உலகிலுள்ள எல்லா பட்டணங்களிலும் நடப்பது போல பாரீஸ் நகரின் புறப் பகுதியில் வீடற்றிருக்கின்ற மக்கள் சமுதாயத்தினருக்கு உதவும்படி அநேகர் வருகின்றனர். நீர் புகாத பைகளில் உடைகள் அடைக்கப்பட்டு, குறிப்பிட்ட வேலிகளில் தொங்க விடப்படுகின்றன. தெருக்களில் வசிப்பவர்கள் தங்கள் தேவைக்குத்தக்கதாக அதிலிருந்து எடுத்துக் கொள்ளும்படி அப்படிச் செய்கின்றனர் “நான் காணாமல் போய்விடவில்லை, நீ குளிரில் இருப்பாயானால் நான் உனக்கு உதவ தயாராக இருக்கின்றேன்” என்ற வாசகம் அந்தப் பைகளில் எழுதப்பட்டிருக்கும். இந்த முயற்சி அடைக்கலமில்லாதிருப்பவர்களை உற்சாகப்படுத்துவதோடு, அந்த சமுதாயத்திலும் தேவையோடிருப்பவர்களுக்கு உதவுவதின் முக்கியத்துவத்தைக் கற்று கொடுக்கின்றது.

எளியவர்களின் மீது கரிசனையோடிருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை வேதாகமம் எடுத்துரைக்கின்றது. நாம் அவர்களுக்கு தாராளமாக நமது கையைத் திறக்க வேண்டுமெனவும் கற்றுத் தருகிறது (உப. 15:11) நாம் நம்முடைய கண்களை, எளியவர்களின் தேவையைக் காணாதபடி திருப்பிக் கொள்ளலாம். ஆனால், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் தேவையை கண்டுணர்ந்து, அவர்களுக்கு தாராளமாக, முழுமனதோடு உதவும்படி தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். எளியவருக்குத்

கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக (வச. 10). என்கின்றார். நாம் ஏழைகளுக்கு கொடுக்கும் போது ஒருக்காலும் அழியாத செல்வத்தை பரலோகத்தில் சேர்த்து வைக்கின்றோம் என இயேசு கூறுகின்றார் (லூக். 12:33).

நம்முடைய தாராள மனதை, நம்முடைய தேவனைத் தவிர வேறொருவரும் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும் நாம் தாராளமாய் கொடுப்பதால் நம்மருகிலிருப்பவரின் தேவைகளைச் சந்திக்கின்றோம். பிறருக்குக் கொடுப்பதால் தேவன் நமக்குத் தரும் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்கின்றோம். கர்த்தாவே, எங்கள் கண்களைத் திறந்து, விரிந்த கரங்களோடு, எங்கள் பாதையில் தேவையோடிருப்பவர்களுக்குக் கொடுக்கும்படி எங்களுக்கு உதவியருளும்.