2018 ல் பார்னா குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவு, அநேக அமெரிக்கர்கள், தேவனைப் பற்றி பேச விரும்பவில்லை எனத் தெரிவிக்கிறது. ஏழு சதவீதத்தினரே, ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து அடிக்கடி பேசுகின்றனர். இயேசுவின் விசுவாசிகளாக, வாழ்ந்து காட்டும் இந்த அமெரிக்கர்கள், மற்றவர்களை விட அதிக வித்தியாசமானவர்கள் அல்ல. பதின்மூன்று சதவீத அமெரிக்கர்கள் ஒழுங்காக ஆலயத்திற்குச் செல்பவர்கள், இவர்கள், ஆவிக்குரிய கருத்து உரையாடல்களை வாரம் ஒரு முறை வைத்துக் கொள்கின்றனர்.

ஆவிக்குரிய சம்பாஷணைகள் குறைந்து வருகிறது என்ற செய்தி, நமக்கு புதியதல்ல. தேவனைக் குறித்து பேசுவது ஆபத்தாயுள்ளது. குறுகிய கண்ணோட்டமுள்ள அரசியல் கட்சிகளாலும், கருத்து வேறுபாடுகள், உறவில் பிளவுகளை ஏற்படுத்துவதாலும், ஆவிக்குரிய உரையாடல்கள், நம் வாழ்வில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை உணர்த்துவதாலும், இவ்வகை உரையாடல்கள் ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகின்றன.

உபாகமம் புத்தகத்தில், தேவனைப் பற்றிய உரையாடலை, தங்கள் அனுதின வாழ்வில் இணைந்த ஒன்றாக கருத வேண்டும் என அவருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய பிள்ளைகள், அவருடைய வார்த்தைகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், அடிக்கடி பார்க்கக் கூடிய இடங்களிலே எழுதி வைக்க வேண்டும். அவருடைய கட்டளைகளைக் குறித்து பிள்ளைகளிடம் வாழ்நாளெல்லாம் பேச வேண்டும். “நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், படுத்துக்கொள்ளும் போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்து பேசுவீர்களாக” (11:20).

தேவன் நம்மை உரையாடலுக்கு அழைக்கிறார். முயற்சி செய்து பார். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு, உன்னுடைய சிறிய வீண் பேச்சுக்களை, ஆழ்ந்த கருத்துள்ள, உரையாடல்களாக்கிப் பார். நாம் தேவனுடைய வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை செயல் படுத்தும் போது, தேவன் நம்முடைய சமுதாயத்தை ஆசிர்வதிப்பார்.