தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாவலரான கைல்ஸ் கெல்மேன்சன் தான் கண்ட நம்புவதற்கரிய ஒரு காட்சிபற்றிக் கூறினார். அதாவது, ஆறு சிங்கங்களை எதிர்த்து இரண்டு தேன்வளைக் கரடிகள் (பேட்ஜர்) சண்டையிட்டனவாம். சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தங்களைவிட பத்துமடங்கு பெரிய உருவமுள்ள கொடிய சிங்கங்களிடமிருந்து அவை பின்வாங்கவில்லை. சிங்கங்கள் அவை இரண்டையும் எளிதில் கொன்றுவிட நினைத்திருக்கலாம்; ஆனால் சண்டையின் முடிவில் வீரநடை போட்டு பேட்ஜர்கள் சென்றதை வீடியோ காட்சி காட்டியது.

தாவீது-கோலியாத் சம்பவமும் நம்பமுடியாத ஒரு சம்பவம்தான். அனுபவமற்ற வாலிபனான தாவீது கொடிய பெலிஸ்தனான கோலியாத்துடன் மோதினார். இந்த இளம் வீரனைவிட கோலியாத் உயரமானவன்; பயங்கரமான பெலசாலி; யாரிடமும் இல்லாத ஆயுதம் அவனிடம் இருந்தது; அதாவது வெண்கல கேடகம், கூரான வெண்கல ஈட்டி (1 சாமு. 17:5-6). ஆனால் தாவீது சாதாரண மேய்ப்பன். தன் சகோதரர்களுக்காக அப்பங்களையும் பால்கட்டிகளையும் எடுத்துக்கொண்டு அந்தப் போர்க்களத்திற்குச் சென்றிருந்தார். வசனங்கள் 17-18. ஒரு கவண் மட்டுமே அவரிடம் இருந்தது.

கோலியாத் இஸ்ரவேலரை யுத்தத்திற்கு அழைத்தான். ஆனால் அவனோடு யுத்தம் செய்ய யாரும் தயாராக இல்லை. சவுல் ராஜாவும் “இஸ்ரவேல் அனைவரும் … கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்” (வச. 11). தாவீது களத்தில் குதித்தபோது எவ்வளவுக்கு அதிர்ந்து போயிருப்பார்கள்! அனுபவசாலிகளான இஸ்ரவேலின் போர்வீரர்களுக்கு இல்லாத தைரியம் தாவீதுக்கு எவ்வாறு வந்தது? அங்கிருந்த அனைவருமே கோலியாத்தைத் தான் பார்த்தார்கள். ஆனால் தாவீது தேவனைப் பார்த்தார். “கர்த்தர் உன்னை (கோலியாத்தை) என் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்று ஆணித்தரமாகச் சொன்னார். (வச. 46). அங்கே எல்லாமே கோலியாத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அனைவரும் நினைத்தார்கள், ஆனால் தேவன்தாம் அங்கு உயர்ந்து நிற்பதாக தாவீது நம்பினார். கவணில் கல்லை வைத்து அந்த ராட்சதனின் நெற்றியில் அடித்து வீழ்த்தி, தன் விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபித்தார்.

எல்லாமே “கோலியாத்தின்” (நம் பிரச்சனைகளின்) கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். ஆனால் தேவனே உயர்ந்தவர். நம் வாழ்க்கை அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது.