மதியம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, என்னுடைய நண்பன் என்னிடம், “சமாதானம் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். “சமாதானமா… என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஏன் கேட்கிறாய்?” என்று சற்றுக் குழப்பத்தோடு அவனிடம் கேட்டேன். உடனே அவன், “ஆராதனையின்போது காலால் தரையில் கோலமிட்டவண்ணம் இருந்தாய். உன் மனது ஏதோ சஞ்சலத்தில் இருக்கிறதென நினைக்கிறேன். தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு தேவன் தருகிற சமாதானம் பற்றி யோசித்திருக்கிறாயா?” என்று என்னிடம் கேட்டான்.
சில வருடங்களுக்குமுன் ஒரு நாளில், என் நண்பன் கேட்ட அந்தக் கேள்வி உண்மையிலேயே என் மனதில் ஆழமாகக் குத்தியது. புதிய ஒரு பாதையில் நான் பயணிக்க உதவியது. சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ்வது ஓர் ஈவு. அதை கஷ்டங்களுக்கு மத்தியிலும் தேவ பிள்ளைகள் எவ்வாறு தங்களுக்குச் சொந்த மாக்கினார்களென வேதாகமத்தில் ஆராயத் துவங்கினேன். கொலோசெயருக்கு பவுல் எழுதும் நிருபத்தில், தேவ சமாதானம் அவர்களுடைய இருதயங்களில் ஆளவேண்டுமென அவர் சொல்கிறார். அதுபற்றித் தியானித்தேன் (கொலோ. 3:15).
கொலோசெ சபைக்கு பவுல் சென்றதில்லை, தன் நண்பனாகிய எப்பாப்பிரா மூலம்தான் அதைப்பற்றி அறிந்துகொண்டார். பொய்ப்போதகங்களை அவர்கள் கேட்க நேரிட்டால், கிறிஸ்துவின் சமாதானத்தை இழந்துபோவார்களென வருந்தினார். ஆனால் அவர்களைக் கடிந்துகொள்வதற்கு பதிலாக, இயேசுவை நம்பும்படியும், நம்பிக்கையையும் நிச்சயத்தையும் கொடுக்க அவர் வல்லவர் என்றும் அவர்களை ஊக்கப்படுத்துகிறார் (வச. 15).
கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் ஆளும்படி அதை அனுமதிப்பதா அல்லது மறுப்பதா என்று நம்மைக் குழப்புகிற பல சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்கிறோம். நாம் அவரிடம் சென்று, நமக்குள் வசிக்கும்படி அவரிடம் கேட்டால், நம்மைப் பாரப்படுத்துகிற சஞ்சலத்தையும் கவலைகளையும் அன்போடு அவர் அகற்றிப் போடுவார். அவருடைய சமாதானத்தை நாம் தேடினால், அவர் அன்போடு நம் தேவைகளைச் சந்திக்கிறார் என்று நம்புவதை வெளிப்படுத்துகிறோம்.
இயேசுவே, எல்லா அறிவுக்கும் மேலான சமாதானத்தைத் தந்தருளும். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உம்முடைய சமாதானத்தை நான் பெற்றுக்கொள்ள உதவிசெய்யும்.
எப்படிப்பட்ட சூழ்நிலைகள் அல்லது உறவுப்பிரச்சனைகள் உங்களுடைய மனதையும் இருதயத்தையும் பாரப்படுத்துகின்றன? இயேசு தம்முடைய சமாதானத்தை உங்களுக்குத் தரும்படி எவ்வாறு கேட்கப் போகிறீர்கள்?