கமில், ஜோயெல் தம்பதியின் எட்டு வயது மகள் ரீமா ஒரு அரிய வகை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அவர்கள் உள்ளம் உடைந்துபோனார்கள். இந்த புற்றுநோயின் காரணமாக, ரீமாவுக்கு மூளைக்காய்ச்சல் வந்து, பின்னர் பக்கவாதம் வந்து, இறுதியில் கோமா என்ற ஆழ்மயக்க நிலைக்குச் சென்றாள். மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு, அவள் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி, அவள் பிழைப்பதற்கான சாத்தியம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு என்று சொல்லி, ரீமாவின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள்.

கமிலும், ஜோயெலும் ஒரு அற்புதத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் செய்தார்கள். “முடிவு எதுவாக இருந்தாலும், நாம் தேவன் நம்பிக்கை கொள்ளவேண்டும். மேலும் ‘என் சித்தமல்ல, உம் சித்தம்’ என்று இயேசுவைப்போல ஜெபிக்கவேண்டும்” என்று கமில் சொன்னார். “ஆனால் ஆண்டவர் அவளை சுகப்படுத்த வேண்டும் என்றே நான் மிகவும் வாஞ்சிக்கிறேன்” என்று ஜோயெல் கூறினார். “ஆம்! நாம் கேட்போம். ஆனால் இயேசு செய்ததுபோல, நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்பது மிகவும் கடினம் என்றாலும், அப்படிச் செய்வதே தேவனை கனம்பண்ணுவதாகும்” என்று கமில் கூறினார்.

சிலுவையில் அறையப்படும் முன், “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (லூக்கா 22:42). “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்” என்று ஜெபித்ததால், சிலுவையில் அறையப்பட வேண்டாம் என்றார்; ஆனால் பிதாவின்மேல் உள்ள அன்பின் காரணமாக, பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்புவித்தார்.

நம்முடைய ஆசைகளை ஆண்டவரிடம் ஒப்புவிப்பது எளிதல்ல. கஷ்டமான தருணங்களில், அவருடைய ஞானத்தை புரிந்துகொள்வதும் எளிதல்ல. கமில், ஜோயெல் தம்பதியின் ஜெபத்திற்கு மிகவும் விசேஷித்த வகையில் பதில் கிடைத்தது. ரீமா இன்று ஆரோக்கியமான 15 வயது பெண்ணாக இருக்கிறாள்.

தேவன் நம்முடைய ஒவ்வொரு கஷ்டத்தையும் புரிந்துகொள்கிறார். அவருடைய வேண்டுதல் நமக்காக கேட்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு தேவையின்போதும், எப்படி தேவன்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று நமக்குக் காண்பித்தார்.