காலின்ஸ் என்பவர் 2005ல் ஒரு அறிக்கையை வேண்டுமென்றே தவறாக திரித்து எழுதியதால், மெக்கீ என்பவர் நான்கு ஆண்டுகள் சிறைக்கு செல்லவேண்டியதாயிற்று. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் காலின்ஸை “துன்புறுத்த வேண்டும்” என்று மெக்கீ சபதம் எடுத்தார். மெக்கீ மேல் எந்தத் தவறும் இல்லை என்று தீர்ப்பாகி சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். இதற்கிடையில் காலின்ஸ் இதுபோல் தவறாகத் தயார் செய்த அறிக்கைகள் பற்றித் தெரிய வந்ததால், அவர் வேலை பறிக்கப்பட்டு, அவரும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால் இருவருமே சிறையில் இருக்கும்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.

இரண்டு பேருமே நம்பிக்கை சார்ந்த ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது 2015ல் தெரியவந்தது. “நான் செய்த காரியத்துக்காக வருத்தப்படுகிறேன் என்று சொல்வதைத் தவிர என்னால் எந்தவிதமான விளக்கமும் அளிக்கமுடியாது,” என்று மெக்கீயிடம் சொன்னதாக காலின்ஸ் பின்னர் கூறினார். “அதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று கூறிய மெக்கீ, காலின்ஸை மன்னித்தார். இருவருமே ஆண்டவரின் விலைமதிக்க முடியாத அன்பையும், “கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோசேயர் 3:13)என்று கற்றுத்தரும் தேவனின் மன்னிப்பையும் அனுபவித்ததால், சமரசம் செய்துகொள்ள முடிந்தது.

இப்போது அவர்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். “ஒருவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், உங்கள் இறுமாப்பைப் புறந்தள்ளிவிட்டு மன்னிப்பு கேளுங்கள் என்று உலகத்தாருக்குச் சொல்வதே எங்கள் இருவரின் கூட்டுக் குறிக்கோளாக இருக்கிறது” என்று காலின்ஸ் கூறினார். “யார் மீதாவது உங்களுக்கு வருத்தம், கோபம் இருந்தால், அந்த கசப்பான உணர்ச்சிகளை விட்டுத் தள்ளுங்கள்; ஏனென்றால் அது அவர்களைக் காயப்படுத்துவதாக நினைத்து நீங்கள் விஷம் குடிப்பது போன்றதாகும்.”

தேவன் தம்மை விசுவாசிப்பவர்களை அமைதியிலும், ஒருமைப்பாட்டிலும் வாழும்படி சொல்கிறார். நமக்கு “யார் மீதாவது மனஸ்தாபம்” இருக்குமென்றால், அதை நாம் தேவனிடம் சொல்லிவிடலாம். அவர் சமரசம் செய்வார் (வச. 13-15; பிலிப். 4:6-7)