனர். அநேக நாட்களில் இவ்விடம் “பரதீசு” என்றே அழைக்கப்பட்டாலும், தற்சமயம், ஹவாய் தீவிலுள்ள பூனா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலபிளவு, தேவன் இந்த தீவுகளை கட்டுக்கடங்காத எரிமலையின் வல்லமையோடு உண்டாக்கியுள்ளார் என்பதைக் காட்டுகின்றது.
ஆதி இஸ்ரவேலர்களும் கட்டுப்படுத்த முடியாத ஒரு வல்லமையைச் சந்தித்தனர். தாவீது அரசன் உடன்படிக்கைப் பெட்டியை மீண்டும் கைப்பற்றிய போது (2 சாமு. 6:1-4), ஒரு பெரிய ஆர்ப்பரிப்பு எழும்புகின்றது (வச. 5). உடன்படிக்கை பெட்டி சரிந்து விடாமல் பிடிக்கும்படி கையை நீட்டின ஒரு மனிதன் செத்த போது, அவர்களின் மகிழ்ச்சி நின்று போனது (வச. 6-7).
ஒரு எரிமலையைப் போன்று தேவனும் எப்பொழுது, எப்படி செயல் படுவார் என்பதை முன்னறிய முடியாதவர் என்று நாம் நினைக்கத் தோன்றும்.,உருவாக்கிய அவர் அழிக்கவும் செய்வார் எனவும் நினைக்கத்தோன்றும். ஆனால் தேவன் தன்னை ஆராதிப்பதற்கு என்று உருவாகிக்கியவற்றை எப்படி கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். (எண். 4 பார்க்கவும்) இஸ்ரவேலர் தேவன் அருகில் வர உரிமையைப் பெற்றிருந்தும், அவருடைய பிரசன்னத்தின் மகிமை தகுதியற்ற அவர்களால் மேற்கொள்ள முடியாததாயிருக்கின்றது.
எபிரெயர் 12, பற்றியெரிகிற ஒரு மலையைப் பற்றி நினைவு படுத்துகின்றது. அங்கு தேவன் மோசேக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அது காண்போரை நடுங்கச் செய்தது (வச. 18-21). எபிரெயரை ஆக்கியோன், இந்த காட்சிக்கு மாறாக “நீங்கள் புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கு… வந்து சேர்ந்தீர்கள்” (வச. 22-24) என்கின்றார். அருகில் நெருங்க முடியாத, ஆனால் அன்புள்ள தந்தையிடம் நாம் நெருங்கி வரக்கூடிய வழியை, அவருடைய குமாரனாகிய இயேசு நமக்கு உருவாக்கிக் கொடுத்தார்.
நிலைத்திருக்கும் ஜெபங்கள்
“ஜெபங்கள் சாவில்லாதவை” என்பவை இ.எம். பவுண்ட்ஸ் (1835-1913) என்பவர் ஜெபத்தை குறித்து எழுதிய தனிச்சிறப்பு வாய்ந்த, பல தலைமுறையினரின் கவனத்தையீர்த்த வார்த்தைகள். என்றும் நிலைத்திருக்கும் வல்லமை பெற்ற நம்முடைய ஜெபங்களைப் பற்றி அவர், “ ஜெபத்தை உச்சரித்த உதடுகளும் சாவில் மூடப்பட்டு விடலாம், ஜெபத்தை உணர்ந்த இருதயமும் துடிப்பை நிறுத்தி விடலாம், ஆனால், ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளவைகளாய் நிற்கின்றன. அவை தேவனுடைய இருதயத்தில் இடம் பெறுகின்றன. ஜெபங்கள் அவற்றை உச்சரித்தவர்களின் வாழ் நாட்களையும், அவர்களின் தலைமுறையையும், ஒரு யுகத்தையும், இந்த உலகையும் விட தாண்டி வாழ்பவை” என்று எழுதியுள்ளார்.
உன்னுடைய துன்பங்கள், வேதனைகள், துயரங்களின் மத்தியில் நீ ஏறெடுத்த ஜெபங்கள் தேவனை அடைந்தனவா என்று எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா? பவுண்ட்ஸ்ஸின் வார்த்தைகளின் உட்கருத்தும், வெளிப்படுத்தல் 8:1-5ல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளும் நம்முடைய ஜெபங்களின் முக்கியத்துவத்தை நினைப்பூட்டுகின்றன. பரலோகத்தில் தேவன் வீற்றிருக்கும் சிங்காசனம், (7:17) உள்ளது, அந்த இடம் தான் இவ்வுலகத்தை கட்டுப்படுத்தும் அறை. தேவனுக்கு முன்பாக அவருக்கு பணி செய்யும் தூதர்கள் நிற்கின்றார்கள் (வச. 2) ஒரு தூதன் பழைய ஏற்பாட்டு ஆசாரியரைப் போன்று, தூபம் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துக்கொண்டு, சகல பரிசுத்தவான்களின் ஜெபங்களோடு தூபவர்க்கத்தை செலுத்துகின்றான்.(வச. 3,4) புவியில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் பரலோகத்தின் தேவனிடம் கொடுக்கப்படுகின்ற இக்காட்சி, நம் கண்களைத் திறந்து, நமக்கு ஊக்கத்தை தருகிறதல்லவா? நம்முடைய ஜெபங்கள் வழியில் தொலைந்திருக்கலாம் அல்லது மறக்கப்பட்டிருக்கலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாம் இங்கே பார்க்கும் காட்சி நமக்கு ஆறுதலாகவும், நாம் ஜெபத்தில் உறுதியாய் இருக்கவும் நம்மை கட்டாயப்படுத்துகின்றது. நம்முடைய ஜெபங்கள் தேவனுக்கு விலையேறப் பெற்றவை!