2017, பெப்ரவரி மாதம் என்னுடைய மூத்த சகோதரிக்கு புற்றுநோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. உடனே நான் என் நண்பர்களிடம், “கரோலினுடன் நான் அதிக நேரம் செலவிடவேண்டும், இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்கப் போகிறேன்” என்று சொன்னேன். நான் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப் படுவதாக சிலர் சொன்னார்கள். ஆனால், பத்து மாதங்களுக்குள் அவள் இறந்துபோனாள். அவளோடு நான் பல மணி நேரம் செலவிட்டிருந்தபோதிலும், நாம் ஒருவரை அதிகமாக நேசிக்கும்போது அவருடன் எவ்வளவுதான் நேரம் செலவிட்டாலும் நம் அன்பைப் பொழிவதற்கு நேரம் போதாது என்றே நினைக்கிறேன்.

ஆதிகால சபையிலிருந்த இயேசுவின் சீடர்களிடம், “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என்று சொல்கிறார் அப்போஸ்தலனாகிய பேதுரு (1 பேது. 4:8). அவர்கள் உபத்திரவத்திற்கு ஆளாகியிருந்தார்கள். கிறிஸ்தவ குடும்பத்தின் சகோதர சகோதரிகளுடைய அன்பு முன்பைவிட அவர்களுக்கு அதிகமாக தேவைப்பட்டது. தேவன் தாமே தம்முடைய அன்பை அவர்களுடைய இருதயங்களில் ஊற்றியிருந்ததால், அதே அன்பை அவர்கள் மற்றவர்கள்மேல் காட்ட விரும்பினார்கள். ஜெபம், விருந்தோம்பல், அன்பும் உண்மையுமான பேச்சு போன்றவற்றின் மூலம் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினார்கள். தேவன் கொடுத்த அன்பினாலே அவ்வாறு செய்ய விரும்பினார்கள். வசனங்கள் 9-11. தேவனுடைய தயவுள்ள நோக்கங்களுக்காக, தியாக மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் சேவைசெய்கிற வரத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அவருடைய கிருபையின்மூலம் அது சாத்தியமாகியிருந்தது. எனவே, “எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (வச. 11). இதுதான் தேவனுடைய வல்லமையான திட்டம், நம் மூலமாக அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிற திட்டம்.

நமக்கு மற்றவர்கள் தேவை, அவர்களுக்கு நாம் தேவை. அன்புகாட்டுவதற்கு தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற நேரத்தையும், வளங்களையும் நாம் பயன்படுத்துவோம். அதை இப்பொழுதே ஆரம்பிப்போம்.