“நீ வேறு இடத்திற்கு பரிமாற்று மாணவனாகப் போகிறாய்”. நான் பதினேழு வயதாயிருந்த போது, ஜெர்மனி தேசத்திற்குச் சென்று படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன் எனக் கேட்ட போது புல்லரித்துப் போனேன்.  நான் அங்கு செல்வதற்கு இன்னமும் மூன்றே மாதங்களிருந்தன. நான் இன்னமும் ஜெர்மானிய மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை. அந்நாளிலிருந்து நான் ஜெர்மானிய மொழியைக் கற்க ஆரம்பித்தேன். அதிக மணி நேரங்களைப் படிக்க செலவழித்தேன். மனப் பாடம் செய்தேன், சில வார்த்தைகளை என் உள்ளங்கைகளில் எழுதி வைத்து மனனம் செய்தேன்.

பல மாதங்களுக்குப் பின், நான் ஜெர்மனி தேசத்தில் என்னுடைய வகுப்பறையில் அமர்ந்திருந்தேன். நான் மிகவும் சோர்வுற்றிருந்தேன், ஏனெனில் நான் இன்னமும் அம்மொழியை நன்கு தெரிந்து கொள்ளவில்லை. அந்நாளில் ஓர் ஆசிரியர், எனக்கு ஓர் ஆலோசனையைக் கொடுத்தார். “ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதென்பது மணல் குன்றின் மேலேறுவதற்குச் சமம். சில வேளைகளில் நீ கொஞ்சமும் ஏறாதது போலத் தோன்றும். ஆனால் நீ முயற்சி செய்து கொண்டேயிரு. உன்னால் உச்சியை அடைய முடியும்” என்றார்.

நான் இந்த ஆலோசனையின் உட்கருத்தை சிந்தித்துப் பார்ப்பேன். இயேசுவின் சீடனாக வளர்வதென்பது என்ன என்று சிந்திக்கும் போது, அப்போஸ்தலனாகிய பவுல், “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாக இருக்கக் கற்றுக் கொண்டேன்” என்கின்றார். பவுலுக்கும் இந்தச் சமாதானம் ஒரே நாளில் கிடைத்து விடவில்லை. அவர் இந்த  நிலைக்கு வளர்ந்து வந்திருக்கின்றார். அவர் தன்னுடைய வளர்ச்சியின் இரகசியத்தைப் பகிர்ந்து கொள்கின்றார். “என்னைப் பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினாலே  எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.” என்கின்றார் (பிலி. 4:11-13).

வாழ்வில் அநேக சவால்களுள்ளன. “நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33) என்பவரிடம் நாம் திரும்பும் போது, அவர் நம்மையும் வெற்றிப் பாதையில் வழி நடத்திச் செல்ல உண்மையுள்ளவராயிருக்கிறாரெனக் கண்டு கொள்வோம். நாம் அவரோடு கூட நடப்போமாகில் அவர் நமக்குச் சமாதானத்தைத் தந்து அவர் மீது நம்பிக்கையோடிருக்கச் செய்கின்றார். நம் பயணத்தைத் தொடர தேவையான பெலனையும் தருகின்றார்.