தீராத வலி, நடக்க முடியாமல் பட்ட கஷ்டம் ஆகியவற்றால், பல ஆண்டுகளாக நான் அடக்கி வைத்திருந்த சலிப்பும், விரக்தியும் வெளிவரத் தொடங்கின. என்னுடைய அதிருப்தியின் காரணமாக அதிகமாக அதிகாரம் செய்பவளாக, நன்றி இல்லாதவளாக மாறினேன். என்னுடைய கணவர் என்னை நன்றாக கவனித்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினேன். அவர் வீட்டை சுத்தம் செய்தது சரியில்லை என்று குறை சொன்னேன். அவர் மிக அருமையாக சமைப்பார் என்றாலும், வித விதமாக சமைக்கவில்லை என்று புலம்பினேன். நான் அதிருப்தியாக இருப்பது அவரை அதிகமாக காயப்படுத்துகிறது என்று அவர் சொன்னபோது, நான் கோபம் கொண்டேன். நான் படும் அவஸ்தை அவருக்குப் புரியவில்லை. ஆனால் கடைசியில் தேவன் என் தவறுகளை எனக்குப் புரியவைத்தார். நான் தேவனிடமும், என் கணவரிடமும் மன்னிப்புக் கேட்டேன்.

வித்தியாசமான சூழலுக்காக ஏங்குவது, குறைசொல்லும் குணத்தை அல்லது, உறவுகளை சிதைக்கும் சுயநலத்தை நம்மில் ஏற்படுத்தும். இஸ்ரவேலர்களுக்கு இந்தத் தடுமாற்றம் பரிச்சயமான ஒன்று. அவர்கள் எப்போதும் திருப்தி அடையாமல், தேவன் கொடுத்ததைக்குறித்து முறுமுறுத்தார்கள் (யாத்திராகமம் 17:1-3). தேவன் “வானத்திலிருந்து அப்பம்” (16:4) வருஷிக்கப்பண்ணி, தம் ஜனங்களை போஷித்தாலும், அவர்கள் மற்ற உணவுகளுக்காக ஏங்க ஆரம்பித்தார்கள் (எண்ணாகமம் 11:4). கர்த்தரின் அன்பையும், பராமரிப்பையும் வெளிப்படுத்தும் அன்றாட அற்புதங்களைக் குறித்து சந்தோஷப்படாமல், இஸ்ரவேலர்கள் இன்னும் அதிகமாக, நல்லதாக, வித்தியாசமானதாக, தாங்கள் முன்னே சாப்பிட்டதுபோல (வச. 4-6) வேண்டும் என்றார்கள். தங்களுடைய விரக்தியை அவர்கள் மோசேயிடம் காண்பித்தார்கள் (வச. 10-14).

கர்த்தரின் நற்குணத்தையும், விசுவாசத்தையும் நம்புவது, நமக்கு நன்றி மனப்பான்மையைத் தரும். எண்ணற்ற வழிகளில் நம் மேல் அக்கறை காட்டி, நம்மை பாரமரிப்பதற்காக அவருக்கு நாம் இன்று நன்றி சொல்வோம்.