நாங்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட இலக்கினை அடைந்தனரா என்பதைக் குறித்த கணக்கைக் கொடுக்கும்படி ஒன்று கூடுவதுண்டு. என்னுடைய சிநேகிதி மேரி தன்னுடைய சாப்பாட்டு அறையின் நாற்காலிகளின் இருக்கைகளை அந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க விரும்பினாள். எங்களுடைய நவம்பர் மாதக் கூடுதையில், அக்டோபர் மாதத்திலிருந்து தன் வேலையின் முன்னேற்றத்தை அவர் வேடிக்கையாகத் தெரிவித்தாள். “என்னுடைய நாற்காலிகளைப் புதிப்பிப்பதற்குப் பத்து மாதங்களும் இரண்டு மணி நேரமும் ஆனது” என்றாள். பல மாதங்களாக அந்த வேலைக்கான பொருட்கள் கிடைக்கவில்லை, சரியான நேரம் அமையவில்லை, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளைப் பார்க்க வேண்டியிருந்தது எனப் பல காரணங்கள் அவ்வேலையைத் தடுத்தன. ஆனால், அந்த வேலைக்கென இரண்டு மணி நேரம் மட்டுமே செலவழித்து, முடிக்க முடிந்தது, என்றாள்.
தேவன் நெகேமியாவை ஒரு பெரிய வேலைக்கென்று அழைக்கின்றார். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கின்றது. அதனைக் கட்டி எழுப்ப நெகேமியாவை அழைக்கின்றார் (நெகே. 2:3-5,12).
அவர் ஜனங்களை இந்த வேலையில் வழிநடத்தும்போது, ஜனங்கள் பிறரின் கேலிப் பேச்சையும், தாக்குதலையும், கவனச் சிதறலையும் பாவச் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது (4:3,8; 6:10-12)). ஆனாலும், தேவன் அவர்கள் தங்கள் வேலையில் உறுதியாகவும், தீர்மானத்தோடு முயற்சி செய்யவும், சோர்ந்து போகாமல் தங்கள் வேலையை ஐம்பத்திரண்டு நாட்களில் முடிக்க பெலனளித்தார்.
இத்தகைய சவால்களை மேற்கொள்ள ஒரு தனிப்பட்ட ஆர்வமும் இலக்கையும் விட இன்னும் அதிகமாக ஒன்று தேவை. இந்த வேலை தேவனால் கொடுக்கப்பட்டது என்ற புரிந்து கொள்ளலே நெகேமியாவிற்கு இந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு, அவருடைய ஜனங்களுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய பெலனீந்தது. தேவன் நம்முடைய ஒரு செயலைச் செய்து முடிக்கும்படி பணிக்கும்போது, ஓர் உறவைச் சரிசெய்யும்படி அல்லது அவர் செய்த நன்மைகளை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கும் போது, அவர் நமக்குத் தேவையான திறமையையும், பெலத்தையும் கொடுத்து அவர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கச் செய்கின்றார். நம் பாதையில் நாம் எத்தனை சவால்களைச் சந்திக்க நேரிட்டாலும் அவர் சொன்னதை நிறைவேற்றுவார்.
தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் வேலையை முடிப்பதற்குத் தடையாக இருப்பவற்றை மேற்கொள்வதற்கு நம்மை பெலப்படுத்துகின்றார்.