என்னுடைய ஆலயத்தினர் மிகவும் வேதனையான இழப்பைச் சந்தித்தனர். எங்களுடைய ஆலயத்தின், திறமை வாய்ந்த போதகரான பால் என்பவர் அவரது முப்பத்தொன்றாம் வயதில் ஒரு படகு விபத்தில் மரித்துப் போனார். பாலும் அவருடைய மனைவி டுரோண்டாவும் துன்பங்களுக்குத் தூரமானவர்களல்ல. அவர்கள் தங்களுடைய அநேகக் குழந்தைகளை, அவை பிறக்குமுன்னரே இழந்திருக்கின்றனர். இப்பொழுது அந்த சிறிய கல்லறைகளுக்கருகில் மற்றுமொரு கல்லறை. இந்தக் குடும்பம் அநுபவிக்கின்ற உயிரிழப்பு அவர்களை நேசித்த அநேகருக்கு ஒரு பேரிடியாக அமைந்தது.
குடும்பத்தின் துன்பங்களையும், தனிப்பட்ட துயரங்களையும் தாவீது அநுபவியாதவனல்ல. தன்னுடைய மகன் அப்சலோமின் எதிர்ப்புகளால் தாவீது நிலை குலைந்து போனான். இதனை சங்கீதம் 3ல் காண்கின்றோம். தானிருக்கும் இடத்திலேயே தங்கியிருந்து சண்டையிடுவதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டையும், ராஜ்யபாரத்தையும் விட்டு விட்டு (2 சாமு. 15:13-23) ஓடிப் போகின்றான். அநேகர், அவனை தேவனால் கைவிடப்பட்டவன் (சங். 3:2) என்று கூறினாலும் தேவன் அவனைப் பாதுகாப்பவராக இருப்பதை அறிந்திருந்தான். (வச. 3). அவன் தேவனை நோக்கிக் கூப்பிடுகின்றான். (வச. 4) அதேபோன்று தான், டுரோண்டாவும் கூப்பிடுகின்றாள். தன்னுடைய துயரங்களின் மத்தியில், நூற்றுக் கணக்கானோர் அவளுடைய கணவனின் நினைவாகக் கூடியிருந்த போது அவள் தன்னுடைய மென்மையான, அமைதியான குரலில் தான் தேவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்திப் பாடினாள்.
மருத்துவர்களின் கணிப்பு நம்மை ஊக்கமிழக்கச் செய்வதாயிருந்தாலும், நம்முடைய பொருளாதார நிலையின் அழுத்தம் குறையாத போதும், உறவுகளைச் சரி செய்ய எடுக்கும் முயற்சி தோல்வியுற்றாலும் நமக்கு அருமையானவர்களைச் சாவு கொண்டு சென்றாலும், “ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்” (வச. 3) என்று கூறும்படி நாமும் பெலப் படுவோமாக.
சோதனை உன்னை மேற்கொள்ளுமாற்போல தோன்றிய வேளையில் நீ எவ்வாறு செயல் பட்டாய்? தேவன் உனக்கு கேடகமாயிருந்து எவ்வாறு உனக்கு உதவினார்.?
பரலோகத் தந்தையே, ஆறுதலற்ற இவ்வுலகில், நான் உம்மில் ஆறுதலைக் கண்டடைய எனக்கு உதவியருளும்.