Archives: அக்டோபர் 2018

எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படுதல்

பல ஆண்டுகளாக தன் பாடங்களைப் படிக்க அதிக சிரமப்பட்ட ஏஞ்சி அவள் படித்துக்கொண்டிருந்த மிகச்சிறந்த, பிரத்தியேக பள்ளியில் இருந்து, ஒரு “சாதாரண” பள்ளிக்கு மாற்றப்பட்டாள். அதிக போட்டி மிகுந்த சிங்கப்பூரின் பள்ளிக்கல்வியில், “நல்ல” பள்ளியில் படிப்பது எதிர்காலத்திற்கு நல்லது என்றாலும், இந்த சம்பவத்தை பலர் ஒரு தோல்வியாகக் கருதுவார்கள்.

ஏஞ்சியின் பெற்றோர் அதிக ஏமாற்றம் அடைந்தார்கள். ஏஞ்சியும் தன் நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டதாக உணர்ந்தாள்.  ஆனால் புதிய பள்ளியில் சேர்ந்த சில நாள்களிலேயே சாதாரண பிள்ளைகள் மத்தியில் படிப்பது எப்படி இருக்கும் என்று உணர்ந்தாள். “அம்மா, இதுதான் எனக்கு ஏற்ற இடம்,” என்றாள். “இங்குதான் என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!”

இயேசு சகேயுவின் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்தபோது, அந்த ஆயக்கார தலைவர் எப்படி உணர்ந்திருப்பார் (லூக்கா 19:5) என்பதை ஏஞ்சி குறித்த சம்பவம் எனக்கு நினைவுபடுத்தியது. தங்களிடம் குறை உண்டு என்றும் தங்களுக்கு கடவுளின் கிருபை பெற தகுதி இல்லை என்றும் உணர்ந்தவர்களுடன் சாப்பிடுவதை கிறிஸ்து விரும்பினார். நம்மைக் கண்டுகொண்டு, நாம் இருக்கிறபடியே நம்மை நேசிக்கும் இயேசு, அவரின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின்மூலம் பூரணத்துவத்தைத் தருவதாக நமக்கு உறுதி அளிக்கிறார். அவர் கிருபையினால் மட்டுமே நாம் மாசற்ற முழுநிறைவைப் பெறமுடியும்.

கடவுளின் நேர்த்தியான தன்மையிலிருந்து நான் குறைவாகவே காணப்படுகிறேன் என்பதை நான் அறிவதால், பல வேளைகளில் என் ஆவிக்குரிய பயணம் ஒரு கடினமான பயணமாகவே இருக்கிறது. நாம் இருக்கிறபிரகாரமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம். ஏனென்றால், நாம் இயேசுவைப் போல மாற, பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பண்படுத்துகிறார்.

உங்கள் படகுகளைக் கொண்டு வாருங்கள்

ஹார்வி என்ற சூறாவளிப்புயல் 2017ல் வந்தபோது, பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம்  கிழக்கு டெக்சஸைச் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, பலர் வெள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல், தங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த மாகாணத்திலிருந்தும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலரும் தனிப்பட்ட முறையில் தங்கள் படகுகளில் வந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற உதவினர். இவர்களை மக்கள் “டெக்சஸ் கப்பற்படை” என்று அழைத்தனர்.

தைரியம் மற்றும் தயாள குணம் கொண்ட இந்த ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்கள், நீதிமொழிகள் 3:27 ல், முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவும்படி நாம் அறிவுறுத்தப்படுவதை நினைவுக்குக் கொண்டுவருகிறது. தங்கள் படகுகளைக் கொண்டுவந்து மற்றவர்களுக்கு உதவ அவர்களுக்கு செயல்திறன் இருந்தது. அதை  அவர்கள் பயன்படுத்தினார்கள். தங்களிடம் இருந்த சாதனங்களையும், செயல்திறன்களையும் மற்றவர்களின் நலனுக்காக உபயோகிக்கும் மனோபாவத்தை அவர்கள் செயல்கள் வெளிப்படுத்துகின்றன.

சில சமயங்களில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்கு நமக்கு போதிய சாமர்த்தியம் இல்லை என்று நாம் நினைக்கலாம். மற்றவர்களுக்கு உதவ நமக்கு திறமை, சாமர்த்தியம், அனுபவம், அல்லது நேரம் இல்லை என்று நினைத்து நாம் பயப்படுகிறோம். இதுபோன்ற சமயங்களில் நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டு, மற்றவர்களுக்கு எந்த வகையில் நாம் உதவ முடியும் என்று கவனிக்கத் தவறுகிறோம். டெக்சஸ் கப்பற்படையினால் வெள்ளம் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை. அரசு உதவி செய்யவேண்டும் என்று சட்டம் இயற்ற முடியவில்லை. ஆனால் சக மனிதர்களைக் காப்பாற்ற, தங்களிடம் இருந்த ஒன்றை உபயோகித்தனர் – அவை படகுகள்! மேலான இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல நம்மிடம் இருக்கும் “படகுகளை” – அது எதுவாக இருந்தாலும் – உபயோகிப்போமாக..

ஊடுருவக் குத்தும் முள்

ஒரு முள் என் ஆள்காட்டி விரலைக் குத்தியதில் ரத்தம் வந்தது. நான் வலியில் சத்தமிட்டதோடு, தன்னிச்சையாக என் கையை இழுத்துக்கொண்டேன். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தோட்ட வேலைக்கான கையுறை அணியாமல், முள் செடியை கத்தரித்தால் இதுதானே நடக்கும்.

என் விரலில் இருந்த வலியையும், அதிலிருந்து வழிந்த ரத்தத்தையும் உடனடியாக கவனிக்க வேண்டியதிருந்தது. காயத்தைக் கட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக, என் இரட்சகரைப் பற்றி சிந்தித்தேன். ஏனென்றால், போர்ச்சேவகர் இயேசுவுக்கு முழுவதும் முட்களினால் ஆன கிரீடத்தை அணியச் செய்தார்களே (யோவான் 19:1-3). ஒரு முள் இவ்வளவு வலியைக் கொடுத்தால், முட்களால் ஆன ஒரு கிரீடம் எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் அனுபவித்த சரீரப் பிரகாரமான வலியில் அது ஒரு சிறு பகுதியே. அவர் முதுகை ஒரு வார் தாக்கியது. ஆணிகள் அவர் மணிக்கட்டுகளையும், கணுக்கால்களையும் ஊடுருவின. ஒரு ஈட்டி அவர் விலாவை ஊடுருவியது.

ஆனால் இயேசு ஆவிக்குரிய வலியையும் சகித்தார். ஏசாயா 53ல், ஐந்தாம் வசனம் “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது” என்று நமக்குச் சொல்கிறது. மன்னிப்பு பற்றி வேறு விதமாக எடுத்துச் சொல்வதே ஏசாயா குறிப்பிடும் “சமாதானம்”. நாம் கடவுளோடு ஆவிக்குரிய சமாதானத்தைப் பெறும்படி, தான் ஈட்டி, ஆணிகள், முள் கிரீடம் ஆகியவற்றால் குத்தப்பட, இயேசு அனுமதித்தார். அவருடைய தியாகம், நமக்காக மரிக்க தயாராக இருந்தது ஆகியவை நாம் பிதாவுடன் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவின. அவர் அதை எனக்காகவும், உங்களுக்காகவும் செய்தார் என்று வேதாகமம் கூறுகிறது.

ரம்பமும் ஒரு ஜெபமும்

என்னுடைய அத்தை க்லேடிஸ் துணிச்சல் மிக்க பெண். அவர் துணிச்சலை நான் மதித்தாலும், சில சமயங்களில் அது எனக்கு கவலையைத்தரும். என் கவலைக்குக் காரணம், “நேற்று நான் ஒரு வாதுமை மரத்தை வெட்டினேன்”  என்று அவர் அனுப்பிய மின்னஞ்சல்.

ரம்பத்தைக் கையாளும் என் உறவினருக்கு 76 வயது! அவர்  வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் பின்புறம் அந்த மரம் வளர்ந்திருந்தது. காங்க்ரீட் தரையில் அந்த மரத்தின் வேர்கள் வெடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் அவர் அதை வெட்டத் தீர்மானித்தார். ஆனால் “இதுபோன்ற வேலைகளைச் செய்யும்முன் நான் ஜெபிப்பேன்” என்று அவர் எங்களிடம் கூறினார்.

இஸ்ரவேலரின் சிறையிருப்பின்போது, பெர்சிய ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாக நெகேமியா பணி செய்கையில், எருசலேமுக்குத் திரும்பிய ஜனங்களைப்பற்றி அவர் கேள்விப்பட்டார். சில பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தது. “எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது” (நெகேமியா 1:3). அலங்கங்கள் இடிபட்டதால், எதிரிகள் எளிதில் தாக்கக்கூடிய நிலை இருந்தது. நெகேமியா தன் ஜனங்கள்மீது கரிசனை கொண்டவராக இருந்தார். அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் ஒரு புதிய அரசர் எருசலேமின் கட்டிடப் பணிகளை நிறுத்தும்படி கடிதம் எழுதியதால் (எஸ்றா 4), நெகேமியா முதலில் ஜெபித்தார். நெகேமியா தன் ஜனங்களுக்காக ஜெபம் செய்தார் (நெகேமியா 1: 5-10). பின்னர் ராஜாவிடம் விடுப்புக்காக அனுமதி கேட்கும் முன் கடவுளின் உதவியை நாடி ஜெபம் செய்தார் (வச. 11).

ஜெபம்தான் உங்கள் பதிற்செயலா? வாழ்வில் எந்த ஒரு காரியத்தையும், சோதனையையும் எதிர்கொள்ள ஜெபமே சிறந்தது.