2011ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA-National Aeronatics and space association), விண்வெளி ஆராய்ச்சியில் முப்பது ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடியது. அந்த முப்பது ஆண்டுகளில் விண்கலன்கள் 355 பேரை விண்வெளிக்கு அழைத்துச் சென்றன. அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஏற்படுத்த உதவினர். ஐந்து விண்கலன்களுக்குப் பணி ஓய்வு கொடுத்தபிறகு,தற்போது தொலை-தூர விண்வெளி ஆராய்ச்சியில் நாசா கவனம் செலுத்துகிறது.
பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ள, மனித இனம் பெருமளவில் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டுள்ளது. சில விண்வெளி வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர். ஆனால் கர்த்தரின்மகத்துவத்திற்கான சான்று நம்மால் அளவிட முடியாதபடி பரந்து கிடக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி, காப்பற்றுபவர் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பேர்சொல்லி அழைக்கிறார் (ஏசா. 40:26) என்பதை நினைக்கும்போது, தேவனின் மகத்துவத்தை ஏன் தாவீது புகழ்ந்து பாடினார் (சங். 8:1) என்பது புரியும். கர்த்தர்ஸ்தாபித்த சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் (வச. 3) அவரது விரல் ரேகைகள் உள்ளன. வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தர் அவற்றை ஆட்சி செய்தாலும், அவர் அன்புப் பிள்ளைகளாகிய நம் மேல் தனிப்பட்ட முறையில் அக்கறைகொண்டு நம் அருகில் இருக்கிறார் (வச. 4). நம்மிடம் ஒப்படைத்துள்ள இந்த உலகத்தைப் பாதுகாக்கவும், ஆராயவும் நமக்கு ஆற்றலையும், பொறுப்பையும், உரிமையையும் கொடுத்துள்ளார் (வச. 5-8).
நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு நேர ஆகாயத்தை நாம் ஆராய்ச்சி செய்யும்போது, நம்மைப் படைத்தவர், விருப்பத்தோடும், உறுதியோடும் அவரைத் தேடும்படி நம்மை அழைக்கிறார். நம் உதடுகளில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு ஜெபத்தையும், ஸ்தோத்திரப் பாடலையும் அவர் கேட்கிறார்.
கர்த்தரின் மேன்மை அளவற்ற அற்புதத்திலும்,
அன்யோனியத்திலும் தெளிவாகத் தெரிகிறது.