இலையுதிர் காலத்தில், கொலராடோ மலையில், குதிரைமேல் அமர்ந்து, தனக்கு முன் இருக்கும் பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிந்தனையில் இருக்கும் ஒரு இளைஞனின் அழகிய புகைப்படம் என்னிடத்தில் இருக்கிறது. ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய “தேர்வு செய்யப்படாத பாதை” (The Road Not Taken) என்ற கவிதையை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்துகிறது. தனக்கு முன் இருக்கும் இரண்டு பாதைகளைப் பற்றி ஃப்ராஸ்ட் குறிப்பிடுகிறார். இரண்டுமே அதில் செல்லத்தூண்டும்படி அழகாக இருக்கின்றன. மீண்டும் அதே இடத்துக்கு வருவாரா என்பது ஃப்ராஸ்டுக்குத் தெரியாது. ஆனால் அதில் ஒரு பாதையை அவர் தெரிவு செய்தாகவேண்டும். “காட்டில் பிரிந்த இரண்டு பாதைகளில், யாரும் அதிகம் பயணம் செய்யாத பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதுவே ஒரு பெரிய மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது” என்று ஃப்ராஸ்ட் எழுதுகிறார்.
இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 5-7), அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:13-14) என்று கூறினார்.
நம் வாழ்க்கைப் பயணத்தில், எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பது என்று பல சமயங்களில் குழப்பம் வரலாம். பல பாதைகள் நம்பிக்கை அளிப்பதாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கைக்கான பாதை ஒன்றே ஒன்றுதான். சீஷத்துவமும், தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிதலையும் கொண்ட பாதையில் பயணம் செய்யும்படி இயேசு நம்மிடம் கூறுகிறார். கூட்டத்தைப் பின்பற்றாமல், அவரைப் பின்பற்றுமாறு அழைக்கிறார்.
நமக்கு முன்பாக உள்ள பாதையைப் பற்றி நாம் சிந்திக்கையில், வாழ்க்கைப் பாதையைத் தெரிந்துகொள்ள, அவர் வழியைப் பின்பற்ற ஆண்டவர் நமக்கு ஞானத்தையும், தைரியத்தையும் தந்தருள்வாராக!
வாழ்க்கைப் பாதையில் இயேசுவோடு நடப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.