என்னுடைய மகன் பள்ளிக்குச் செல்வதற்கு கதவைத் தாண்டி ஓடும்போது, நான் அவனை பற்களைத் துலக்கினாயா எனக் கேட்டேன். மீண்டும் இக்கேள்வியைக் கேட்டதோடு உண்மை பேசுவதின் முக்கியத்துவத்தையும் அவனுக்கு நினைப்பூட்டினேன். என்னுடைய அறிவுரையைக் குறித்துச் சற்றும் பாதிப்படையாமல், கிண்டலாக குளியல் அறையில் ஒரு பாதுகாப்பு கேமரா பொருத்துவதே உங்களுக்குத் தேவை என்றான். அப்படியென்றால் நானே நேரடியாக அவன் பல்துலக்கியதை உறுதிப்பண்ணிக் கொள்ள முடியும், அவனும் பொய் சொல்ல தூண்டப்படமாட்டான்.

ஒரு பாதுகாப்பு கேமரா, நாம் சட்டங்ககளைக் கைக்கொள்ள நம்மை நினைவுபடுத்தலாம், ஆனால், நம்மை யாரும் கவனிக்கமுடியாத இடங்களும், நம்மையாரும் பார்க்கக்கூடாத வழிகளும் உள்ளன. ஒருவேளை நம்முடைய புத்திசாலித்தனத்தால் இந்த பாதுகாப்பு கேமராவை தவிர்த்துவிடலாம். ஆனால், நாம் தேவனுடைய பார்வையைவிட்டு விலகிவிட்டோமென்று நினைத்தால், நாம் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்.

“எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ?” என்று கர்த்தர் கேட்கின்றார் (எரே. 23:24). அவருடைய இந்தக் கேள்வியில் ஓர் ஊக்கப்படுத்துதலும், ஓர் எச்சரிப்பும் இருக்கின்றது.

எச்சரிப்பு என்னவெனில், நாம் ஓடி ஒளிந்து கொள்ளவோ, அவரை ஏமாற்றவோ முடியாது. நாம் செய்யும் எல்லா காரியங்களும் அவர் பார்வையில் தெளிவாக இருக்கின்றது.

அவர் தரும் ஊக்கம் என்னவெனில், இப்புவியிலோ அல்லது வானத்திலோ எங்கிருந்தாலும் நம்முடைய பரலோகத் தந்தையின் விழிப்போடுள்ள பாதுகாப்பிற்குள் இருக்கின்றோம் என்பதே. நாம் தனிமையில் இருப்பதாக எண்ணினாலும் தேவன் நம்மோடிருக்கின்றார். இன்று நாம் எங்கு சென்று கொண்டிருந்தாலும் இந்த உண்மை நம்மை அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அவர் தரும் ஆறுதலைப்பெற்றுக்கொள்ள அழைக்கின்றது. அவர் நம்மை விழிப்புடன் கவனிக்கின்றார்.