வடக்கு கரோலினாவில் வில்மிங்க்டன் என்ற இடத்தை பிளாரன்ஸ் என்ற புயல், பேரழிவை ஏற்படுத்தும் வலிமையோடு தாக்கிய போது, என்னுடைய மகள் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். புயலின் வலிமை தணிந்து விடும் என்று எண்ணி, கடைசி நேரம் வரை, அவள் தாமதித்துக் கொண்டேயிருந்தாள். இப்பொழுது வேக வேகமாய் சில முக்கிய பொருட்களை எடுக்க எண்ணி, எடுக்கலாம் எனத் திணறிக் கொண்டு, “வீட்டை விட்டு வெளியேறுவது இத்தனை கடினமானது என்று நான் நினைக்கவில்லை, நான் மீண்டும் இங்கு வரும் போது ஏதாகிலும் மீதி இருக்குமா என்றும் தெரியவில்லை” என்றாள்.

நம் வாழ்விலும் அநேக வழிகளில் புயல் நம்மைத் தாக்குகின்றது சூறாவளி, சுழல் காற்று, நிலநடுக்கம், வெள்ளம் என எதிர் பாராத பிரச்சனைகள் நம்முடைய திருமண வாழ்வை, குழந்தைகளை, உடல் நலத்தை, அல்லது பொருளாதாரத்தைத் தாக்கலாம். நாம் மிக விலையேறப் பெற்றதாகக் கருதுபவை, ஒரு நொடிப் பொழுதில் மறைந்து போகலாம்.

இத்தனை புயலின் மத்தியிலும், வேதாகமம் நமக்கொரு பாதுகாப்பான இடத்தைக் காட்டுகின்றது.”தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துனையுமானவர். ஆகையால் பூமி நிலை மாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்,… நாம் பயப்படோம்” (சங். 46:1-3).

இந்த சங்கீதத்தை எழுதியவரின் முன்னோர்கள், ஆரம்பத்தில் தேவனுக்கு உண்மையாய் பணிசெய்தனர், பின்னர், கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணினதால் பூமி அதிர்ச்சியில் அழிந்து போயினர் (எண். 26:9-11). இதன் விளைவாக, அவர்கள் தாழ்மையையும், தேவனுடைய மகத்துவத்தையும், அவருடைய இரக்கத்தையும், நம்மை மீட்கும் அவருடைய அன்பையும் பற்றி புரிந்து கொண்டனர்.

துன்பங்கள் வரும், ஆனால் நம் தேவன் அவை எல்லாவற்றையும் விட நீடித்திருப்பவர். அவரிடம் ஓடி, அடைக்கலம் புகுவோர் அவரை யாராலும் அசைக்க முடியாது என்பதைக் கண்டு கொள்வர். என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்பின் கரத்தினுள்ளே சமாதானமாக தங்கும் இடத்தை நாம் கண்டு கொள்வோம்.