Archives: அக்டோபர் 2018

பாதையைத் தேர்ந்தெடுத்தல்

இலையுதிர் காலத்தில், கொலராடோ மலையில், குதிரைமேல் அமர்ந்து, தனக்கு முன் இருக்கும் பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிந்தனையில் இருக்கும் ஒரு இளைஞனின் அழகிய புகைப்படம் என்னிடத்தில் இருக்கிறது. ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய “தேர்வு செய்யப்படாத பாதை” (The Road Not Taken) என்ற கவிதையை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்துகிறது. தனக்கு முன் இருக்கும் இரண்டு பாதைகளைப் பற்றி ஃப்ராஸ்ட் குறிப்பிடுகிறார். இரண்டுமே அதில் செல்லத்தூண்டும்படி அழகாக இருக்கின்றன. மீண்டும் அதே இடத்துக்கு வருவாரா என்பது ஃப்ராஸ்டுக்குத் தெரியாது. ஆனால் அதில் ஒரு பாதையை அவர் தெரிவு செய்தாகவேண்டும். “காட்டில் பிரிந்த இரண்டு பாதைகளில், யாரும் அதிகம் பயணம் செய்யாத பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதுவே ஒரு பெரிய மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது” என்று ஃப்ராஸ்ட் எழுதுகிறார்.

இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 5-7), அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:13-14)  என்று கூறினார்.

நம் வாழ்க்கைப் பயணத்தில், எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பது என்று பல சமயங்களில் குழப்பம் வரலாம். பல பாதைகள் நம்பிக்கை அளிப்பதாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கைக்கான பாதை ஒன்றே ஒன்றுதான். சீஷத்துவமும், கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிதலும் கொண்ட பாதையில் பயணம் செய்யும்படி இயேசு நம்மிடம் கூறுகிறார். கூட்டத்தைப் பின்பற்றாமல், அவரைப் பின்பற்றுமாறு அழைக்கிறார்.

நமக்கு முன்பாக உள்ள பாதையைப் பற்றி நாம் சிந்திக்கையில், வாழ்க்கைப் பாதையைத் தெரிந்துகொள்ள, அவர் வழியைப் பின்பற்ற கடவுள் நமக்கு ஞானத்தையும், தைரியத்தையும் தந்தருள்வாராக!

எனது ஆழ்ந்த துயரத்தினூடாக நான் எப்படிச் செல்வேன்?

இழப்பின் பின்னர் ஒருவர் துக்கப்படுவது அவருடைய தனிப்பட்ட விடயம். துக்கப்படுவது இப்படித்தான் என்று சொல்ல சரியான ஒரு வழி இல்லை. கடவுளுடைய அன்பிலும் கவனிப்பிலும் நாம் தங்கியிருக்கும்போது, துக்கம் எப்படிக் கிரியை செய்கிறது என்பதை இன்னும் சற்றுக் கூடுதலாக விளங்கிக்கொள்ளவும், இழப்பை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், இந்த விடயத்திற்கான இச்சிறிய அறிமுகம் உங்களுக்கு உதவிசெய்யும்.

கடவுள் ஏன் எனக்குப் பதிலளிப்பதில்லை?

நீங்கள் எதையாவது கடவுளிடம் கேட்டு, அவர் பதிலளிக்காமலிருந்தால், அவர் உங்களைக் குறித்து அவ்வளவு கரிசனைகொண்டிராதவர்; என்று நீங்கள் நினைக்கலாம். வேதாகமத்தில், ஆசாப் என்ற மனிதனைப்போல, இதே விடயமாகப் போராடிய வேறும் பலர் இருக்கிறார்கள் என்ற விடயம் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். ஆசாப்பின் மனப்பூர்வமான ஜெபங்களுள் ஒன்றான 77ம் சங்கீதத்தைப் படிப்பதனால், ஜெபத்தின் உண்மையான நோக்கம், சிறப்புரிமை, வல்லமை ஆகியவற்றை நீங்களே கண்டுகொள்வீர்கள்.

இன்னும் ஒருதடவை ….அதன்பின்னர் விட்டுவிடுவேன் ….

பழக்கத்திற்கு அடிமையாவதற்கான காரணங்கள் எவை, அதிலிருந்து விடுபட்டு வெளியேறுவதற்கு என்ன தேவை, அகப்பட்டுவிட்டோமே என்று உணருகிறவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது என்பவற்றை, கடவுளுடைய வார்த்தைகளிலிருந்து இச் சிறு படிப்பு ஆராய்கிறது.

பூசணிக்காய்க்குள் பொக்கிஷம்

ஒரு புதிய, இளம் தாயாக, என்னுடைய மகளின் முதல் ஆண்டை ஆவணப்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு இருந்தேன். அவள் எப்படி மாறி இருக்கிறாள், எப்படி வளர்ந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ளும்விதமாக, ஒவ்வொரு மாதமும் அவளைப் புகைப்படம் எடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு புகைப்படத்தில், உள்ளூர் விவசாயிடம் வாங்கிய பூசணிக்காயைக் குடைந்து, அதற்குள் அவள் சந்தோஷமாக உட்கார்ந்திருப்பாள். என் மனதுக்கினிய என் மகள், பெரிதாக வளர்ந்த ஒரு பூசணிக்காய்க்குள் இருந்தாள். சில வாரங்களில் பூசணிக்காய் காய்ந்துபோனது, ஆனால் என் மகளோ தொடர்ந்து வளர்ந்தாள்.

இயேசு யார் என்பதை உணர்ந்த பவுல் அதை விவரிப்பதை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்தியது. இயேசுவைக்குறித்து நம் இருதயத்தில் இருக்கும் அறிவை, மண்பாண்டத்துக்குள் உள்ள பொக்கிஷத்துக்கு ஒப்பிடுகிறார். “எல்லா பக்கங்களிலும் நெருக்கப்பட்டாலும்” (2 கொரிந்தியர் 4:8), இயேசு நமக்காக செய்தவற்றை நினைப்பது, போராட்டங்கள் மத்தியில் நிலைத்திருக்க நமக்கு உதவுகிறது. கடவுளின் வல்லமை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுவதால், “கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகாமல்”, நாம் இயேசுவின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறோம் (வச. 9).

காய்ந்துபோன பூசணிக்காயைப்போல, நம்முடைய சோதனைகளால் நாம் சோர்ந்துபோகலாம். ஆனால் அந்த கடினமான சவால்களுக்கு மத்தியில், இயேசு தரும் சந்தோஷம் நம்மில் பெருக முடியும். நம்முடைய வாழ்க்கையில் செயல்படும் அவரது வல்லமை பற்றிய நமது புரிந்துகொள்ளுதல்தான் பலவீன மண்பாண்டங்களாகிய நம்முடைய உடலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம். நம்மில் அவர் வல்லமை செயல்படுவதால், கஷ்டங்கள் மத்தியில் நாம் செழித்து வளரமுடியும்.

என் உண்மையான முகம்

கடவுளின் பார்வைக்கு உகந்தது அல்லாத என்னுடைய பழைய வாழ்க்கையால், நான் பல ஆண்டுகளாக தகுதி இல்லாதவளாக, அவமானமாக உணர்ந்தேன். இந்த உணர்வு என்னுடைய அன்றாட வாழ்க்கையை அதிகமாக பாதித்தது. கறைபடிந்த என் பழைய வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன செய்வது? ஒரு ஊழியத்தின் தலைவரை வீட்டிற்கு சாப்பிட அழைக்கும் அளவிற்கு கடவுள் எனக்கு தைரியத்தைக் கொடுத்தாலும், நான் முற்றிலும் நல்லவள் என்று காட்டிக்கொள்ள முயன்றேன். வீட்டை நன்றாக சுத்தம் செய்தேன். நல்ல உணவு சமைத்தேன். இருப்பதில் மிக நல்ல உடையை அணிந்துகொண்டேன்.

அதன் பின் முற்றத்தில் தண்ணீர் பாய்ச்ச உபயோகித்த தெளிப்பானை அணைக்கச் சென்றேன். தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்த குழாயைத் திருப்பியபோது, ஏதோ தவறாகி, தண்ணீர் என் மீது தெறித்து, என் உடை முழுவதும் நனைந்துபோனது. வீட்டிற்குள் போய் தலையைத் துவட்டி, வீட்டில் அணியும் ஒரு சாதாரண உடைக்கு மாறியபோது, சரியாக அழைப்பு மணி ஒலித்தது. சலித்துப்போய், உடைமாற்றும்படி நடந்த சம்பவத்தையும், எதற்காக எல்லாம் நல்ல முறையில் காட்சி அளிக்கவேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தையும் பகிர்ந்துகொண்டேன். என் புது தோழி, தன் பழைய வாழ்க்கையினால் தனக்கு ஏற்படும் பயம், பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றுடனான போராட்டங்களைப் பற்றிக்கூறினாள். நாங்கள் ஜெபித்தபிறகு,  குறைபாடுள்ள கடவுளின் ஊழியக்காரரைக் கொண்ட தன் குழுவில் சேரும்படி என்னை அழைத்தாள்.

பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்துவுக்குள்ளான புது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டபோது, தன்னுடைய பழைய வாழ்க்கையை மறைக்கவும் இல்லை, ஆண்டவரை சேவிப்பதற்கு அதை ஒரு இடையூறாகவும் கருதவில்லை (1 தீமோத்தேயு 1:12-14). சிலுவையில் கிறிஸ்துவின் மரணம், பாவிகளில் பிரதான பாவியாகிய தன்னை இரட்சித்ததையும், மாற்றியதையும் அவர் அறிந்தார். அதனால் அவர் கடவுளைத் துதித்ததோடு, அவரைக் கனம்பண்ணவும், அவருக்குக் கீழ்ப்படியவும், மற்றவர்களையும் ஊக்குவித்தார் (வச. 15-17).

கடவுளின் கிருபையையும், மன்னிப்பையும் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நம்முடைய பழைய வாழ்க்கையில் இருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம். குறைபாடுள்ளவர்களானலும், அதிகமாக நேசிக்கப்படும் நாம், கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகளுடன் மற்றவர்களை சேவிக்கும்போது, நம்முடைய உண்மையான முகங்களைக் குறித்து அவமானப்படவேண்டிய அவசியம் இல்லை.