இனியும் ஓடவேண்டாம்
1983ம் வருடம், ஜுலை 18ம் தேதியன்று, அமெரிக்க விமானப்படையின் தளபதி ஒருவர் நியூ மெக்சிகோவிலுள்ள அல்புகர்க் என்கிற இடத்தில் காணாமல் போனார். அதன்பிறகு அவரைப் பற்றிய செய்தியே இல்லை. முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு, அவர் கலிஃபோர்னியாவில் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். “வேலையால் மனஅழுத்தம் அடைந்து” அவர் ஓடிவிட்டதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
முப்பத்தைந்து வருடங்கள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறார்! ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்றே பாதி வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்! அவர் எப்போதும் கவலையோடும் சித்தப்பிரமையோடும்தான் அலைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு “ஓடுவதில்” எனக்கும் கொஞ்சம் அனுபவமுண்டு. ஆனால், என் வாழ்க்கையில் ஏதாவது கடமையைப் புறக்கணித்து, சரீர ரீதியாக நான் ஓடினது கிடையாது. மாறாக, ஏதாவது ஒன்றை நான் செய்யும்படி, ஏதாவது விஷயத்தை நான் எதிர்கொள்ளும்படி அல்லது அறிக்கையிடும்படி தேவன் என்னிடம் எதிர்பார்த்திருப்பார். அதில் நான் தவறியிருப்பேன். அதைதான் ஓடுவது என்று குறிப்பிடுகிறேன்.
யோனா தீர்க்கதரிசியும்கூட அவ்வாறு ஓடினவர்தானே! நினிவேயில் சென்று பிரசங்கிக்கும்படி தேவன் சொன்னதை அவர் கேட்கவில்லை (யோனா 1:1-3). ஆனால், தேவனை விட்டு அவர் எங்கே ஓடமுடிந்தது! அவருடைய சம்பவத்தை அறிந்திருப்பீர்கள் (வச. 4,17). புயல் வீசுகிறது, மீன் விழுங்குகிறது, மீனின் வயிற்றில் இருக்கிற சமயத்தில், தான் செய்த தவறுக்கான பலனை எண்ணிப்பார்க்கிறார்; தேவனிடம் உதவி வேண்டுகிறார் (யோனா 2:2).
யோனா குறையுள்ள ஒரு தீர்க்கதரிசி. ஆனால், அவருடைய சம்பவத்திலும்கூட நம்மை ஊக்கப்படுத்துகிற ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, யோனா பிடிவாதமாக இருந்தபோதிலும் தேவன் அவரைக் கைவிடவில்லை. வேறுவழியே இல்லாத நிலையில் தேவனிடம் அவர் உதவிகேட்டபோது, தம் சொல்லுக்கு இணங்காத ஊழியனை அவர் கிருபையோடு காப்பாற்றினார் (வச. 2). நம்மையும் அவர் அப்படித்தான் நடத்துகிறார்.
தேவன் தலையிடுகிறார்
1960 களில் இங்கிலாந்து அரசின் பராமரிப்பில் வளர்ந்தாள் பார்பரா. அவளுக்கு பதினாறு வயதானபோது, அவளும் அவளுடைய பச்சிளங்குழந்தை சைமனும் தங்குவதற்கு வீடின்றி தவித்தார்கள். ஏனென்றால், பதினாறு வயதாகிவிட்டால் அரசாங்க பராமரிப்பு தானாகவே நின்றுவிடும். எனவே தனக்கு உதவும்படி இங்கிலாந்தின் மகா ராணிக்கு பார்பரா ஒரு கடிதம் எழுதினாள்; ராணியிடமிருந்து பதிலும் வந்தது. தன்னுடைய வீடு ஒன்றை பார்பரா தங்கும்படி கொடுத்து, மனதுருக்கத்துடன் ராணி நடந்துகொண்டார்.
பார்பராவுக்கு எது தேவைப்பட்டதோ அதற்கான வசதிவாய்ப்புகள் இங்கிலாந்தின் மகாராணியிடம் இருந்தன. மனதுருக்கத்துடன் அவர் செய்த உதவியானது தேவனுடைய மனதுருக்கத்தை சிறிதளவில் பிரதிபலிக்கிறது. பரலோக ராஜாவுக்கு நம் தேவைகள் எல்லாமே தெரியும். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தும்படி அவர் செயல்படுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படுவதற்கு முதலில் நாம் அவரிடம் வரவேண்டுமென விரும்புகிறார். அவரோடு நாம் உறவுவைக்கவேண்டும், அந்த உறவின் விளைவாக நம் தேவைகளையும் கவலைகளையும் அவரிடம் சொல்லவேண்டும்.
இஸ்ரவேலருக்கு விடுதலை தேவைப்பட்டது. அதை அவர்கள் அவரிடம் சொன்னார்கள். எகிப்தின் அடிமைத்தனத்தில் உபத்திரவப்பட்ட அவர்கள், உதவிவேண்டி கதறினார்கள். அவர்களுடைய கதறலை தேவன் கேட்டார், தாம் அவர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார்: “தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்” (யாத். 2:25). தம் மக்களை விடுவிக்கும்படிக்கு மோசேக்கு அவர் கட்டளையிட்டார்; தாம் அவர்களை மீண்டுமொருமுறை “பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச்” சேர்ப்பதாகச் சொன்னார் (யாத். 3:8).
நாம் தம்மிடம் வரவேண்டும் என்று நம்முடைய ராஜா விரும்புகிறார்! நாம் விரும்புவதை எல்லாம் அவர் தராமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய தேவைகளை எல்லாம் அவர் சந்திக்கிறார். அவருடைய ஆளுகையை, அவருடைய நடத்துதலைச் சார்ந்திருப்போம்.
தேவனே உயர்ந்து நிற்கிறார்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாவலரான கைல்ஸ் கெல்மேன்சன் தான் கண்ட நம்புவதற்கரிய ஒரு காட்சிபற்றிக் கூறினார். அதாவது, ஆறு சிங்கங்களை எதிர்த்து இரண்டு தேன்வளைக் கரடிகள் (பேட்ஜர்) சண்டையிட்டனவாம். சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தங்களைவிட பத்துமடங்கு பெரிய உருவமுள்ள கொடிய சிங்கங்களிடமிருந்து அவை பின்வாங்கவில்லை. சிங்கங்கள் அவை இரண்டையும் எளிதில் கொன்றுவிட நினைத்திருக்கலாம்; ஆனால் சண்டையின் முடிவில் வீரநடை போட்டு பேட்ஜர்கள் சென்றதை வீடியோ காட்சி காட்டியது.
தாவீது-கோலியாத் சம்பவமும் நம்பமுடியாத ஒரு சம்பவம்தான். அனுபவமற்ற வாலிபனான தாவீது கொடிய பெலிஸ்தனான கோலியாத்துடன் மோதினார். இந்த இளம் வீரனைவிட கோலியாத் உயரமானவன்; பயங்கரமான பெலசாலி; யாரிடமும் இல்லாத ஆயுதம் அவனிடம் இருந்தது; அதாவது வெண்கல கேடகம், கூரான வெண்கல ஈட்டி (1 சாமு. 17:5-6). ஆனால் தாவீது சாதாரண மேய்ப்பன். தன் சகோதரர்களுக்காக அப்பங்களையும் பால்கட்டிகளையும் எடுத்துக்கொண்டு அந்தப் போர்க்களத்திற்குச் சென்றிருந்தார். வசனங்கள் 17-18. ஒரு கவண் மட்டுமே அவரிடம் இருந்தது.
கோலியாத் இஸ்ரவேலரை யுத்தத்திற்கு அழைத்தான். ஆனால் அவனோடு யுத்தம் செய்ய யாரும் தயாராக இல்லை. சவுல் ராஜாவும் “இஸ்ரவேல் அனைவரும் ... கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்” (வச. 11). தாவீது களத்தில் குதித்தபோது எவ்வளவுக்கு அதிர்ந்து போயிருப்பார்கள்! அனுபவசாலிகளான இஸ்ரவேலின் போர்வீரர்களுக்கு இல்லாத தைரியம் தாவீதுக்கு எவ்வாறு வந்தது? அங்கிருந்த அனைவருமே கோலியாத்தைத் தான் பார்த்தார்கள். ஆனால் தாவீது தேவனைப் பார்த்தார். “கர்த்தர் உன்னை (கோலியாத்தை) என் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்று ஆணித்தரமாகச் சொன்னார். (வச. 46). அங்கே எல்லாமே கோலியாத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அனைவரும் நினைத்தார்கள், ஆனால் தேவன்தாம் அங்கு உயர்ந்து நிற்பதாக தாவீது நம்பினார். கவணில் கல்லை வைத்து அந்த ராட்சதனின் நெற்றியில் அடித்து வீழ்த்தி, தன் விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபித்தார்.
எல்லாமே “கோலியாத்தின்” (நம் பிரச்சனைகளின்) கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். ஆனால் தேவனே உயர்ந்தவர். நம் வாழ்க்கை அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
இப்பொழுதே ஆரம்பிக்கலாம்
2017, பெப்ரவரி மாதம் என்னுடைய மூத்த சகோதரிக்கு புற்றுநோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. உடனே நான் என் நண்பர்களிடம், “கரோலினுடன் நான் அதிக நேரம் செலவிடவேண்டும், இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்கப் போகிறேன்” என்று சொன்னேன். நான் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப் படுவதாக சிலர் சொன்னார்கள். ஆனால், பத்து மாதங்களுக்குள் அவள் இறந்துபோனாள். அவளோடு நான் பல மணி நேரம் செலவிட்டிருந்தபோதிலும், நாம் ஒருவரை அதிகமாக நேசிக்கும்போது அவருடன் எவ்வளவுதான் நேரம் செலவிட்டாலும் நம் அன்பைப் பொழிவதற்கு நேரம் போதாது என்றே நினைக்கிறேன்.
ஆதிகால சபையிலிருந்த இயேசுவின் சீடர்களிடம், “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என்று சொல்கிறார் அப்போஸ்தலனாகிய பேதுரு (1 பேது. 4:8). அவர்கள் உபத்திரவத்திற்கு ஆளாகியிருந்தார்கள். கிறிஸ்தவ குடும்பத்தின் சகோதர சகோதரிகளுடைய அன்பு முன்பைவிட அவர்களுக்கு அதிகமாக தேவைப்பட்டது. தேவன் தாமே தம்முடைய அன்பை அவர்களுடைய இருதயங்களில் ஊற்றியிருந்ததால், அதே அன்பை அவர்கள் மற்றவர்கள்மேல் காட்ட விரும்பினார்கள். ஜெபம், விருந்தோம்பல், அன்பும் உண்மையுமான பேச்சு போன்றவற்றின் மூலம் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினார்கள். தேவன் கொடுத்த அன்பினாலே அவ்வாறு செய்ய விரும்பினார்கள். வசனங்கள் 9-11. தேவனுடைய தயவுள்ள நோக்கங்களுக்காக, தியாக மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் சேவைசெய்கிற வரத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அவருடைய கிருபையின்மூலம் அது சாத்தியமாகியிருந்தது. எனவே, “எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (வச. 11). இதுதான் தேவனுடைய வல்லமையான திட்டம், நம் மூலமாக அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிற திட்டம்.
நமக்கு மற்றவர்கள் தேவை, அவர்களுக்கு நாம் தேவை. அன்புகாட்டுவதற்கு தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற நேரத்தையும், வளங்களையும் நாம் பயன்படுத்துவோம். அதை இப்பொழுதே ஆரம்பிப்போம்.
போதிப்பதின்படி நடப்போம்
பால் டூர்னியர் என்பவர் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர்; அதிகம் மதிக்கப்பட்ட போதக ஆலோசகர். அவருடைய விரிவுரை ஒன்றைக் கேட்கிற சிலாக்கியம் போதகரும் எழுத்தாளருமான யூஜீன் பீட்டர்சனுக்குக் கிடைத்தது. மருத்துவரின் பணிகள் பற்றி பீட்டர்சன் வாசித்திருக்கிறார், மேலும் குணப்படுத்துவதற்கு மருத்துவர் கையாள்கிற விதங்களை அறிந்து வியந்திருக்கிறார். அன்றைய கருத்துரை பீட்டர்சனின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. டூர்னியர் தான் பேசுகிறபடி வாழ்கிறார், தான் வாழ்கிறபடி பேசுகிறார் என்று உணரமுடிந்தது. மருத்துவரின் அனுபவம் பற்றிச் சொல்வதற்கு ‘கான்குரயன்ஸ்’ (congruence) என்கிற வார்த்தையை பீட்டர்சன் பயன்படுத்துகிறார். கான்குரயன்ஸ் என்றால் இணக்கம். “அவரைப் பற்றிச் சொல்வதற்கு இதுதான் சரியான வார்த்தை” என்கிறார்.
கான்குரயன்ஸ் – “போதிப்பதின்படி செய்வது” அல்லது “போதிப்பதின்படி வாழ்வது” என்று இதற்கு அர்த்தம் உண்டு. யாராவது தான் “ஒளியில்” இருப்பதாகச் சொல்லியும் தன் சதோதரனையோ சகோதரியையோ பகைத்தால் அவர் “இதுவரைக்கும் இருளிலே” இருப்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் வலியுறுத்துகிறார் (1 யோவா. 2:9). அப்படிப்பட்டவர் பேசுவதும் செய்வதும் இணக்கமாக இருக்காது. அப்படிப்பட்டவன் “தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்” என்று யோவான் சொல்கிறார். வச 11. பேச்சுக்குக்கும் செயலுக்கும் இணக்கமில்லாதவன் “இருளிலே” இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
தேவ வார்த்தையின் வெளிச்சம் நம் பாதையில் பிரகாசிக்கும்படி நாம் அவரோடு நெருங்கி வாழ்வதுதான், இருளில் வாழாமல் நம்மைப் பாதுகாக்கும். அதனால் தேவபக்தியான ஒரு பார்வை கிடைக்கும், அது நம் வாழ்க்கையில் தெளிவையும் இலக்கையும் கொடுக்கும். அப்போது நம் வார்த்தைகளைப் போலவே நம் செயல்கள் இருக்கும். இதை மற்றவர்கள் கவனிக்கும்போது, போகும் இடம் இன்னதென்று அறியாமல் செல்கிறவர்கள் என்று நம்மை பற்றி எண்ணாமல், போகும் இடத்தை தெளிவாக அறிந்திருப்பவர்கள் என்று புரிந்துகொள்வார்கள்.