Archives: மார்ச் 2019

சரியான நேரத்தில் நம்மோடிருப்பவர்

அவள் அந்த அலமாரியின் மேலடுக்கினையே நோக்கிக் கொண்டிருந்தாள். அங்குதான் கண்ணாடி ஜாடிகளில் பழக்கூழ் தயாரிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. நான் அவளருகில், அந்தப் பகுதியில் நின்று அலமாரியின் மேல் பகுதியைப் பார்த்தேன். எதை வாங்கலாமென யோசித்துக் கொண்டிருந்தேன். நான் நிற்பதை அவள் அறியாமல் தன் யோசனையிலேயே மூழ்கியிருந்தாள். எனக்கு மேலடுக்கிலிருந்து பொருட்களையெடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் நான் நல்ல உயரமான மனிதன். ஆனால், அவளோ மிகவும் குறைந்த உயரம். நான் அவளிடம் பேசி உதவ முன்வந்தேன். அதிர்ச்சியடைந்தவளாய், "நீங்கள் இங்கு நிற்பதை நான் கவனிக்கவில்லை. தயவுகூர்ந்து உதவுங்கள்" என்றாள்.

இயேசுவின் சீடரும் இத்தகைய ஒரு சூழலில் தான் இருந்தனர். பசியோடிருக்கும் ஒரு கூட்டத்தினர், தனிமையான இடம், நேரமும் கடந்து கொண்டிருந்தது. மிகவும் பிந்திய மாலைப்பொழுது, சீடர்கள் இயேசுவிடம், “ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்கு போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும்" என்கின்றனர் (மத். 14:15). ஆனால், இயேசு அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்" என்றார். அப்பொழுது அவர்கள், 'இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களுமேயல்லாமல் வேறொன்றும் இல்லை" என்றார்கள் (வச. 17). சீடர்கள் பார்த்ததெல்லாம் தங்களுடைய இயலாமையையே. ஆனால், அவர்களுக்கருகில் நிற்பவர் இயேசு. வெறுமனே அப்பங்களை பெருகச் செய்பவராக மட்டுமல்ல, அவரே நம் வாழ்வின் அப்பமாக நிற்கின்றார்.

நம்முடைய சவால்களை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் மூழ்கி நம்முடைய குறுகிய கண்ணோட்டத்தோடு நாம் நம்மோடிருக்கின்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சார்ந்துகொள்ள நாம் தவறிவிடுகின்றோம். தனித்த மலைப் பிரதேசத்திலிருந்து மளிகைக் கடை வரை எந்த இடமாயினும் தேவன் நம்மோடிருக்கின்றார். தேவன் நம்முடைய தேவையின் போது அவ்விடத்திலிருக்கின்றார். நம் துன்பத்தின் மத்தியில் தவறாது வந்திருந்து உதவும் தேவனவர்.

வேதனையில் ஒர் நோக்கமுண்டோ?

தன்னுடைய சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன, இனி வாழ்நாள் முழுவதும் டயலிஸிஸ் செய்துகொள்ள வேண்டுமென தெரிந்து கொண்டபோது ஸ்யூ ஃபென், அந்த சிகிச்சையைத் தொடர விரும்பவில்லை. பணி ஓய்வுபெற்று, தனியாக, ஆனால், நீண்ட நாட்களாக இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் வாழும் அவர், தன்னுடைய வாழ்நாளை நீடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், நண்பர்களின் விடாப்பிடியான முயற்சியால் டயலிஸிஸ் செய்ய சம்மதித்ததோடு, தேவன் அவளுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டாள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தான் செல்லும் ஆலயத்தில் பெலவீனப்படுத்தும் ஒரு வியாதியோடு போராடிக் கொண்டிருந்த ஒரு சிநேகிதியைச் சந்தித்த போது ஸ்யூ தன்னுடைய அனுபவத்திற்கு ஒரு பயன் வந்ததைக் கண்டாள். அந்தப் பெண்ணும் தனிமையில், தன்னை உண்மையாய் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் யாருமின்றி தவித்தாள். ஸ்யூ அவளுடைய உடல், மனரீதியானத் தேவைகளை புரிந்து கொண்டதோடு, அவளுக்குத் தனிப்பட்ட முறையில் உதவவும் முன்வந்தாள். ஸ்யூ தான் சென்ற பாதையின் அனுபவம், அந்தப் பெண்ணோடு அவளுடைய பாதையில் துணையாகச் செல்ல உதவியது. வேறெந்த நபராலும் கொடுக்கமுடியாத ஆறுதலை அவளால் கொடுக்க முடிந்தது. 'தேவன் என்னை எப்படி பயன்படுத்த முடியுமென்பதைத் தெரிந்து கொண்டேன்" என்று கூறினாள்.

நாம் ஏன் கடினமான பாதையில் வழிநடத்தப் படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், தேவன் நம்முடைய துன்பங்களை வேறுவகையில் பயன்படுத்துகின்றார். நம்முடைய சோதனையின் மத்தியில் அவரின் ஆறுதலையும் அன்பையும் தேடி அவரிடம் திரும்புவோமாயின், நாம் பிறருக்கு உதவியாயிருக்கும்படி நம்மை பெலப்படுத்துவார். பவுலும் தன்னுடைய சோதனைகளின் வழியே தேவனுடைய திட்டத்தைத் தெரிந்து கொண்டார். அது அவருக்கு தேவனிடமிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், பிறருக்கு ஆசீர்வாதமாக அதை பயன்படுத்தவும் வாய்ப்பளித்தது (2 கொரி. 1:4). நமக்கு வரும் துன்பங்களையும், வேதனைகளையும் நாம் தடுத்துவிட முடியாது. ஆனால், துன்பத்தின் வழியே தேவனுடைய வல்லமையைப் பெற்று, அதனை நன்மையான பணிக்கு பயன்படுத்துவோமாக.

பொக்கிஷத்தைத் தேடிப்பார்த்தல்

புதையுண்ட பொக்கிஷம் - இது கேட்பதற்கு ஏதோ குழந்தைகளின் கதைப்புத்தகத்தில் வருவது போல தோன்றுகிறது. ஆனால், வினோத குணம் படைத்த, கோடீஸ்வரரான ஃபாரஸ்ட் ஃபென் இரண்டு மில்லியன் டாலர் மதிப்புடைய நகைகளும், தங்கமும் நிரம்பப்பெற்ற பெட்டகமொன்றை பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் போட்டுவிட்டதாகக் கூறுகின்றார். அநேகர் அதனைத் தேடிச் சென்றனர். இந்த மறைந்த செல்வத்தைத் தேடிச் சென்ற நான்கு பேர் தங்கள் உயிரையும் இழந்தனர்.

நீதிமொழிகளை எழுதியவர் நம்மை நின்று சற்று யோசிக்குமாறு சொல்கின்றார். இத்தகையத் தேடலுக்கு உகந்ததுதானா இந்த பொக்கிஷம்? நீதிமொழிகள் 4ல் ஒரு தந்தை தன் மகனுக்கு, அவன் நன்றாய் வாழ்வதற்குத் தேவையானவற்றைக் குறித்து எழுதுகின்றார். எல்லாவற்றையும் காட்டிலும் ஞானமே தேடிக் கண்டடைய உகந்ததென குறிப்பிடுகின்றார் (வச. 7). ஞானத்தின் வழியில் ஒருவன் நடந்தால், அவன் நடைகளுக்கு இடுக்கண் வருவதில்லை, அவைகளில் ஓடினாலும் இடறமாட்டார்கள், அது அவன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்
(வச. 8-12) என்கின்றார்.

பல நூறு ஆண்டுகளுக்குப் பின் இயேசுவின் சீடனான யாக்கோபு ஞானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார். 'பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும், சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயுமிருக்கிறது (யாக். 3:17). நாம் ஞானத்தைத் தேடும்போது எல்லா நன்மைகளும் நம் வாழ்வில் செழித்தோங்குமெனக் குறிப்பிடுகின்றார்.

ஞானத்தைத் தேடுவது என்பது எல்லா ஞானத்திலும், அறிவிற்கும் காரணரான தேவனைத் தேடுவதற்குச் சமம். இவ்வுலகில் புதைந்துள்ள அனைத்து பொக்கிஷங்களையும் விட பரத்திலிருந்து வருகின்ற ஞானமே விலையேறப் பெற்றது.

பிறரோடு ஒப்பிடாதே

'ஒரு நாள் நான் எல்லாவற்றையும் குறித்து முகநூலில் பதிவிடப் போகிறேன் - நல்லவைகளை மட்டுமல்ல!" என என்னுடைய சிநேகிதி ஸ்யூ தன்னுடைய கணவனோடு உணவுவேளையில் பேசிக்கொண்டிருக்கையில் தெரிவித்தாள். இதனைக் கேட்ட நான் சத்தமாக சிரித்ததோடு, சிந்திக்கவும் ஆரம்பித்தேன். சமூக ஊடகங்கள் நல்லவைதான். நாம் பலமைல்களுக்கப்பாலுள்ள நண்பர்களோடு பல ஆண்டுகள் கழித்து தொடர்பு கொள்ளவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் உதவுகின்றன. ஆனால், நாம் அவற்றை கவனத்தோடு பயன்படுத்தாவிடில், வாழ்வைப் பற்றிய ஒரு மாயையை உருவாக்கிவிடும். ஒருவர் தம் வாழ்விலுள்ள மிகச் சிறந்த காரியங்களையே முகநூலில் பதிப்பதால், இதனைக் காணும் நாம் அவர்கள் வாழ்வில் பிரச்சனைகளேயில்லை எனவும், நம்முடைய வாழ்வு மட்டும் எங்கோ தவறுதலாகப் போய்க்கொண்டிருக்கிறது எனவும் நினைக்கும்படிச் செய்கின்றது.

நம்முடைய வாழ்வைப் பிறருடைய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மகிழ்ச்சியைக் குலைக்கும் ஒரு செயல். இயேசுவின் சீடர்களும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தபோது (லூக். 9:46;22:24), இயேசு உடனே அதனைத் தடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் பேதுருவிடம், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு அவர் எவ்வளவாய் பாடுபட வேண்டுமென தெரிவித்தார். உடனே அவன் யோவான் பக்கமாய் திரும்பி, 'ஆண்டவரே, இவன் காரியம் என்ன?" என்று கேட்டான். அதற்கு இயேசு 'நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா" என்றார் (யோவா. 21:21-22).

தேவையற்ற ஒப்பிட்டுப் பார்த்தலை பேதுரு தவிர்க்கும்படி, இயேசு வழிகாட்டுகின்றார். நம்முடைய இருதயமும், தேவன் மீதும் அவர் நமக்குச் செய்துள்ளவற்றின் மீதும் மட்டும் திருப்பப்படுமாயின் தன்னலமான எண்ணங்கள் தானாக விலகிவிடும், நாம் இயேசுவைப் பின்பற்ற விரும்புவோம். போட்டிகளின் அழுத்தத்தாலும் பளுவினாலும் நாம் இழுக்கப்படுவதற்குப் பதிலாக, அவர் நமக்கு அவருடைய அன்பு பிரசன்னத்தையும் சமாதானத்தையும் தருவார். தேவன் தரும் சமாதானத்திற்கு ஒப்பானது எதுவுமில்லை.