ஐந்து வயது சிறுவன் ஜாக்கிக்கு குரல் கொடுத்துக்கொண்டே, சிறிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு, ஓரு பணிப்பெண், தீப்பிடித்து எரிகிற வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தாள்.
ஆனால் ஜாக்கி அவள் பின்னால் வரவில்லை. வெளியே இருந்த ஒரு பார்வையாளர், தன் நண்பரின் தோள்மேல் ஏறி நின்று துரிதமாக செயல்பட்டார். மாடி ஜன்னல் வழியாக அவர் ஜாக்கியை பாதுகாப்பாக இறக்கியவுடன், மாடியின் கூரை தீப்பிடித்து கீழே விழுந்தது. “நெருப்பில் இருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை” என்று ஜாக்கியைப் பற்றி அவன் அம்மா சூசனா குறிப்பிட்டார். அதிக பிரயாணம் செய்து பிரசங்கித்த பிரபலமான ஊழியக்காரர் ஜான் வெஸ்லிதான் (1701-1791) அந்த “கொள்ளிக்கட்டை” என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
தேவனின் பண்பைக் குறித்து மிக அழகாக எடுத்துச் சொல்லும் சகரியா தீர்க்கதரிசியை மேற்கோள் காட்டியே சூசனா ஜாக்கியை அவ்வாறு கூறினார். தான் கண்ட தரிசனத்தைப் பற்றிக் கூறும் தீர்க்கதரிசி, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு அருகில் சாத்தான் நிற்கும் ஒரு விசாரணைக் காட்சியை விவரிக்கிறார். சாத்தான் யோசுவாவைக் குற்றம் சாட்டுகிறான். ஆனால் கர்த்தர் சாத்தானைக் கடிந்துகொண்டு, “இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா?” என்று கூறுகிறார் (வச. 2). “நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார் (வச. 4).
பின்னர் “நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்” (வச. 7) என்று கர்த்தர் யோசுவாவுக்கு ஒரு சவாலையும் ஒரு வாய்ப்பையும் ஒரே நேரத்தில் தருகிறார்.
இயேசுவின்மீது வைக்கும் விசுவாசம் மூலமாக நாம் தேவனிடமிருந்து பெறும் வெகுமதியை இது அழகாக எடுத்துக்காட்டுகிறது. அவர் நம்மை நெருப்பில் இருந்து எடுத்து, நம்மை சுத்தம் செய்து, நாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றும்போது, நம்மில் கிரியை செய்கிறார். நெருப்பில் இருந்து எடுக்கப்பட்ட கர்த்தரின் கொள்ளிக்கட்டைகள் என்று நம்மை நாம் கூறலாம்.
நம்மை நேசிப்பதால், கர்த்தர் நம்மைக் காப்பற்றுகிறார்; பின்னர் அவர் அன்பை நாம் மற்றவர்களுடன் பகிரத்தக்கதாக நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.