நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது என்னுடைய விருப்பமான கால்பந்த குழு எட்டு முறை தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. ஓவ்வொரு முறை தோற்கும் போதும், இவர்கள் மீண்டும் இதே காலத்தில் வெற்றியைப் பெற மடியும் என நம்புவதற்கு கடினமாயிருந்தது. ஒவ்வொரு வாரமும் பயிற்சியாளர் சில மாற்றங்களைக் கொடுத்தார். ஆனால், அவையொன்றும் வெற்றியைத் தரவில்லை. என்னுடன் பணிபுரிபவர்களோடு நான் உரையாடிக் கொண்டிருந்தபோது வேடிக்கையாக, “வெறும் நம்பிக்கை மட்டும் வெற்றியைக் கொண்டு வந்து விடாது, நம்பிக்கை ஒரு போர்கலையல்ல” என நகைச்சுவையாகக் கூறினேன்.

ஒருவேளை இது கால்பந்து விளையாட்டிற்கு உண்மையாயிருக்கலாம். ஆனால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் இது நேர்மாறானது. தேவன் மீது நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதோடு மட்டுமல்ல, அவரைப் பற்றிக் கொள்வதும், விசுவாசமாயிருப்பதுமே வெற்றியின் இரகசியம். இந்த உலகம் நம்மை ஏமாற்றமடையச் செய்கின்றது. ஆனால், நம்பிக்கை நம்மை தேவனுடைய உண்மையின் மீது உறுதியாயிருக்கச் செய்து, கொந்தளிக்கும் நேரங்களில் நம்மை இயங்கச் செய்கின்றது.

மீகா இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டார். இஸ்ரவேலர் தேவனைவிட்டு அந்நிய தெய்வங்களிடம் திரும்பிய போது, அவர் மனமுடைந்து போனார். “ஐயோ… தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப் போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை” (7:1-2) எனப் புலம்புகின்றார். பின்னர் அவர் தன் உண்மையான நம்பிக்கையின் மீது கவனத்தைக் கொண்டு வந்து, “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” (வச. 7) என்கின்றார்.

கடினமான வேளைகளில் நம்பிக்கையை விடாதிருக்க என்ன செய்யலாம்? மீகா நமக்கு வழிகாட்டுகின்றார் கவனி, காத்திரு, ஜெபி, தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர். நம்முடைய சூழ்நிலைகள் நம்மை மேற்கொண்டாலும் தேவன் நம் கதறலைக் கேட்கின்றார். இத்தகைய நேரங்களில் தேவனைப் பற்றிக் கொண்டு, நாம் தேவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையோடு செயல்படுவதே நமது வெற்றி. நம் வாழ்கையில் புயலை மேற்கொள்ள இந்த ஒரே போர்க் கலைதான் நமக்கு உதவமுடியும்.