2006 ஆம் ஆண்டிலிருந்து ஒரு கூட்ட மக்கள் புதிய வருடத்தையொட்டி ஒரு நாளில் ஒரு வித்தியாசமான நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். அது தான் மனதின் கறைகளை நீக்கும் தினம். லத்தீன்-அமெரிக்க கலாச்சாரத்தைத் தழுவி, கடந்த ஆண்டில் மக்கள் தங்கள் மனதில் படிந்துள்ள மனவருத்தங்கள், விரும்பத்தகாத நினைவுகள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை காகிதத்தில் எழுதி துண்டுகளாக்கி குப்பையில் சேர்த்து விடுவர், அல்லது ஒரு கனமான சுத்தியலால் அடித்துச் சிதைத்து விடுவர்.

சங்கீதம் 103ல் சங்கீதக்காரன், மக்கள் தங்கள் மனதிலுள்ள விரும்பத்தகாத எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிடும்படி வலியுறுத்துகின்றார். தேவன் நம்முடைய பாவங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றார் என நினைவுபடுத்துகின்றார். தேவன் தம் ஜனங்களின் மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பினை விளக்க, சில காட்சிகளை வார்த்தைகளில் கொண்டு வருகின்றார். அவர் தேவனுடைய பரந்த அன்பினை விளக்க, பூமிக்கும் வானத்திற்குமுள்ளத் தூரத்தை ஒப்பிடுகின்றார் (வச. 11). சங்கீதக்காரன் தேவனுடைய மன்னிக்கும் சிந்தையை வளிமண்டல பொருட்களோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். சூரியன் உதிக்கும் இடத்திற்கும், சூரியன் மறையும் இடத்திற்குமுள்ள தொலைவில் முழு பாவங்களையும் அகற்றிவிட்டார் (வச. 12) என்கின்றார். தேவன் தம் ஜனங்களின் மீது கொண்டுள்ள அன்பும், அவருடைய மன்னிக்கும் சிந்தையும் முழுமையானது, முடிவில்லாதது என்கின்றார். தேவன் தம் ஜனங்களை அவர்களின் மீறுதல்களின் வல்லமையிலிருந்து முற்றிலும் மீட்டு அவர்களை முழுமையாக மன்னிக்கின்றார்.

என்ன ஒரு நல்ல செய்தி! நாம் நம் பாவக்கறைகளை அகற்றிட புதிய வருடம் வரும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தோடு, நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவத்திலிருந்து மனம் திரும்புவோமாகில் அவர் நம் பாவங்களை அகற்றி, அவற்றைக் கடலின் ஆழங்களில் போட்டுவிடுகி;றார். இன்றே நமது கறைநீக்கும் தினம்.