அந்த  வீடியோ காட்சியில் ஒரு மனிதன் ஒரு கூட்டம் நிறைந்த ஒரு சாலையோரம் முழங்காலில் நின்றபடியே அருகிலுள்ள முட்புதரில் பற்றியெரிந்து கொண்டிருந்த நெருப்பினூடே கைகளைத்தட்டியும், கெஞ்சியும் ஏதோ ஒன்றினை வெளியே வரும்படி கேட்டுக் கொண்டிருந்தான். அது என்ன? ஒரு நாயாக இருக்குமோ? சில மணித்துளிகளில் முயலொன்று குதித்து வெளியே வந்தது. அந்த மனிதன், பயந்துகொண்டு வெளியே வந்த அந்த முயலை அள்ளி அணைத்தவாறு வேகமாகப் பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தார்.

எப்படி ஒரு சிறிய உயிரினத்தைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சி அந்த நாட்டின் மிகப்பெரிய செய்தியாக வெளிவந்தது? ஏதோ ஒன்று, இந்த சிறிய உயிரினத்தையும் அருமையாகக் கருதி இரக்கம் காட்டும்படிச் செய்தது. இத்தனை சிறிய உயிரினத்திற்கு இருதயத்தில் இத்தனை பெரிய இடம் கொடுப்பதென்பது எத்தனை பெரியது!

ஒரு மனுஷன் பெரிய விருந்து ஆயத்தம் பண்ணி விருப்பமுள்ள அனைவரையும் அழைத்ததைப் போன்று தேவனுடைய இராஜ்ஜியம் உள்ளது என்று இயேசு கூறினார். அந்த விருந்துக்கு மிகப் பெரிய முக்கியஸ்தர்களை மட்டுமல்ல, “ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக் கொண்டுவா” என்றார் (லூக். 14:21). நல்லவேளை, தேவன் பெலவீனரையும் சமுதாயத்தில் யாரும் கவனிக்காதவர்களையும் அழைத்து விருந்து சாலையை நிரப்பினார். இல்லையெனில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும் அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1 கொரி. 1:27-29).

என்னைப் போன்ற சிறிய மனிதனையும் இரட்சிக்கும்படி தேவன் எத்தனை பெரிய இருதயம் கொண்டுள்ளார்! இதற்குப் பிரதிபலனாக நான் எத்தனை பெரிய இருதயம் கொண்டிருக்க வேண்டும்? மிக எளிதாகச் சொல்ல முடியும், சமுதாயத்தில் மிகப் பெரியவர்களாகக் கருதப்படுகின்றவர்களை மனம் மகிழச் செய்வதன் மூலமாக அல்ல, சமுதாயம் மிகவும் அற்பமாகக் கருதும் நபர்களுக்குப் பணி செய்வதன் மூலமே, நான் பெரிய இருதயத்தைப் பெற முடியும்.