தண்டுவடத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மார்டி, மீண்டும் கல்லூரியில் சேர்ந்து மேலாண்மை பட்டம் (MBA) பெற விரும்பினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற அவன் அம்மா ஜூடி உறுதுணையாக இருந்தார். ஒவ்வொரு வகுப்பிலும், பாட கலந்துரையாடல் குழுவிலும் அவனுடனேயே இருந்து அவனுக்காக அவன் அம்மா குறிப்புகள் எடுத்தார். அவன் பட்டம் பெறும்போது மேடைக்கு ஏறுவதில்கூட உதவினார். மார்டிக்கு முடியாததாகத் தோன்றிய காரியம் அவன் அம்மா தொடர்ந்து செய்த உதவியால் சாத்தியமாயிற்று.

இந்த உலகை விட்டுப் போனபிறகு தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு இதேபோன்ற உதவி தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர்களை விட்டுப் பிரிவதைப் பற்றி முன்பே கூறிய அவர், பரிசுத்த ஆவியானவர்மூலமாக தேவனுடன் புதிய உறவைப் பெறுவார்கள் என்று கூறினார். இந்த ஆவியானவர் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உடன் இருந்து உதவுபவர். ஆசிரியரும் வழிகாட்டியுமான அவர், அவர்களோடு இருப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குள்ளும் வாசம் செய்வார் (யோவா. 14: 17, 26).

நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள இயேசுவின் சீஷர்கள் பிரிந்து சென்றபோது தங்களால் கையாள முடியாத காரியங்களை தாங்கிக்கொள்ள, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு தேவனின் உதவியைப் பெற்றுத்தந்தார். போராட்டம் மிகுந்த தருணங்களில், இயேசு சொன்னதை ஆவியானவர் அவர்களுக்கு நினைவுபடுத்துவார் (வச. 26): உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக….நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்…நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.

உங்கள் பெலனையும், திறனையும் மீறிய விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ளுகிறீர்களா? ஆவியானவரின் தொடர்ந்த உதவியை நீங்கள் சார்ந்திருக்கலாம். உங்களில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் தேவனை மகிமைப்படுத்துவார்.