ஆப்ரிக்கா தேசத்தின் வெளிமான்கள் திறந்த புல் வெளிகளில் ஓய்வு எடுக்கும் போது, தங்கள் உள்ளுணர்வு தூண்டுதலின் படி “எச்சரிப்பு வட்டங்களை” ஏற்படுத்திக் கொள்கின்றன. அவை, கூட்டமாகச் சேர்ந்து, ஒவ்வொன்றும் வெளிநோக்கிய திசையில், சற்றே மாறுபட்ட கோணத்தில் படுத்திருக்கும். இதன் மூலம் அவைகளால் 360 டிகிரி கோணத்தில் சுற்றுப்புறம் முழுவதையும் கண்காணித்து, வருகின்ற ஆபத்துகளைக் குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்க முடியும்.
தங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்ள நினைக்காமல், தங்களுடைய குழுவிலுள்ள அனைவரின் மீதும் கரிசனை கொள்கின்றன. இயேசுவைப் பின் பற்றுபவர்களுக்கு தேவன் தரும் ஆலோசனையும் இதுவே. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடி வருதலை… விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்” (எபி. 10:24-25).
எபிரெயர் நிருபத்தை எழுதியவர், கிறிஸ்தவ வாழ்வு தனிமையானதல்ல என்று விளக்குகிறார். இணைந்து வாழும் போது நாம் வலிமை பெறுகிறோம், ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல முடிகிறது (வச. 25). “எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்ய திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2 கொரி. 1:4) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள், ஏனெனில், “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்” (1பேது. 5:8).
நாம் ஒருவரையொருவர் தாங்குவதன் நோக்கம் தப்பிப் பிழைப்பதற்கு மட்டுமல்ல. நம்மை இயேசுவைப் போல மற்றுவதற்கும், இவ்வுலகில், அன்பினால் தேவனுக்குப் பணிசெய்யவும், அவருடைய ராஜியத்தின் வருகையை நம்பிக்கையோடு, விசுவாசிகளோடு இணைந்து எதிர்பார்க்கவுமே. ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவது, நம் அனைவருக்குமே தேவை. நாம் அன்பினால் மற்றவர்களுக்கு உதவ, தேவன் நமக்கு உதவுவார். நாம் இணைந்து தேவனை நெருங்கி வாழுவோம்.
மற்ற விசுவாசிகளிடமிருந்து, எப்படி உதவியையும், பெலனையும் பெற்றுக்கொள்கின்றாய்? தேவனுடைய அன்பினால் இன்று யாரை ஊக்கப்படுத்தப்போகின்றாய்?
அன்புள்ள தேவனே, நீர் எங்களிடம் உண்மையாக அன்புகூருகின்றபடியால் உமக்கு நன்றி கூறுகிறேன். மற்றவர்களும் உம்மை நோக்கிப் பார்க்கும் படி, நான் அவர்களை ஊக்கப்படுத்த எங்களுக்கு உதவியருளும்.