நற்செய்தி பிரசங்கிப்பது தடை செய்யப்பட்டுள்ள, கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் ஏமி வசிக்கிறாள். பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் செவிலியாக ஒரு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறாள். அவள் தன்னுடைய பணியை சிறப்பாகவும், அர்ப்பணிப்போடும் செய்வதால் அவள் தனித்துத் தெரிவாள். இதனால் பல பெண்கள் அவளைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக, தனிமையில் அவளிடம் பல கேள்விகள் கேட்பார்கள். அப்போது ஏமி தன் இரட்சகரைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்துகொள்வாள்.
அவளுக்கிருக்கும் நல்ல பெயரைப் பார்த்து பொறாமை கொண்ட உடன் பணியாளர்கள், அவள் சில மருந்துகளைத் திருடியதாக குற்றம் சாட்டினார்கள். அவளது மேலதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. இறுதியில் யார் திருடியது என்று கண்டுபிடித்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஏமியின் விசுவாசம் குறித்து அவளுடன் பணியாற்றும் செவிலியர்கள் அவளிடம் கேட்டார்கள். ஏமியின் அனுபவம், பேதுரு சொன்னதை எனக்கு நினைவுபடுத்தியது: “பிரியமானவர்களே, புறஜாதிகள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றின் நிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடத்தையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (1 பேது. 2:11-12).
தேவன் நம்மில் கிரியை செய்ய நாம் அனுமதிக்கும்போது, வீட்டில், பணித்தளத்தில் அல்லது பள்ளியில் நம் செயல்கள் மற்றவர்கள்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் எப்படிப் பேசுகிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை கவனிக்கும் மனிதர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள். நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் தேவன் ஆட்கொள்ளும் விதமாக அவரை சார்ந்திருப்போமாக. அதன் விளைவாக விசுவாசம் இல்லாதவர்களை நாம் இயேசுவிடம் வழிநடத்தலாம்.
நம் வார்த்தைகளைவிட நம் வாழ்க்கையே அதிகம் பேசும்.