ஒரு பெரிய கல்வித்திட்டம் எனக்கு மிக மன அழுத்தத்தைத் தந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க முடியுமா என்று அதிக கவலைப்பட்டேன். சவாலான அந்த நேரத்தில் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த என் நண்பர்களிடமிருந்து மூன்று உற்சாகக் குறிப்புகளைப் பெற்றேன். ஒவ்வொரு குறிப்பும் “இன்று ஜெபம் செய்யும்போது தேவன் உன்னைப் பற்றி நினைவுபடுத்தினார்” என்று தெரிவித்தது. என் மன நிலையைப்பற்றித் தெரியாமலேயே இந்த நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டதால் தாழ்மையையும், உற்சாகத்தையும் ஒருசேர உணர்ந்தேன். தேவன் அவரின் அன்பின் தூதுவர்களாக அவர்களை உபயோகப்படுத்தியதாக நம்பினேன்.
கொரிந்து சபை மக்களுக்குக் கடிதம் எழுதியபோது ஜெபத்தின் வல்லமையை பவுல் அப்போஸ்தலர் அறிந்திருந்தார். “விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி” செய்ததுபோல தேவன் மரணத்தினின்றும் எங்களைத் தப்புவிப்பார் என்றார் (2 கொரி. 1:10-11). தேவன் அவர்கள் ஜெபங்களைக் கேட்டபோது, அநேகர் ஸ்தோத்திரம் செலுத்தியதால் அவர் மகிமைப்படுத்தப்படுவார் (வச. 11). மன்றாட்டு ஊழியத்தில் பவுலின் ஆதரவாளர்களும், என் நண்பர்களும் ஈடுபட்டார்கள். இந்த மன்றாட்டு ஊழியத்தை ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் “கனி கொடுப்பதின்மூலம் பிதாவை மகிமைப்படுத்தும், கண்ணுக்குப் புலப்படாத ஊழியம்” என்கிறார். நமது சிந்தையையும், இருதயத்தையும் இயேசுவில் ஒருமுகப்படுத்தும்போது, நாம் எப்படி ஜெபிக்கிறோம் என்பது உள்பட எப்படி அவர் நம்மை சீர்படுத்துகிறார் என்பதும் நமக்குத் தெரியும். மன்றாட்டு என்ற உண்மையான வெகுமதியை நாம் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், முன்பின் தெரியாதவர்களுக்கும்கூட அளிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
யாருக்காகவேனும் ஜெபம் செய்ய தேவன் உங்கள் சிந்தையையும் இருதயத்தையும் ஏவி இருக்கிறாரா?
தேவன் தம் ஜனங்களின் ஜெபங்களைக் கேட்கிறார்.