லண்டன் பட்டணத்திலுள்ள டேட் நவீன அருங்காட்சியகத்தை நான் பார்வையிட்ட போது, ஒரு வித்தியாசமான கலை என் கண்களைக் கவர்ந்தது. இதனை பிரேஸில் நாட்டைச் சேர்ந்த சில்டோ மெரெல்ஸ் என்பவர் உருவாக்கினார். நூற்றுக்கணக்கான பழைய ரேடியோக்களால் உருவாக்கப்பட்ட இராட்சத கோபுரம் அது. ஒவ்வொரு ரேடியோவும் வெவ்வேறு அலைவரிசையில் செயல் பட்டுக்கொண்டிருந்தது. மொத்தத்தில், யாராலும் புரிந்துகொள்ள முடியாத, விரும்பத்தகாத, குழப்பமான ஓசையை உருவாக்கிக் கொண்டிருந்தது. மெரெல்ஸ், இந்த கலை கோபுரத்தை பாபேல் என்றழைத்தார்.

தலைப்பு பொருத்தமானது தான். வானத்தைத் தொடும் அளவுக்கு, முதல் பாபேல் கோபுரத்தை கட்டுவதற்கு மனிதன் முயற்சித்தபோது, தேவன் அவர்கள் பாஷையை தாறுமாறாக்கி, அதை தடைபண்ணிப் போட்டார் (ஆதி. 11:1-9). ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாத படியால், அவர்கள் பூமிமீதெங்கும் சிதறிப்போனார்கள். பாஷையின் அடிப்படையில் மனிதகுலம் பிரிவடைந்தது. (வச. 10-26) அதிலிருந்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த கதையின் இரண்டாம் பகுதியில், பெந்தெகொஸ்தே நாளில், முதல் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட போது, அந்நாட்களில் எருசலேமிற்கு வந்திருந்த வெவ்வேறு ஜனங்களின் பாஷைகளில் தேவனைத் துதிக்கும் படி செய்தார் (அப். 2:1-12). இந்த அற்புதத்தின் மூலம், அங்கு கூடிவந்திருந்த வெவ்வேறு நாட்டினரும், வெவ்வேறு பாஷையினரும் அந்த செய்தியை கேட்க முடிந்தது. அன்று பாபேலில் ஏற்பட்ட குழப்பம், இங்கு அதற்கு மாறாய் நடந்தது.

இன, மற்றும் கலாச்சார அடிப்படையில் பிரிந்து காணப்படும் இவ்வுலகிற்கு இது ஒரு நல்ல செய்தி. இயேசு கிறிஸ்துவின் மூலம், தேவன் சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்த ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குகின்றார்.(வெளிப்படுத்தல் 7:9) நான் அந்த டேட் நவீன அருங்காட்சியகத்தில் நின்று கொண்டிருக்கையில், திடீரென அனைத்து ரேடியோக்களும் ஒரே அலைவரிசையை எடுத்து, அந்த அறையிலுள்ள அனைவரும் கேட்குமாறு, ‘‘அமேஸிங் கிரேஸ், ஹவ் சுவீட் த சவுண்ட்” என்ற பாடலைப் பாடினால் எப்படி இருக்கும்!