அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கட்தொகை அலுவலக அறிக்கைபடி, அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக பதினொன்று முதல் பன்னிரண்டு முறையாவது தங்களுடைய வாழும் இடத்தை மாற்றிக் கொள்வர். சமீபத்தில் ஓர் ஆண்டில் 28 மில்லியன் மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு மற்றொரு இடத்திற்கு நகர்ந்து புதிய வீட்டில் குடியேறியுள்ளனர்.
இஸ்ரவேலரின் 40 ஆண்டுகள் வனாந்திரப்பயணத்தில், ஒரே குடும்பமாகிய ஒரு தேசத்தின் மக்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, தேவனுடைய பிரசன்னம் வழிநடத்தியது. அவர்கள் ஒரு புதிய தேசத்தைச் சுதந்தரிக்கும் நம்பிக்கையோடு பிரயாணம் செய்தனர். இந்தக் காரியம் அடிக்கடி நடந்தது. அதனைக் குறித்து வேதத்தில் நாம் வாசிக்கும் போது வேடிக்கையாகவுள்ளது. அந்த மிகப் பெரிய குடும்பம் திரும்பத் திரும்ப தங்கள் உடைமைகளைக் கட்டுவதும், கட்டவழிப்பதும் நடந்தேறிக் கொண்டேயிருந்தது. அவர்களுடைய உடைமைகளை மட்டுமல்ல, மேகத்திலிருந்து தேவன் மோசேயைச் சந்தித்த தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் மற்றும் உடன்படிக்கைப் பெட்டி ஆகியவற்றையும், அவற்றின் விரிப்புகளையும் கட்டிக் கொண்டுச் சென்றனர் (யாத். 25:22).
அநேக ஆண்டுகளுக்குப் பின்னர் இயேசு, இஸ்ரவேலரின் பிரயாண நாட்களுக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தார். ஒரு மேகத்திலிருந்து வழிநடத்துவதற்குப் பதிலாக அவரே நேரில் வந்தார். அவர், ‘என்னைப் பின்பற்றி வா” (மத். 4:19) என்று சொன்ன போது மிக முக்கியமான முகவரி மாற்றம் அவர்களுடைய இருதயத்தில் ஏற்படும்படிச் செய்தார். நண்பர்களையும், எதிரிகளையும் ஒரு ரோம சிலுவையின் அடிவாரத்திற்கு வழி நடத்திச் சென்று, மேகத்தில் தோன்றிய தேவன், அவருடைய ஆசரிப்பு கூடாரத்தில் பேசிய கர்த்தர், எவ்வாறு அவர்களை மீட்கப் போகின்றாரென்பதைக் காண்பித்தார்.
தம் முகவரியை மாற்றுவது போல, இருதயத்தின் அசைவுகளும் நிலையானதல்ல. ஆனால், ஒரு நாள் நம் தந்தையின் வீட்டிலுள்ள ஜன்னல் வழியே நாம் கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது, இயேசு நம்மை எத்தனை தூரம் வழிநடத்தி வந்துள்ளார் என்பதைக் காண்போம்.
இயேசுவைப் பின்பற்றலாம் என்ற தீர்மானம் என்னென்ன வழியில் உன்னை விலகச் செய்கிறது? அவர் மீதுள்ள நம்பிக்கையையும் உன்னுடைய விசுவாசத்தையும் பெலப்படுத்த
ஜெபம் எப்படி உதவுகின்றது?