என் வருங்கால மனைவியை என் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்வதற்காக அழைத்துச் சென்றேன். என்னோடு பிறந்த, எனக்கு மூத்தவர்களான இருவர், கண்களில் மிளிர்ச்சியுடன், “இவனிடம் உனக்கு எது பிடித்திருந்தது?” என்று கேட்டார்கள். தனக்குப் பிடித்தளவுக்கு ஒரு நல்ல மனிதனாக தேவனுடைய கிருபையால் நான் வளர்ந்திருப்பதாக சிரித்தவாறே பதிலளித்தாள்.

அது ஒரு புத்திசாலித்தனமான பதில். நம்முடைய கடந்தகாலத்தைக் கடந்து, தேவன் எவ்வாறு நம்மைப் பார்க்கிறார் என்பதை அந்தப் பதில் மிகசரியாகப் பிரதிபலிக்கிறது. தேவனுடைய சபையை உபத்திரவப்படுத்தி வந்த சவுல் கிறிஸ்துவின் பிரசன்னத்தால் குருடாகிறார், அவரைக் குணப்படுத்தும்படி அனனியாவிடம் கிறிஸ்து சொல்கிறார் (அப். 9). அனனியாவுக்கு நம்பமுடியவில்லை, இயேசுவை விசுவாசித்தவர்களை உபத்திரவப்படுத்தி, மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுத்த சவுலையா தான் குணமாக்கவேண்டுமெனக் கேட்கிறார். சவுல் எப்படியிருந்தான் என்று பார்க்காமல், அவன் எப்படி மாறியிருக்கிறான் என்று பார்க்குமாறு அனனியாவிடம் தேவன் சொல்லுகிறார். புறஜாதியார் (யூதர் அல்லாதவர்கள்), ராஜாக்கள் உட்பட (வச. 15) அப்போது அறியப்பட்டிருந்த தேசங்கள் முழுவதிற்கும் நற்செய்தியைக் கொண்டுசெல்கிற சுவிசேஷகனாக மாறியிருந்தார். சவுலை அனனியா ஒரு பரிசேயனாகவும் உபத்திரவக்காரனாகவும் பார்த்தார், ஆனால் தேவன் அவரை அப்போஸ்தலனாகவும் சுவிசேஷகனாகவும் பார்த்தார்.

நான் இருக்கிற நிலை இதுதானே என்று சிலசமயங்களில் நம்மைபற்றி நாம் நினைக்கலாம். நம் தோல்விகளும் குறைகளுமே நம் கண்களுக்குத் தெரியலாம். ஆனால் நம்மைப் புதுச்சிருஷ்டிகளாக தேவன் பார்க்கிறார். நாம் எப்படி இருந்தோம் என்பதை அல்ல, இயேசுவுக்குள் நாம் எப்படி இருக்கிறோம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நாம் எப்படிப்பட்டவர்களாக மாறி வருகிறோம் என்று பார்க்கிறார். தேவனே, இப்படியே நாங்கள் எங்களையும் மற்றவர்களையும் பார்ப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்யும்!