என் பேரனுக்கு மூன்று வயது. அன்றைக்கு ஆரம்பமே மோசமாக இருந்தது. அவனுக்குப் பிடித்தமான சட்டையைக் காணவில்லை. அவன் விரும்பி அணிகிற ஷூக்கள் (காலணிகள்) சூடாக இருந்தன. தன் கோபத்தை எல்லாம் தன் பாட்டியின் மேல் கொட்டினான். பிறகு உட்கார்ந்து அழத்தொடங்கினான்.

“எதற்காக இப்படி அழுகிறாய்?” என்று அவனிடம் கேட்டேன். சிறிது நேரம் அவனிடம் பேசினேன். அவன் அமைதியான பிறகு, நான் அவனிடம் அன்பாக, “பாட்டியிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டாயா?” என்று கேட்டேன். ஏதோ யோசனையில் தன் ஷூக்களையே பார்த்துக்கொண்டு, “இல்லை. கெட்டபிள்ளையாக நடந்து கொண்டேன். மன்னியுங்கள்” என்று சொன்னான்.

அவன்மேல் எனக்கு பரிதாபம் உண்டானது. தான் செய்ததை மறுக்காமல், நேர்மையோடு ஒத்துக்கொண்டான். அதன்பிறகு ஜெபித்தோம், நாங்கள் தவறு செய்யும்போது எங்களை மன்னிக்கவும், நல்லவர்களாக வாழ்வதற்கு எங்களுக்கு உதவிசெய்யவும் தேவனிடம் வேண்டிக்கொண்டோம்.

ஏசாயா 1 தம்முடைய மக்கள் செய்த தவறுகளை எல்லாம் சொல்லி, அவர்களை தேவன் கண்டிக்கிறார். நீதிமன்றங்களில் பரிதானமும் அநீதியும் தலைவிரித்தாடின; உலக ஆதாயத்திற்காக திக்கற்றோரையும் விதவைகளையும் கொள்ளையிட்டார்கள். அப்படியிருந்தும் அவர்களிடம் தேவன் இரக்கத்தோடு நடந்து கொண்டார், யூதாவின் ஜனங்கள் தாங்கள் செய்த தவறுகளை அறிக்கைபண்ணி, அவற்றிலிருந்து திரும்பும்படிச் சொன்னார்: “வழக்காடுவோம் வாருங்கள் . . . உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்” (ஏசா.1:18).

நம்முடைய பாவங்களை நாம் மறைக்காமல் தேவனிடம் சொல்ல அவர் விரும்புகிறார். நாம் மனநேர்மையுடன், மனந்திரும்பும்போது, அன்போடு அவர் மன்னிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9). நம் தேவன் இரக்கமுள்ளவர், புதிதாக நாம் வாழ்க்கையைத் துவங்குவதற்கு அவர் உதவுகிறார்!