எங்கள் வீட்டின் பின்புற வளாகத்தைச் சுற்றியுள்ள வேலியினூடே உற்றுப்பார்த்தேன். அங்கிருந்த பூங்காவில் மக்கள் ஓடுவதும், குதிப்பதும், நடப்பதும், நடைபாதையில் ஊர்ந்து செல்வதுமாக இருந்தனர். நானும் பெலசாலியாக இருந்த போது இத்தகையவற்றை செய்துள்ளேன்பதை நினைத்துப் பார்த்தேன். ஓர் அதிருப்தி அலை என்னை மேற்கொண்டது.

பின்பு நான் வேதாகமத்தை எடுத்து வாசித்தபோது, ஏசாயா 55:1ஐ வாசிக்க நேர்ந்தது. “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்”. என்பதை வாசித்தபோது, இந்த அதிருப்தி (தாகம்) வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய ஒரு சட்டம், இது வாழ்வில் விதிவிலக்கல்ல என உணர்ந்தேன். வாழ்வில் எந்தவொரு நன்மையான காரியமும் நம்மை முழுமையாக திருப்திப்படுத்த முடியாது. மலையேறுவதற்கு வழிகாட்டியாகத் திகழும் ஷெர்பாவின் கால்களைப் போன்ற கால்கள் எனக்கிருந்தாலும், வேறு ஏதோவொரு குறையைக் குறித்து ஏங்கி என் வாழ்வு மகிழ்ச்சியற்றதாகிவிடும்.

நம்முடைய கலாச்சாரம், எப்பொழுதும் ஏதோ ஒன்றைச் செய்தாலோ, வாங்கினாலோ, அணிந்தாலோ, உடலில் தெளித்துக் கொண்டாலோ உருள்வதாலோ அல்லது பயணம் செய்வதாலோ முடிவில்லா மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டேயிருக்கும். ஆனால், அது முற்றிலும் பொய். நாம் இங்கே இப்பொழுது எந்த ஒரு காரியத்திலிருந்தும் முழு திருப்தியைப் பெற்றுக் கொள்ள முடியாது.

ஆகையால் ஏசாயா தீர்க்கதரிசி நம்மை தேவனிடமும், வேதத்திடமும் வந்து, அவர் என்ன சொல்கின்றார் என்பதைக் கேட்கும்படி நம்மை மீண்டும், மீண்டும் அழைக்கின்றார். தேவன் சொல்வதென்ன? அவர் அன்று தாவீதுக்கு அருளின “நித்தியமான” அன்பினையும், கிருபையையும் உனக்கும் எனக்கும் கொடுக்கும்படி அவர் “உண்மையுள்ளவராயிருக்கிறார்” (வச. 3) அது நமக்கும் பொருந்தும் எனவே நாம் அவரிடம் “வருவோம்”