ஜாக் எஸ்வின் தன்னுடைய புத்தகமான ‘குறையுள்ள போதகர்” என்ற நூலில், ‘நாம் உணர்வுப்பூர்வமாக, ஒரு நாள் வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விடுகிறோம்” என்று எழுதியுள்ளார். பொதுவாக இந்நூலில் அவர், போதகர்கள் படும் பாடுகளையும், சுமக்கும் பாரங்களையும் சொல்லியிருந்தாலும், இது நம்மெல்லாருக்கும் உரிய உண்மையாகும். பாரமான உணர்வுகள், பொறுப்புகள் போன்றவைகள் சரீரப்பிரகாரமாக, மனரீதியாக மற்றும் ஆவிக்குரிய வாழ்விலும் நம்மைக் களைப்படையச் செய்கிறது. நாம் தூங்குவதை மட்டுமே இச்சூழ்நிலையில் விரும்புகிறோம்.

1 இராஜாக்கள் 19ஆம் அதிகாரத்தில் எலியா தீர்க்கதரிசி எப்பக்கமும் நெருக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் தன்னைக் காணுகிறார். யேசபேல் ராணி அவரை கொன்றுவிடுவதாக மிரட்டினதை நாம் வாசிக்கிறோம் (வச. 1-2). ஏனெனில், எலியா பாகால் தீர்க்கதரிசிகளில் 450 பேர்களைக் கொன்று போட்டதை அவள் கேள்விப்படுகிறாள் (வச. 18:16-40). இதனால் எலியா பயந்துபோய் வனாந்திரத்திற்கு ஓடிச்சென்று தன்னை எடுத்துக்கொள்ளும்படி ஆண்டவரிடம் ஜெபித்தார் (19:3-4). அவருடைய துக்கத்தில் அவர் படுத்துக்கொள்ளுகிறார். ஒரு தூதன் இரண்டு தரம் அவரைத் தட்டியெழுப்பி ‘எழுந்திருந்து போஜனம் பண்ணு” என்று கூறுகிறார் (வச. 5,7). இரண்டாம் முறைக்கு அப்புறமாக எலியா தேவன் கொடுத்த ஆகாரத்தினால் பெலப்பட்டு, அந்த பெலத்தினால், ’40 நாட்கள் மற்றும் 40 இரவுகள்” பயணம் செய்து ஒரு குகைக்கு வருகிறார் (8-9). அங்கே தேவன் அவரை சந்தித்து அவருக்கு உரிய வேலைகளை மறுபடியும் கொடுக்கிறார் (9-18). அதன் பிறகு, அவர் களைப்பு நீங்கி, தேவன் தனக்குக்கொடுத்த வேலையைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினார்.

சில சமயங்களில் நாம் கூட தேவனுக்குள் ஊக்கப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த நிலை ஒருவேளை நாம் சக விசுவாசிகளோடு பேசும்போதோ, ஒரு ஆராதனைப்பாடல் மூலமாகவோ அல்லது ஒரு ஜெபநேரத்திலோ, அல்லது தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினாலோ ஏற்படலாம்.

களைப்படைந்திருக்கிறீர்களா? உங்கள் பாரங்களைக் கர்த்தரிடம் கொடுத்து விட்டு உற்சாகமடையுங்கள் அவர் உங்கள் பாரங்களைச் சுமப்பார்.