ஒருமுறை வீட்டிலிருந்தபடியே எங்கள் நிறுவனத்திற்காகப் பணிபுரியும் ஒருவரை நேரில் சந்திக்க 50 மைல் தூரம் காரை ஓட்டிச் சென்றேன். எங்கள் நிறுவனத்தின் பெயரை அவர் தவறுதலாக பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்டதால், எங்கள் நிறுவனத்திற்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுவிடக்கூடாதென்று கவலைப்பட்டேன். அவர் என்ன முடிவெடுக்க விரும்புகிறார் என்பதைப் பற்றி அவரிடம் பேச எனக்கு ஒரு உந்துதல் இருந்தது.
ஒரு மோசமான முடிவெடுக்க இருந்த இஸ்ரவேலின் எதிர்கால அரசரை, ஒரு சாதாரண நபர் துணிச்சலோடு எதிர்கொண்டதை 1 சாமுவேல் 25ல் வாசிக்கிறோம். நாபால், அபிகாயில் என்ற பெண்ணின் கணவன். ‘முட்டாள்’ என்ற அர்த்தம் கொண்ட அவன் பெயருக்கேற்றபடியே அவன் நடந்துகொண்டான் (வச. 3, 25). அவனுடைய மந்தைகளைக் காத்துக்கொண்டதற்காக வழக்கமாகக் கொடுக்கும் ஊதியத்தை தாவீதுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் கொடுக்க மறுத்தான் (வச.10-11). அவள் குடும்பத்தின்மேல் கொலைவெறியோடு பழிவாங்க தாவீது திட்டமிடுகிறான் என்று கேள்விப்பட்ட அபிகாயில், தன் கணவன், தான் சொல்வதைக் கேட்கமாட்டான் என்று தெரிந்து, சமாதானக் கொடையாக, அனேக பொருட்களை எடுத்துக்கொண்டு, கழுதையின்மேல் பயணித்து, தாவீதை சந்தித்து, அவன் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டினாள் (வச. 18-31).
அபிகாயில் எப்படி இதை சாதித்தாள்? தாவீதும் அவரோடு இருப்பவர்களும் சாப்பிடும்படியாகவும், தன் கணவன் செலுத்தவேண்டிய கடனை அடைக்கும்படியாகவும், தனக்கு முன்னாக கழுதைகளின்மேல் உணவுப்பொருட்களை ஏற்றி அனுப்பி, தாவீதை சந்தித்தபோது, அவரிடம் உண்மையைப் பேசினாள். தாவீது தேவன் தெரிந்தகொண்ட மனிதர் என்பதை விவேகமாக அவருக்கு நினைவுபடுத்தினாள். பழிவாங்கும் எண்ணத்தை அவர் கைவிட்டால், தேவன் அவரை ராஜாவாக நியமிக்கும்போது “விருதாவாய் இரத்தம் சிந்தாமலும்….பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது” என்று கூறினாள் (வச. 31).
மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, அல்லது தேவனுக்காகச் அவர்கள் பின்னாளில் செயல்படுவதற்குத் தடையாக இருக்கும் விதத்தில், தவறுசெய்யும் எண்ணத்தில் இருக்கும் யாரையாவது உங்களுக்குத் தெரியலாம். அபிகாயிலைப்போல, ஒரு வெளிப்படையான உரையாடலுக்கு தேவன் உங்களை அழைக்கிறாரா?
தேவனைப் பின்பற்றுவது சில சமயங்களில் கடினமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.