நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், மகாத்மா காந்தி இன்னும் அநேக சிலைகள் வைக்கப்பட்டுள்ள லண்டன் பார்லிமென்ட் சதுக்கத்தில், ஒரு பெண்ணின் சிலைமட்டும் தனியாக நிற்கின்றது.

பெண்-மில்லிசென்ட் ஃபாசெட். இவர் பெண்களின் ஓட்டுரிமைக்காகப் போராடியவர். அவருடைய உருவம் பித்தளையால் உருவாக்கப்பட்டுள்ளது. கரத்தில் ஒரு கொடியை ஏந்தியுள்ளார். அந்தக் கொடியிலுள்ள வாசகம், தன்னோடு போராடிய மற்றொரு போராளிக்கு மரியாதையைச் செலுத்துவதாக எழுதப்பட்டிருந்தது. “எங்கும் தைரியமாகச் செயல்பட தைரியமான அழைப்பு” என்றிருந்தது. ஒரு நபரின் தைரியம் மற்றொரு நபரை தைரியப்படுத்தும் என்பதையே ஃபாசெட் வலியுறுத்தினார். தயக்கமுள்ள ஆன்மாக்கள் முன்னெழுந்து வர, தட்டியெழுப்பினார்.

தாவீது தன்னுடைய அரசாட்சியை தனது மகன் சாலமோனுக்குக் கொடுக்கும்படி ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, அவன் தோளில் சுமக்க வேண்டிய பாரமான பொறுப்புகளைக் குறித்து விளக்குகின்றார். தன் மேல் சுமத்தப்பட்ட பாரத்தினால் சாலமோன் துவண்டுவிடுவான் போலத் தோன்றியது. இஸ்ரவேலரை தேவனுடைய எல்லா கட்டளைகளை பின்பற்றும்படி வழிநடத்தவும், தேவன் அவனிடம் நம்பி கொடுத்துள்ள தேசத்தைக் காக்கவும், தேவனுடைய ஆலய கட்டுமானப் பணியை மேற்பார்வையிடவும் கற்பிக்கப்பட்டான் (1 நாளா. 28:8-10).

சாலமோனின் நடுங்கின உள்ளத்தையறிந்த தாவீது, தன் மகனுக்கு வல்லமையுள்ள வார்த்தைகளைத் தருகிறார். “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்” (வச. 20). உண்மையான தைரியம் சாலமோனின் சொந்த பெலத்தாலும், தன்னம்பிக்கையாலும் வரவில்லை. தேவனையும் அவருடைய வல்லமையையும் சார்ந்து இருந்ததாலேயே தைரியத்தைப் பெற்றுக் கொண்டார்.

நாமும் கடினமான வேளைகளைச் சந்திக்கும் போது, நாம் நமக்குள்ளே தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவும், தைரியத்தைப் பற்றி பேசவும் முயற்சிக்கின்றோம். தேவனே, நம்முடைய விசுவாசத்தை புதுப்பிப்பவர். அவர் நம்மோடிருப்பார், அவருடைய பிரசன்னம் நம்மை தைரியமாகச் செயல்பட அழைக்கின்றது.