Archives: ஜூலை 2019

ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன

சம்பவங்களை அருமையாக விவரிக்கும் சிறுவர் வேதாகமத்தைத் திறந்து, என் பேரனுக்கு வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தேன். ஒரு சம்பவத்தில் தேவனுடைய அன்பையும் ஏற்பாட்டையும் பற்றி அருமையாக விவரிக்கப்பட்டிருந்தது. அதை வாசித்தபோது பூரித்தோம். பிறகு வாசிப்பதை சற்றே நிறுத்திவிட்டு, புத்தகத்தைத் திருப்பி மீண்டும் ஒருமுறை தலைப்பை வாசித்தேன்: ‘இயேசுவின் சம்பவம் சொல்லும் வேதாகமம்: ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன. ஒவ்வொரு சம்பவமும்.

உண்மையைச் சொன்னால், சிலசமயங்களில் வேதாகமத்தை வாசிக்கும்போது, குறிப்பாக பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது சரியாகப் புரியாது. தேவனை அறியாதவர்கள் அவருடைய மக்களைத் தோற்கடிப்பதுபோலத் தெரியும். தேவன் பரிசுத்தர், அவருடைய நோக்கங்களெல்லாம் நன்மையானவை என்றால், அவ்வளவு கொடுமையை தேவன் எவ்வாறு அனுமதித்தார்?

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, எம்மாவூருக்குச் செல்லும் வழியில் இரண்டு சீடர்களைச் சந்தித்தார். அவர்கள் இயேசுவை அடையாளங்காணவில்லை. தாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த மேசியா மரித்துப் போனாரென ஏமாற்றத்தில் இருந்தார்கள். லூக்கா 24:19-24. “அவரே இஸ்ரவேலை மீட்டுரட்சிப்பவர்” என்று நம்பியிருந்தார்கள். வச 21. இயேசு அவர்களுக்கு மறுநிச்சயத்தைக் கொடுத்தது பற்றி லூக்கா பதிவு செய்கிறார்: “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை (இயேசு) அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (வச. 27).

ஒவ்வொரு சம்பவமும் அவருடைய பெயரைச் சொல்லுகின்றன, புரியக்கடினமான சம்பவங்களும் கூட. ஏனென்றால், நம் உலகம் பெரும் சிதைவுக்கு உள்ளாகியிருப்பதையும் அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற ஒருவர் தேவை என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன. வழிவிலகிப்போன பிரியமான தம் பிள்ளைகளை மனதில்கொண்டு தேவன் ஏற்படுத்தியுள்ள மீட்பை, அதாவது அவர்களை மீண்டும் தம்மிடம் கொண்டுவருகிற வழியைத்தான் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு தலையீடும் சுட்டிக்காட்டுகின்றன.

தேவனிடம் உண்மையாய் இருப்பது

என் பேரனுக்கு மூன்று வயது. அன்றைக்கு ஆரம்பமே மோசமாக இருந்தது. அவனுக்குப் பிடித்தமான சட்டையைக் காணவில்லை. அவன் விரும்பி அணிகிற ஷூக்கள் (காலணிகள்) சூடாக இருந்தன. தன் கோபத்தை எல்லாம் தன் பாட்டியின் மேல் கொட்டினான். பிறகு உட்கார்ந்து அழத்தொடங்கினான்.

“எதற்காக இப்படி அழுகிறாய்?” என்று அவனிடம் கேட்டேன். சிறிது நேரம் அவனிடம் பேசினேன். அவன் அமைதியான பிறகு, நான் அவனிடம் அன்பாக, “பாட்டியிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டாயா?” என்று கேட்டேன். ஏதோ யோசனையில் தன் ஷூக்களையே பார்த்துக்கொண்டு, “இல்லை. கெட்டபிள்ளையாக நடந்து கொண்டேன். மன்னியுங்கள்” என்று சொன்னான்.

அவன்மேல் எனக்கு பரிதாபம் உண்டானது. தான் செய்ததை மறுக்காமல், நேர்மையோடு ஒத்துக்கொண்டான். அதன்பிறகு ஜெபித்தோம், நாங்கள் தவறு செய்யும்போது எங்களை மன்னிக்கவும், நல்லவர்களாக வாழ்வதற்கு எங்களுக்கு உதவிசெய்யவும் தேவனிடம் வேண்டிக்கொண்டோம்.

ஏசாயா 1 தம்முடைய மக்கள் செய்த தவறுகளை எல்லாம் சொல்லி, அவர்களை தேவன் கண்டிக்கிறார். நீதிமன்றங்களில் பரிதானமும் அநீதியும் தலைவிரித்தாடின; உலக ஆதாயத்திற்காக திக்கற்றோரையும் விதவைகளையும் கொள்ளையிட்டார்கள். அப்படியிருந்தும் அவர்களிடம் தேவன் இரக்கத்தோடு நடந்து கொண்டார், யூதாவின் ஜனங்கள் தாங்கள் செய்த தவறுகளை அறிக்கைபண்ணி, அவற்றிலிருந்து திரும்பும்படிச் சொன்னார்: “வழக்காடுவோம் வாருங்கள் . . . உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்” (ஏசா.1:18).

நம்முடைய பாவங்களை நாம் மறைக்காமல் தேவனிடம் சொல்ல அவர் விரும்புகிறார். நாம் மனநேர்மையுடன், மனந்திரும்பும்போது, அன்போடு அவர் மன்னிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9). நம் தேவன் இரக்கமுள்ளவர், புதிதாக நாம் வாழ்க்கையைத் துவங்குவதற்கு அவர் உதவுகிறார்!

எப்படி சமாதானம் பெறுவது?

மதியம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, என்னுடைய நண்பன் என்னிடம், “சமாதானம் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். “சமாதானமா...  என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஏன் கேட்கிறாய்?” என்று சற்றுக் குழப்பத்தோடு அவனிடம் கேட்டேன். உடனே அவன், “ஆராதனையின்போது காலால் தரையில் கோலமிட்டவண்ணம் இருந்தாய். உன் மனது ஏதோ சஞ்சலத்தில் இருக்கிறதென நினைக்கிறேன். தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு தேவன் தருகிற சமாதானம் பற்றி யோசித்திருக்கிறாயா?” என்று என்னிடம் கேட்டான்.

சில வருடங்களுக்குமுன் ஒரு நாளில், என் நண்பன் கேட்ட அந்தக் கேள்வி உண்மையிலேயே என் மனதில் ஆழமாகக் குத்தியது. புதிய ஒரு பாதையில் நான் பயணிக்க உதவியது. சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ்வது ஓர் ஈவு. அதை கஷ்டங்களுக்கு மத்தியிலும் தேவ பிள்ளைகள் எவ்வாறு தங்களுக்குச் சொந்த மாக்கினார்களென வேதாகமத்தில் ஆராயத் துவங்கினேன். கொலோசெயருக்கு பவுல் எழுதும் நிருபத்தில், தேவ சமாதானம் அவர்களுடைய இருதயங்களில் ஆளவேண்டுமென அவர் சொல்கிறார். அதுபற்றித் தியானித்தேன் (கொலோ. 3:15).

கொலோசெ சபைக்கு பவுல் சென்றதில்லை, தன் நண்பனாகிய எப்பாப்பிரா மூலம்தான் அதைப்பற்றி அறிந்துகொண்டார். பொய்ப்போதகங்களை அவர்கள் கேட்க நேரிட்டால், கிறிஸ்துவின் சமாதானத்தை இழந்துபோவார்களென வருந்தினார். ஆனால் அவர்களைக் கடிந்துகொள்வதற்கு பதிலாக, இயேசுவை நம்பும்படியும், நம்பிக்கையையும் நிச்சயத்தையும் கொடுக்க அவர் வல்லவர் என்றும் அவர்களை ஊக்கப்படுத்துகிறார் (வச. 15).

கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில்  ஆளும்படி அதை அனுமதிப்பதா அல்லது மறுப்பதா என்று நம்மைக் குழப்புகிற பல சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்கிறோம். நாம் அவரிடம் சென்று, நமக்குள் வசிக்கும்படி அவரிடம் கேட்டால், நம்மைப் பாரப்படுத்துகிற சஞ்சலத்தையும் கவலைகளையும் அன்போடு அவர் அகற்றிப் போடுவார். அவருடைய சமாதானத்தை நாம் தேடினால், அவர் அன்போடு நம் தேவைகளைச் சந்திக்கிறார் என்று நம்புவதை வெளிப்படுத்துகிறோம்.

இப்போது உங்களுக்குப் பசிக்கிறதா?

இந்தியாவில் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தாமஸ். அமெரிக்க தம்பதியர் அவரைத் தத்தெடுத்தார்கள். ஒரு சமயம் அவர் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, தன்னுடைய நகரத்திலிருந்த சிறுவர்கள் அதிகமான தேவையில் இருப்பதைக் கண்டார். அவர்களுக்கு உதவவேண்டியது தன்னுடைய கடமை என்று புரிந்தது. அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்று, படிப்பை முடித்து, நிறைய பணம் சேர்த்துவிட்டு, மறுபடியும் இந்தியாவுக்குத் திரும்பிவந்து உதவிசெய்யவேண்டுமென நினைத்தார். அதற்கான திட்டங்களைப் போடத் துவங்கினார்.

பிறகு, யாக்கோபு 2:14-18ஐ வாசித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் சிறுமி ஒருத்தி தன் அம்மாவிடம், “அம்மா, இப்போது எனக்குப் பசிக்கிறது!” என்று அழுவது அவருடைய காதில் தொனித்தது. “ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?” என்று அப்போஸ்தலர் அதில் கேட்டிருப்பார். தானும்கூட மிகவும் பசியோடு, ஏதாவது கிடைக்குமா என்று குப்பைத் தொட்டிகளைத் தேடி அலைந்த காலம் அவருடைய நினைவுக்கு வந்தது. உதவிசெய்வதற்கு இன்னும் பல வருடங்களைக் கடத்துவதற்கு அவர் விரும்பவில்லை. “இப்போது ஆரம்பிக்கப் போகிறேன்!” என்று தீர்மானித்தார்.

திக்கற்ற பிள்ளைகளுக்காக அவர் ஆரம்பித்த இல்லத்தில் இன்று 50 பிள்ளைகள் சிறந்த கவனிப்புடன் வயிறார சாப்பிடுகிறார்கள், இயேசுவைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள், கல்வி பயில்கிறார்கள். இயேசு சொல்லியிருக்கிறார், அதைச் செய்வதற்கு காலந்தாழ்த்தக்கூடாது என்று ஒருவர் செய்த தீர்மானம்தான் அதற்கெல்லாம் காரணம்.

யாக்கோபு சொல்கிற செய்தி நம் எல்லாருக்குமே பொருந்தும். இயேசு கிறிஸ்துவிலான விசுவாசத்தால் மிகப் பெரிய பல அனுகூலங்களைப் பெற்றிருக்கிறோம். அதாவது, அவரோடு உறவுகொள்ள முடிகிறது, பரிபூரணமான வாழ்க்கையைப் பெறமுடிகிறது, எதிர்காலத்திற்கான நம்பிக்கையைப் பெறமுடிகிறது. ஆனால், உதவி தேவைப்படுவோரைத் தேடிச்சென்று, அவர்களுக்கு உதவாவிட்டால், இவற்றால் ஏதாவது நன்மை இருக்கிறதா? “இப்போது எனக்குப் பசிக்கிறது” என்று மக்கள் அழுவது உங்கள் காதில் விழுகிறதா?