பல ஆண்டுகளாக, நான் என்னுடைய இருதயத்தைக் காத்துக் கொள்ள பயமென்னும் கேடகத்தை அணிந்திருந்தேன். இதனைக் காரணம் காட்டி புதியனவற்றைப் பழகிக்கொள்ளவும், என்னுடைய கனவுகளைத் தொடரவும், தேவனுக்குக் கீழ்ப்படியவும் மறுத்துவந்தேன். மரணத்தைக் குறித்து பயம், இருதய வலி ஏற்படும் அல்லது நாம் தள்ளிவிடப்படுவோம் என்ற எண்ணம் நான் தேவனோடும், மற்றவர்களோடும் அன்பான உறவை ஏற்படுத்திக்கொள்ள தடையாக இருந்தது. பயம் எனக்குப் பாதுகாப்பின்மையும் கவலையும், கொடுத்ததோடு, பொறாமையுள்ள மனைவியாகவும், எப்போதும் பாதுகாத்துக் கொள்ள நினைக்கும் ஒரு கவலை நிறைந்த தாயாகவும் மாற்றியது. தேவன் எவ்வளவாய் என்னை நேசிக்கின்றார் என நான் தெரிந்துகொள்ள ஆரம்பித்தபோது, நான் தேவனோடும் மற்றவர்களோடும் வைத்துள்ள உறவை மாற்றியமைத்தார். தேவன் என்னைப் பாதுகாக்கின்றார் என்று உணர்ந்தபோது நான் இன்னும் பாதுகாப்பாக இருக்கின்றேன், என உணரவும் பிறருடைய தேவைகளைக் கவனிக்கவும் எனக்கு உதவினார்.

தேவன் அன்பாகவேயிருக்கிறார் (1 யோவா. 4:7-8) கிறிஸ்து சிலுவையில் மரித்ததின் மூலம் அவருடைய அன்பை வெளிப்படுத்தினார், நம்மீது அவர் வைத்திருக்கும் தீவிர அன்பை வெளிப்படுத்தினார் (வச. 9-10). தேவன் நம்மை நேசிக்கின்றார், நம்மில் வாசமாயிருக்கின்றார், எனவே நாமும் அவர் யார், அவர் நமக்கு என்ன செய்துள்ளார் என்பதை எண்ணிப் பார்த்து மற்றவர்களை நேசிப்போம் (வச. 11-12).

இயேசுவை நமது இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ள போது, அவர் நமக்கு தமது பரிசுத்த ஆவியானவரைத் தந்தருளினார் (வச. 13-15). ஆவியானவர், தேவனுடைய அன்பை நாம் அறிந்து கொள்ளவும், அந்த அன்பில் நிலைத்திருக்கவும் உதவுவதோடு, நம்மையும் அவரைப் போல மாற்றுகின்றார் (வச. 16-17). அவர் மீதுள்ள நம்பிக்கையிலும், விசுவாசத்திலும் நாம் வளரும் போது பயம் நம்மைவிட்டு விலகுகின்றது. தேவன் நம்மை ஆழமாக நேசிக்கின்றார் என்பதை நாம் சந்தேகமற தெரிந்து கொள்ளும் போது பயத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றோம் (வச. 18-19).

தேவன் நம்மீது வைத்துள்ள நிபந்தனையற்ற அன்பை நாம் அநுபவிக்கும்போது, நாம் அவரோடுள்ள உறவில் வளர்ந்து, அவருக்காக எதையும் செய்யவும், பிறருக்கு பயமில்லாத அன்பினைக் கொடுக்கவும் முன்வருவோம்.