2015 ஆம் ஆண்டு ஒரு பெண், காலம் சென்ற தன் கணவனுடைய கம்ப்யூட்டரை மறு சுழற்சி மையத்திற்கு கொடுத்தாள். அந்த கம்ப்யூட்டர் 1976ல் உருவாக்கப்பட்டது. ஆனால், அது எப்பொழுது செய்யப்பட்டது என்பதைவிட, அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதே முக்கியம். அது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரான ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் தன்னுடைய கையால் உருவாக்கிய 200 கம்ப்யூட்டர்களில் ஒன்று. அதன் மதிப்பு 0.25 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது ! சில பொருட்களின் உண்மையான மதிப்பு அதை உருவாக்கியவராலேயே கிடைக்கின்றது.
தேவன் நம்மை அவருடைய சாயலால் உருவாக்கியதால் நாம் அவருக்கு அதிக விலையேறப் பெற்றவர்கள் (ஆதி. 1:27). சங்கீதம் 136ல் ஆதி இஸ்ரவேலர்களின் சில முக்கிய நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் விடுபட்ட விதம், (வச. 11-12), வனாந்தரப் பயணம் (வச. 16), கானான் தேசத்தைச் சுதந்தரித்தல் (வச. 21-22) என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேல் சரித்திரத்தின் நிகழ்வுகள், ஒவ்வொரு முறை குறிப்பிடப்படும் போதும், அதனோடு “அவர் கிருபை என்றுமுள்ளது” என்ற பல்லவி திரும்பத் திரும்ப வருகின்றது. இந்தப் பல்லவி, இஸ்ரவேலரின் சரித்திர நிகழ்வுகள் தற்செயலாய் நடந்தவையல்ல என்பதை அவர்களுக்கு நினைவு படுத்துகின்றது. ஒவ்வொரு நிகழ்வும், தேவன் திட்டமிட்டு செயல் படுத்துவதையும், தான் படைத்த ஜனங்களின் மேல் அவர் வைத்துள்ள மாறாத அன்பினையும் காட்டுகிறது.
என்னுடைய வாழ்வில் தேவன் கிரியை செய்கிறதையும், அவருடைய அன்பின் வழிநடத்துதலையும், நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும், பரத்திலிருந்து உண்டாகி, என்னை உருவாக்கி, என்னை நேசிக்கின்ற சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. (யாக். 1:17) என்பதையும் நான் நினைவுகூற அடிக்கடி தவறி விடுகிறேன். நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு ஆசிர்வாதமும், நம் மீது மாறாத அன்பு கொண்டுள்ள தேவனாலேயே வருகின்றது என்பதை புரிந்துகொள்ள நீயும், நானும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் வாழ்வின் ஆசிர்வாதங்களுக்கு ஊற்றானவரை எப்படி நாம் நினைவுகூர்வது? இதற்கு தடையாக இருப்பது என்ன?
பரலோகத் தந்தையே, என் வாழ்வில் வரும் ஒவ்வொரு ஆசிர்வாதமும் உம்மாலேயே வருகின்றது என்பதை நான் மறவாதிருக்க எனக்கு உதவியருளும்.