என் ஆத்துமாவே, அமர்ந்திரு!
ஒரு குழந்தையை அன்போடு அனைத்துக்கொண்டு, தாய் தன் விரலை அக்குழந்தையின் உதடுகளின் முன் வைத்து - ஷ்ஷ்… என்ற வார்த்தையைச் சொல்வது போன்று கற்பனை செய்துபார். இந்த செயலில், எளிய வார்த்தையின் அர்த்தம் என்னவெனில், ஏமாற்றங்களின் மத்தியில் எதிர்பார்ப்போடுள்ள குழந்தையின் வலி அல்லது அசௌகரியத்தை அமைதிப்படுத்துவதாகும். இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாவிடத்திற்கும், எக்காலத்திற்கும் உரியவை. நாம் அனைவருமே இத்தகைய அன்பின் வெளிப்பாடுகளைப் பெற்றிருக்கவும் முடியும், கொடுத்திருக்கவும் முடியும். நான் சங்கீதம் 131:2 ஐ தியானித்த போது இந்த காட்சிதான் என் கண் முன்னே வந்தது.
இந்த சங்கீதத்தின் வார்த்தைகளும் போக்கும் சங்கீதக்காரன் தாவீதின் தீவிரமான அநுபவத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகள் எனத் தெரிகின்றது. நீ ஏமாற்றத்தையோ, தோல்வியையோ சந்திக்கும் போது, அது உன்னை ஜெபத்திற்கு நேராக வழிநடத்தினதுண்டா? உன்னுடைய வாழ்வின் சூழ்நிலைகளால் நீ தாழ்த்தப்படும்போது நீ என்ன செய்வாய்? ஒரு தேர்வில் தோற்கும் போது, ஒரு வேலையை இழந்த போது அல்லது ஓர் உறவின் முடிவைச் சந்தித்தபோது என்ன செய்வாய்? தாவீது தன்னுடைய இருதயத்தை கர்த்தரிடத்தில் ஊற்றி, அத்தோடு தன் ஆன்மாவை உண்மையாய் ஆராய்ந்து அறிந்து ஒரு பட்டியலை தயாரித்தான் (சங். 131:1) அவனுடைய சுற்றுச் சுழலோடு சமாதானம் செய்து கொண்டபின், ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பிலிருக்கும் போது அமைதியாயிருப்பது போல, தாவீதும் மன நிறைவைப் பெற்றுக்கொண்டான் (வச. 2).
வாழ்க்கையின் சூழல் மாறலாம். சிலவேளைகளில் நாம் தாழ்த்தப்படலாம். ஆனாலும் நாம் நம்பிக்கையோடும் மன நிறைவோடும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள தேவன் நம்மோடிருக்கிறார் என அவரை முற்றிலுமாக நம்புவோமாக.
வரங்கள் அநேகம் நோக்கம் ஒன்றே
மெக்ஸிகோவிலுள்ள எனது சொந்த ஊரில் சோளம் என்ற மக்காச் சோளம்தான் பிரதானமான உணவு. சோளத்தில் அநேக வகைகள் உண்டு. மஞ்சள், பழுப்பு, சிவப்பு, கருப்பு மற்றும் புள்ளியிட்டவை என பல வகைகளைக் காணலாம். ஆனால், பட்டணங்களில் வசிப்பவர்கள் புள்ளியிட்ட சோளத்தை உண்பதில்லை. உணவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளர் ஆமடோரமிரஸ் என்பவர் ஒரே நிறமுடைய தானியம் தான் தரமானது என நம்பப்படுகிறது எனத் தெரிவித்தார். ஆனாலும், புள்ளியிட்ட தானியம் சுவைமிக்கதாகவும், நல்ல ரொட்டி தயாரிக்க உகந்ததாகவும் உள்ளது.
கிறிஸ்துவின் சபையும் ஒரே நிறத்தையுடைய சோளத்தைப் போலல்லாமல், புள்ளிகளுள்ள சோளத்தைப் போன்றேயுள்ளது. பவுல் அப்போஸ்தலன் ஒரு சரீரத்தை கிறிஸ்துவின் சபையோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். எவ்வாறெனின், நாமனைவரும் ஒரே சபையும் ஒரே தேவனும் கொண்டவர்களாயிருந்தும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பவுல் சொல்வது போல, “ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. (1கொரி. 12:5-6). நாம் ஒருவருக்கொருவர் உதவுவதில் இருக்கின்ற வேறுபாடுகள், தேவனுடைய தயாளத்தையும், படைப்பின் ஆற்றலையும் காட்டுகின்றது.
நாம் நம்முடைய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளும்போது, நாம் நம்முடைய நம்பிக்கையிலும் நோக்கத்திலும் ஒற்றுமையை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். நமக்குள்ளே வேறுபட்ட திறமைகளும் வேறுபட்ட சூழலும் உண்டு. நாம் வேறுவேறு மொழிகளைப் பேசுகின்றோம். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்களாகவும் இருக்கின்றோம். ஆனால், நம் அனைவருக்கும் ஒரே அற்புதமான தேவன் உண்டு. அவரே படைப்பின் கர்த்தர், வெவ்வேறு வகைகளைப் படைத்து மகிழ்பவர்.
சார்ந்திருத்தலை வெளிப்படுத்துதல்
லாராவின் தாயார் கேன்சர் வியாதியோடு போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் காலை லாரா தன் சிநேகிதியோடு சேர்ந்து தன் தாயாருக்காக ஜெபித்தாள். அவளுடைய சிநேகிதி மூளை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஊனமுற்ற நிலையில் இருக்கின்றாள். அவள், “தேவனே, நீர் எனக்காக எல்லாவற்றையும் செய்துவருகின்றீர். தயவு கூர்ந்து லாராவின் தாயாருக்கும் எல்லாவற்றையும் செய்தருளும்” என ஜெபித்தாள்.
லாராவின் சிநேகிதி தான் முற்றிலும் “சார்ந்திருக்கும் நிலையை வெளிப்படுத்தியது”, லாராவின் உள்ளத்தை அசைத்தது. சிறிது நேர சிந்தனைக்குப் பின் லாரா 'என் எல்லாவற்றிற்கும் தேவன் எவ்வளவு அவசியம் என்பதை எத்தனை முறை அறிக்கை செய்கிறேன்?' என்று சொன்னாள். இது “எல்லா நாட்களிலும் நான் செய்ய வேண்டிய ஒன்று” என்றாள்.
இயேசுவும் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பரலோகத் தந்தையைச் சார்ந்தே வாழ்ந்ததைச் செயல்படுத்திக் காட்டினார். இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த தேவனாயிருப்பதால் அவருக்குத் தேவையென்பதேயில்லை, எல்லாம் பரிபூரணமாயிருந்திருக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இயேசு ஓய்வு நாளில் ஒரு மனிதனை சுகமாக்கிய போது, ஆன்மீகத் தலைவர்கள் அவரிடம் ஓய்வு நாளில் செய்யத் தகாததை செய்ததேன் எனக் கேட்டபோது, இயேசு அவர்களை நோக்கி, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரே அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (5:16) என்றார். இயேசுவும் பிதாவைச் சார்ந்திருத்தலை வெளிப்படுத்துகின்றார்.
இயேசுவும் பிதாவைச் சார்ந்திருந்தே வாழ்ந்தார் என்பது நமக்கும், தேவனோடு நாம் எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகின்றது. நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய ஈவு, தேவன் நம் வாழ்வு முழுமையும் அவருடைய பெலத்தால் நிறைந்திருக்க வேண்டுமென விரும்புகின்றார். நாம் அவரை நேசித்து, நம்முடைய ஜெபத்தின் மூலம் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு அவருக்குச் சேவை செய்யும் போது நம் வாழ்வு அவரையே சார்ந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
மறைந்திருக்கும் அழகு
டொபாகோ தீவின் கடற்கரையிலிருந்து சற்று உள்ளே, கரிபியன் கடலுக்குள் சென்று ஆழ்கடலை பார்வையிட செல்லும்போது சுவாசிப்பதற்கு தேவையான உடையை அணிந்துகொள்வது அவசியம் என்று கூறி, என்னுடைய குழந்தைகளை சம்மதிக்கச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் உள்ளே சென்று திரும்பிய போது மிகவும் மகிழ்ச்சியோடு, “அங்கே ஆயிரக்கணக்கான வகைகளில் மீன்கள் இருக்கின்றன. அது மிகவும் அழகாயிருக்கின்றது. இத்தனை வண்ணமயமான மீன்களை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை” என்றனர்.
அந்தக் கடலின் மேற்பரப்பைப் பார்க்கும் போது, அது எங்கள் வீட்டினருகிலுள்ள நல்ல நீர் ஏரிபோலவேயிருந்ததால், அதன் அடியில் மறைந்திருக்கும் அந்த அழகை எங்கள் குழந்தைகள் எதிர்பார்க்கவில்லை.
சாமுவேல் தீர்க்கதரிசி பெத்லகேமிற்கு ஈசாயின் குமாரரில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணச் சென்றார். மூத்த குமாரன் எலியாபை சாமுவேல் பார்த்த போது அவனுடைய தோற்றத்தை வைத்து, சரியான நபரைக் கண்டு கொண்டதாக எண்ணினான். ஆனால், தேவன் எலியாபைப் புறக்கணித்தார். கர்த்தர் சாமுவேலை நோக்கி, “நீ இவனுடைய முகத்தையும் சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம். …மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கின்றார்” (1 சாமு. 16:7) என்றார்.
எனவே சாமுவேல் இன்னமும் வேறே பிள்ளைகள் இருக்கின்றனரா? எனக் கேட்டார். ஈசாயின் இளைய மகன் அப்பொழுது அங்கேயில்லை. அவர்களுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். எனவே ஆட்களை அனுப்பி அந்த மகன் தாவீதை அழைப்பித்தான். தேவன் சாமுவேலிடம் அவனை அபிஷேகம்பண்ணும்படி சொன்னார்.
நாமும் அடிக்கடி மக்களை வெளித்தோற்றமாகவே பார்க்கின்றோம். அவர்களின் உள்ளத்தினுள், மறைந்துள்ள அழகைக்காண நேரம் எடுப்பதில்லை. தேவன் மதிப்பிடுவதைப் போன்று நாம் மதிப்பிடுவதில்லை. ஆனால், நாமும் புறத்தோற்றத்திற்குள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண நேரம் செலவிட்டால் மிகப்பெரிய பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
தேவனுடைய மிகப் பெரிய படைப்பு
சமீபத்தில் எங்களுடைய பேரக்குழந்தைகளோடு புளோரிடா சென்றிருந்த போது நாங்கள் வலைதள கேமரா மூலம் ஒரு கழுகின் குடும்பத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். நிலத்திலிருந்து மிக அதிகமான உயரத்திலுள்ள ஒரு கூட்டில் அந்தத் தாய், தந்தை, குஞ்சுப் பறவைகளின் செயலை ஒவ்வொரு நாளும் நாங்கள் கவனித்தோம். ஒவ்வொரு நாளும் அந்தப் பெற்றோர் பறவைகள் தங்கள் குஞ்சுகளை கவனமாக பாதுகாத்துக் கொண்டேயிருந்தன. அருகிலிருந்த நதியிலிருந்து மீன்களைக் கொண்டுவந்து குஞ்சுகளுக்குக் கொடுத்தன.
சங்கீதம் 104ல் சங்கீதக்காரன் தேவனுடைய படைப்பின் காட்சிகளையும், தேவனுடைய கரத்தின் கிரியைகளின் மகிமையையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சிறிய கழுகின் குடும்பமும் தேவனுடைய வியத்தகு படைப்பின் ஒரு சிறிய பகுதியாகும்.
தேவனுடைய இராஜ கெம்பீரத்தை அவருடைய படைப்பாகிய இந்த அண்டத்தில் காண்கின்றோம் (வச. 2-4). அவருடைய படைப்பாகிய தண்ணீரையும், மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் இப்புவியில் நாம் அனுபவிக்கின்றோம் (வச. 5-9). அவருடைய படைப்பின் ஈவாகிய விலங்குகளையும், பறவைகளையும், செடிகளையும் நாம் கண்டு மகிழ்கின்றோம் (வச. 10-18). இந்த உலகில் அவர் படைத்த இரவும், பகலும், இருளும் வெளிச்சமும், வேலையும் ஓய்வும் மாறி மாறி வருவதைப் பார்த்து அதிசயிக்கின்றோம் (வச. 19-23).
எத்தனை மகிமையான உலகத்தை தேவன் தம் கரத்தினால், நம்முடைய மகிழ்ச்சிக்கென உருவாக்கித் தந்து அவர் மகிமைப்பட்டுள்ளார். “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி” (வச. 1) நாம் ஒவ்வொருவரும் பூரித்து மகிழும்படி தேவன் நமக்குத் தந்துள்ள அனைத்துக்காகவும் அவருக்கு நன்றி சொல்லுவோம்.