கண்ணுக்குப் புலப்படாத ஊழியம்
ஒரு பெரிய கல்வித்திட்டம் எனக்கு மிக மன அழுத்தத்தைத் தந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க முடியுமா என்று அதிக கவலைப்பட்டேன். சவாலான அந்த நேரத்தில் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த என் நண்பர்களிடமிருந்து மூன்று உற்சாகக் குறிப்புகளைப் பெற்றேன். ஒவ்வொரு குறிப்பும் “இன்று ஜெபம் செய்யும்போது தேவன் உன்னைப் பற்றி நினைவுபடுத்தினார்” என்று தெரிவித்தது. என் மன நிலையைப்பற்றித் தெரியாமலேயே இந்த நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டதால் தாழ்மையையும், உற்சாகத்தையும் ஒருசேர உணர்ந்தேன். தேவன் அவரின் அன்பின் தூதுவர்களாக அவர்களை உபயோகப்படுத்தியதாக நம்பினேன்.
கொரிந்து சபை மக்களுக்குக் கடிதம் எழுதியபோது ஜெபத்தின் வல்லமையை பவுல் அப்போஸ்தலர் அறிந்திருந்தார். “விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி” செய்ததுபோல தேவன் மரணத்தினின்றும் எங்களைத் தப்புவிப்பார் என்றார் (2 கொரி. 1:10-11). தேவன் அவர்கள் ஜெபங்களைக் கேட்டபோது, அநேகர் ஸ்தோத்திரம் செலுத்தியதால் அவர் மகிமைப்படுத்தப்படுவார் (வச. 11). மன்றாட்டு ஊழியத்தில் பவுலின் ஆதரவாளர்களும், என் நண்பர்களும் ஈடுபட்டார்கள். இந்த மன்றாட்டு ஊழியத்தை ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் “கனி கொடுப்பதின்மூலம் பிதாவை மகிமைப்படுத்தும், கண்ணுக்குப் புலப்படாத ஊழியம்” என்கிறார். நமது சிந்தையையும், இருதயத்தையும் இயேசுவில் ஒருமுகப்படுத்தும்போது, நாம் எப்படி ஜெபிக்கிறோம் என்பது உள்பட எப்படி அவர் நம்மை சீர்படுத்துகிறார் என்பதும் நமக்குத் தெரியும். மன்றாட்டு என்ற உண்மையான வெகுமதியை நாம் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், முன்பின் தெரியாதவர்களுக்கும்கூட அளிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
யாருக்காகவேனும் ஜெபம் செய்ய தேவன் உங்கள் சிந்தையையும் இருதயத்தையும் ஏவி இருக்கிறாரா?
தவறான பக்கத்தில்?
கானா தேசத்தில், டெக்கிமான் என்ற இடத்திற்குச் செல்ல போடப்படிருந்த பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. டானோ ஆற்றின் மறு கரையில் உள்ள நியூ க்ரோபோ பகுதி வேறு சாலை வசதி இல்லாமல் துண்டிக்கப்பட்டது. போதகர் சாமுவேல் அப்பையாவின் ஆலயத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. ஏனென்றால் அவரது சபையின் அனேக அங்கத்தினர்கள் நியூ க்ரோபோவில் – ஆற்றின் “மறுபக்கம்” வசித்தார்கள்.
இந்தப் பிரச்சனையின் நடுவில், ஆலயத்தின்கீழ் இயங்கும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இன்னும் பல ஆதரவற்ற குழந்தைகளை சேர்க்க போதகர் சாமுவேல் முயன்று கொண்டிருந்தார். எனவே அவர் ஜெபித்தார். அவரது ஆலயம் ஆற்றின் மறு பக்கத்தில் உள்ள நியூ க்ரோபோவில் திறந்தவெளிக் கூட்டங்களை ஏற்பாடு செய்தது. சிறிது காலத்திலேயே அவர்கள் புது விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஒரு புதிய சபை ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நியூ க்ரோபோவில் இடம் ஒதுக்கப்பட்டது. பிரச்சனையினூடே தேவன் தம்முடைய மீட்புப் பணியை ஒருங்கிணைத்தார்.
சுதந்தரத்தின் “மறுபக்கத்தில்” பவுல் இருந்தபோது, (சிறையிலடைக்கப்பட்ட போது) தன்னுடைய நிலையைக் குறித்து அவர் புலம்பவில்லை. பிலிப்புவில் உள்ள சபைக்கு, “சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று” என்று கடிதம் எழுதினார் (பிலிப்பியர் 1:12). அவரது கட்டுகள் “அரமனையெங்கும் உள்ளவர்கள்” கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ள உதவியதாகக் கூறுகிறார் (வச. 13). அதனால் இயேசுவைக் குறித்த நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள மற்றவர்களும் துணிவு பெற்றார்கள்
(வச. 14).
தடங்கல்கள் வந்தபோதும், போதகர் சாமுவேலும், பவுல் அப்போஸ்தலரும், தங்கள் பிரச்சனைகளினூடே பணிசெய்ய புது வழியை தேவன் காட்டியதை உணர்ந்தார்கள். நாம் இன்று எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலைகளில் தேவன் எப்படி இடைபடுகிறார்?
கடினமான உரையாடல்கள்
ஒருமுறை வீட்டிலிருந்தபடியே எங்கள் நிறுவனத்திற்காகப் பணிபுரியும் ஒருவரை நேரில் சந்திக்க 50 மைல் தூரம் காரை ஓட்டிச் சென்றேன். எங்கள் நிறுவனத்தின் பெயரை அவர் தவறுதலாக பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்டதால், எங்கள் நிறுவனத்திற்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுவிடக்கூடாதென்று கவலைப்பட்டேன். அவர் என்ன முடிவெடுக்க விரும்புகிறார் என்பதைப் பற்றி அவரிடம் பேச எனக்கு ஒரு உந்துதல் இருந்தது.
ஒரு மோசமான முடிவெடுக்க இருந்த இஸ்ரவேலின் எதிர்கால அரசரை, ஒரு சாதாரண நபர் துணிச்சலோடு எதிர்கொண்டதை 1 சாமுவேல் 25ல் வாசிக்கிறோம். நாபால், அபிகாயில் என்ற பெண்ணின் கணவன். ‘முட்டாள்’ என்ற அர்த்தம் கொண்ட அவன் பெயருக்கேற்றபடியே அவன் நடந்துகொண்டான் (வச. 3, 25). அவனுடைய மந்தைகளைக் காத்துக்கொண்டதற்காக வழக்கமாகக் கொடுக்கும் ஊதியத்தை தாவீதுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் கொடுக்க மறுத்தான் (வச.10-11). அவள் குடும்பத்தின்மேல் கொலைவெறியோடு பழிவாங்க தாவீது திட்டமிடுகிறான் என்று கேள்விப்பட்ட அபிகாயில், தன் கணவன், தான் சொல்வதைக் கேட்கமாட்டான் என்று தெரிந்து, சமாதானக் கொடையாக, அனேக பொருட்களை எடுத்துக்கொண்டு, கழுதையின்மேல் பயணித்து, தாவீதை சந்தித்து, அவன் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டினாள் (வச. 18-31).
அபிகாயில் எப்படி இதை சாதித்தாள்? தாவீதும் அவரோடு இருப்பவர்களும் சாப்பிடும்படியாகவும், தன் கணவன் செலுத்தவேண்டிய கடனை அடைக்கும்படியாகவும், தனக்கு முன்னாக கழுதைகளின்மேல் உணவுப்பொருட்களை ஏற்றி அனுப்பி, தாவீதை சந்தித்தபோது, அவரிடம் உண்மையைப் பேசினாள். தாவீது தேவன் தெரிந்தகொண்ட மனிதர் என்பதை விவேகமாக அவருக்கு நினைவுபடுத்தினாள். பழிவாங்கும் எண்ணத்தை அவர் கைவிட்டால், தேவன் அவரை ராஜாவாக நியமிக்கும்போது “விருதாவாய் இரத்தம் சிந்தாமலும்....பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது” என்று கூறினாள் (வச. 31).
மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, அல்லது தேவனுக்காகச் அவர்கள் பின்னாளில் செயல்படுவதற்குத் தடையாக இருக்கும் விதத்தில், தவறுசெய்யும் எண்ணத்தில் இருக்கும் யாரையாவது உங்களுக்குத் தெரியலாம். அபிகாயிலைப்போல, ஒரு வெளிப்படையான உரையாடலுக்கு தேவன் உங்களை அழைக்கிறாரா?
கட்டுவதை நிறுத்தவேண்டாம்!
தன் அலுவலகத்தில் ஒரு புதிய பொறுப்பு தரப்பட்டபோது, அதை தனக்கு கிடைத்த தேவ ஈவாக சைமன் நினைத்தார். அதைக்குறித்து ஜெபித்து, ஆலோசனை பெற்றபோது, இன்னும் பெரிய பொறுப்புகளைத் தருவதற்காக இந்த வாய்ப்பை தேவன் ஏற்படுத்தித் தருவதாக நினைத்தார். எல்லாம் சரியாக நடந்தது. அவரது மேலதிகாரியும் அவருக்கு ஆதரவளித்தார். ஆனால் விரைவிலேயே எதிர்ப்புகள் ஏற்பட்டன. அவருக்குக் கிடைத்த பணி உயர்வை விரும்பாத உடன் வேலை பார்க்கும் சிலர் அவருடன் ஒத்துழைக்க மறுத்தனர். தன் முயற்சிகளைக் கைவிட நினைத்தார்.
தேவனின் ஆலயத்தைக் கட்ட இஸ்ரவேலர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, எதிரிகள் அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாக்கவும், அவர்களை பயமுறுத்தவும் முயன்றனர் (எஸ்றா 4:4). முதலில் வேலையை நிறுத்திய இஸ்ரவேலர்கள், ஆகாய், சகரியா தீர்க்கதரிசிகள்மூலம் தேவன் அளித்த ஊக்கத்தினால் மீண்டும் தொடர்ந்தனர் (4:24-5:2).
மீண்டும் எதிரிகள் அவர்களை தொந்தரவு செய்தனர். ஆனால் இந்த முறை “தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருப்பதை” (5:5) அறிந்து, தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். தேவனின் ஆலோசனைகளை அவர்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டு, எதிர்ப்புகள் நடுவே அவர் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். தேவாலயத்தைக் கட்டி முடிக்க உதவும்படி தேவன் பெர்சிய ராஜாவை ஏவினார்
(வச. 13-14).
அதேபோல், சைமனும் தான் அதே அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரிய வேண்டுமா அல்லது வேறு வேலைக்குச் செல்ல வேண்டுமா என்று வழிநடத்துதலைப் பெற தேவனின் ஞானத்தை சார்ந்திருந்தார். அதே அலுவலகத்தில் தொடர தேவன் வழிநடத்தியதால், அங்கு தொடர்ந்து பணிபுரிய தேவனின் பெலனை நம்பினார். சிறிதுகாலம் சென்றபின், அவர் உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார்.
நாம் தேவனைப் பின்பற்றும்போது, அவர் நம்மை வைக்கும் இடத்தில் நாம் எதிர்ப்புகளை சந்திக்க நேரலாம். அதுபோன்ற சமயங்களில்தான் நாம் அவரை சார்ந்திருக்க வேண்டும். அவர் நமக்கு ஆலோசனை சொல்லி நம்மை வழிநடத்துவார்.