ஆவிக்குரிய களைப்பு?
ஜாக் எஸ்வின் தன்னுடைய புத்தகமான 'குறையுள்ள போதகர்" என்ற நூலில், 'நாம் உணர்வுப்பூர்வமாக, ஒரு நாள் வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விடுகிறோம்" என்று எழுதியுள்ளார். பொதுவாக இந்நூலில் அவர், போதகர்கள் படும் பாடுகளையும், சுமக்கும் பாரங்களையும் சொல்லியிருந்தாலும், இது நம்மெல்லாருக்கும் உரிய உண்மையாகும். பாரமான உணர்வுகள், பொறுப்புகள் போன்றவைகள் சரீரப்பிரகாரமாக, மனரீதியாக மற்றும் ஆவிக்குரிய வாழ்விலும் நம்மைக் களைப்படையச் செய்கிறது. நாம் தூங்குவதை மட்டுமே இச்சூழ்நிலையில் விரும்புகிறோம்.
1 இராஜாக்கள் 19ஆம் அதிகாரத்தில் எலியா தீர்க்கதரிசி எப்பக்கமும் நெருக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் தன்னைக் காணுகிறார். யேசபேல் ராணி அவரை கொன்றுவிடுவதாக மிரட்டினதை நாம் வாசிக்கிறோம் (வச. 1-2). ஏனெனில், எலியா பாகால் தீர்க்கதரிசிகளில் 450 பேர்களைக் கொன்று போட்டதை அவள் கேள்விப்படுகிறாள் (வச. 18:16-40). இதனால் எலியா பயந்துபோய் வனாந்திரத்திற்கு ஓடிச்சென்று தன்னை எடுத்துக்கொள்ளும்படி ஆண்டவரிடம் ஜெபித்தார் (19:3-4). அவருடைய துக்கத்தில் அவர் படுத்துக்கொள்ளுகிறார். ஒரு தூதன் இரண்டு தரம் அவரைத் தட்டியெழுப்பி 'எழுந்திருந்து போஜனம் பண்ணு" என்று கூறுகிறார் (வச. 5,7). இரண்டாம் முறைக்கு அப்புறமாக எலியா தேவன் கொடுத்த ஆகாரத்தினால் பெலப்பட்டு, அந்த பெலத்தினால், '40 நாட்கள் மற்றும் 40 இரவுகள்" பயணம் செய்து ஒரு குகைக்கு வருகிறார் (8-9). அங்கே தேவன் அவரை சந்தித்து அவருக்கு உரிய வேலைகளை மறுபடியும் கொடுக்கிறார் (9-18). அதன் பிறகு, அவர் களைப்பு நீங்கி, தேவன் தனக்குக்கொடுத்த வேலையைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினார்.
சில சமயங்களில் நாம் கூட தேவனுக்குள் ஊக்கப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த நிலை ஒருவேளை நாம் சக விசுவாசிகளோடு பேசும்போதோ, ஒரு ஆராதனைப்பாடல் மூலமாகவோ அல்லது ஒரு ஜெபநேரத்திலோ, அல்லது தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினாலோ ஏற்படலாம்.
களைப்படைந்திருக்கிறீர்களா? உங்கள் பாரங்களைக் கர்த்தரிடம் கொடுத்து விட்டு உற்சாகமடையுங்கள் அவர் உங்கள் பாரங்களைச் சுமப்பார்.
உறவுகளுக்காக உருவாக்கப்பட்டது
'வாடகைக்கு குடும்பங்கள்" என்ற தொழிலானது அதிகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. ஏனெனில், தனிமையில் வாடும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிலர் இவ்வித சேவைகளை தங்களது தோற்றத்திற்காக பயன்படுத்தி, தாங்கள் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை உடையவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். சிலர் நடிகர்களை வாடகைக்கு அமர்த்தி மாயையான உறவுகளின் தோற்றத்தினை உருவாக்கிக் கொள்ளுகிறார்கள். இதன்மூலமாக அவர்கள் தாங்கள் விரும்புகிற உறவுகளைப்;பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
இந்த காரியமானது ஒரு அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறது : மனிதர்கள் உறவுகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். சிருஷ்டிப்பின் கதையை ஆதியாகமத்தில் நாம் வாசிக்கும்பொழுது, தேவன் தாம் உருவாக்கின ஒவ்வொரு காரியத்தையும் கண்டு அவைகள் நல்லவை என்று கண்டார் (1:31). ஆனால், தேவன் ஆதாமைக் குறித்து சொல்லும்போது, 'மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல" (2:18) என்று கூறுகிறார். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தேவை.
வேதாகமம், சாதாரணமாக நம்முடைய தேவை உறவுகள் என்றுமட்டும் கூறவில்லை. அது இவ்வித உறவுகளை நாம் எங்கே கண்டுபிடிக்கவேண்டும், அதுவும் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் உறவுகளை எவ்விதம் பெறமுடியும் என்றும் கூறுகிறது. இயேசுவானவர் தன் மரணத்தின் போது அவருடைய நண்பரான யோவானிடம் தன் தாயை அவருடைய தாயாக்கிக் கொள்ளும்படி கூறுகிறார். அவர்கள் குடும்பமாக தங்களை இணைத்துக்கொண்டு, இயேசுவானவர் போன பிறகும் வாழவேண்டும் என விரும்பினார் (யோவா. 19:26-27). பவுலும், மற்றவர்களை பெற்றவர்களாகவும், கூடப்பிறந்தவர்களாகவும் நினைக்க வேண்டும் எனக் கூறுகிறார் (1 தீமோ. 5:1-2). தேவனுடைய மீட்பின் பணியானது, 'தனிமையானவைர்களைக் குடும்பமாக்குவது" தான் என்பதை சங்கீதக்காரன் நமக்கு சொல்லுகிறார் (சங். 68:6). தேவன் இந்த காரியத்தினைச் செய்ய சிறந்த இடமாகத் திருச்சபையை உருவாக்கினார். உறவுகளை நமக்குக் கொடுத்து, தம் பிள்ளைகளை நமக்கு குடும்பமாக கொடுத்த தேவனுக்கு நன்றி.
ஒரு துக்கமான கதை
வலியோடு ஏற்படுகின்ற தீமையானது மூடி மறைக்கப்பட்ட நிலையிலிருந்து, வெளியரங்கமாயிருக்கிறது. அது ஆதிக்கத்திலிருக்கிற ஆண்மக்களின் பாலியல் வன்கொடுமை அநேக பெண்களை பாதித்த விஷயம் தான். ஒவ்வொரு முறை தலைப்புச் செய்தியாக இவைகளை வாசிக்கும்போது, இரண்டு ஆண்களின் பாலியல் கொடுமைகள் நிரூபிக்கப்பட்டதைக் கேட்டபொழுது என் இருதயம் துக்கத்தில் மூழ்கியது. திருச்சபைகளும் இவ்வித பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டுத்தான் இருக்கின்றன. தாவீது இராஜா, இவ்விதமான அவருடைய சொந்த பிரச்சனைகளை சந்தித்தார். ஒரு நாள் மாலை, ஒரு பெண் குளிப்பதை தாவீது கண்டார் (2 சாமு. 11:2). தாவீதுக்கு அவள் தேவைப்பட்டாள். பத்சேபாள், தாவீதின் உண்மையுள்ள வேலைக்காரனின் (உரியா) மனைவியாக இருந்த
போதிலும் தாவீது அவளை எடுத்துக்கொண்டான். பத்சேபாள் தான் கர்ப் பவதியானத்தைக் குறித்து தாவீதுக்கு சொல்லியனுப்பினபோது, தாவீது குழப்பமடைந்தார். இந்த இழிவான துரோகத்தினை, யோவாபை வைத்து உரியாவை போர்முனையில் கொலை செய்ய ஒழுங்கு செய்தான்.
பத்சேபாளுக்கும் உரியாவுக்கும் எதிரான தாவீதின் அதிகார துஷ்பிரயோகமானது மறைக்கப்படவில்லை. இது வெளிப்படையாகத் தெரிந்தது. நாம் பார்க்கும்படியாக சாமுவேல் இதைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தினார். நம்முடைய தீமைகளை நாம் சரியான முறையில் தீர்க்க வேண்டும்.
மேலும், இவ்வகையான கதைகளை நாம் கேட்கும்பொழுது, அவைகள் நம்மை நம்முடைய நாட்களில் ஏற்படும் துஷ்பிரயோகத்தைக் குறித்து நம்மை எச்சரிக்கை செய்யும். 'தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன்" (அப். 13:22) என்ற பெயர் பெற்ற தாவீது தன் செயல்களுக்கான கணக்கினை ஒப்புவிக்கக் கூடியவராகவும் இருந்தார். நாமும் ஜெபத்தோடு நம் தலைவர்கள் அதிகார துஷ்பிரயோகத்திற்கான கணக்கினை ஒப்படைக்கும்படி செய்யவேண்டும். தேவனுடைய கிருபையால், மீட்பானது கிடைக்கும். நாம் தொடர்ந்து வாசிக்கும்பொழுது, தாவீதின் உண்மையான மனந்திரும்புதலை சந்திக்கிறோம் (2 சாமு. 12:13). நல்லவேளை, கடின இருதயங்களெல்லாம் மரணத்திலிருந்து, ஜீவனுக்குத் திரும்பக்கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
லிங்கனின் பாக்கெட்
1865ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஃபோர்ட்; தியேட்டரில் சுடப்பட்ட இரவு, அவருடைய பாக்கெட்டில் கீழ்க்கண்டவைகள் இருந்தன. இரண்டு மூக்குக் கண்ணாடிகள், லென்ஸ்ஸை சுத்தம் செய்யும் திரவம், ஒரு பாக்கெட் கத்தி, ஒரு கடிகாரம், ஒரு கைக்குட்டை, ஒரு தோல் பர்ஸ் அதனுள்ளே 5 டாலர்கள். சங்கத்தின் பணம், 8 செய்தித்தாள்களின் கத்தரிப்புகள். அதோடு அவரையும் அவர் கொள்கைகளையும் பாராட்டுகிற பல பாராட்டுதல்களும் இருந்தன.
தலைவருடைய பாக்கெட்டிலுள்ள சங்கப்பணம் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால், அவரைக்குறித்த நல்ல செய்திகளைக் குறித்து நான் அறிந்தவனாதலால் சந்தேகப்படவில்லை. எல்லாருக்கும் உற்சாகப்படுத்துதல் அவசியம், அதுவும் ஆபிரகாம் லிங்கன் போன்ற பெருந்தலைவர்களுக்கும். ஒரு வேளை தன்னுடைய மரணத்திற்கு சற்று முன்பு அந்த பாராட்டு செய்திகளைத் தன் மனைவிக்கு அவர் வாசித்துக் காண்பித்திருக்கக் கூடும்.
யாருக்கெல்லாம் உற்சாகம் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எல்லாருக்குமே! உங்களைச் சுற்றிப்பாருங்கள். உங்கள் கண்ணுக்கெட்டும் வரை உள்ளவர்கள் அவர்கள் தோற்றத்திலிருப்பதை விட நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றார்கள். நாம் எல்லாருமே தோற்றுப்போனவர்கள், பல குறைபாடுகளைக் கொண்டவர்கள்.
நாம் எல்லாரும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, 'நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்" (ரோம. 15:2) என்ற வசனத்தைப் போலவும் நல்ல வார்த்தைகளை பேசதீர்மானித்து, 'இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்." (நீதி. 16:24) என்ற வசனத்தைப் போலவும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட வசனங்களை ஒரு தாளிலோ அல்லது கைப்பேசியிலோ மற்றவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளும்படி நாம் முயல்வோமா? அவ்வாறு செய்வோமாயின், நாம் இயேசுவைப்போல மாறி தன்னைத்தானே பிரியப்படுத்திக்கொள்ளாமல் மற்றவர்களுக்காக வாழ்பவராக மாறிவிடுவோம் (ரோம. 15:3).
கட்டுப்பாட்டின் மாயை
எலன் லாங்கர் என்ற பெண்மணி 1975ம் ஆண்டு 'கட்டுப்பாட்டின் மாயை" என்ற தலைப்பின் கீழே நம்முடைய வாழ்க்கையின் பலதரப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய அதிகாரத்தை நாம் பயன்படுத்துவதைக் குறித்த ஒரு ஆராய்ச்சியினை மேற்கொண்டார். அதில் அவர் கண்டுகொண்ட உண்மை என்னவெனில், பல சூழ்நிலைகளில் நம்முடைய ஆதிக்கத்தை உயர்த்தி மதிப்பிட்டுக் கொள்ளுகிறோம். இந்த ஆராய்ச்சியானது, மாயையான தோற்றத்தினை எவ்வாறு உடைத்துப் போடுகிறது என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது.
லாங்கரின் இந்த ஆராய்ச்சியானது, பல மக்களால் செய்து பார்க்கப்பட்ட பரிசோதனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. அது புத்தக வடிவில் வெளியிடப்பட ஆயத்தமாக இருந்தது. ஆனால், யாக்கோபு இந்தக் கருத்தினை, லாங்கர் கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கண்டுபிடித்தார். யாக்கோபு 4ம் அதிகாரத்தில், 'மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோம் என்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." (யாக். 4:13-14) என்று எழுதியுள்ளார்.
இந்த மாயமான தோற்றத்திற்கு, யாக்கோபு ஒரு தீர்வினை கொடுக்கிறார். அவர் முழுமையான ஆதிக்கத்தை உடையவருக்கு நேராகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்: 'ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்."
(யாக். 4:15). இந்த ஒருசில வசனங்களிலே யாக்கோபு, மனிதனின் நிலையற்ற தன்மையையும், அதற்கான மாற்று வழியையும் குறிப்பிடுகிறார்.
நாமும் நம்முடைய விதியானது நம் கைகளில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தேவன் தம்முடைய வல்லமையான கரங்களில் வைத்துத் தாங்குகிறபடியால், நாம் அவருடையத் திட்டங்களை விசுவாசிக்கலாம்.