1988 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான செய்திகளை நான் எங்கள் அனுதின அப்பம் என்ற பத்திரிக்கைக்கு எழுதியிருந்த போதும், ஒரு சில மட்டும் என் மனதில் பதிந்துள்ளன. அந்தச் செய்திகளுள் ஒன்றினை 1990 ஆம் ஆண்டில் நடுவில் எழுதினேன். அப்பொழுது என்னுடைய மூன்று பெண் குழந்தைகளும் வெளியே ஒரு கூட்டத்திற்கோ அல்லது ஓர் ஊழியத்திற்காகவோ சென்றிருந்தனர். எனவே என்னுடைய ஆறு வயது மகன் ஸ்டீவ்வும் நானும் மட்டும் இருக்க நேர்ந்தது.
எனவே, நாங்கள் ஒரு விமான நிலையத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். அப்பொழுது ஸ்டீவ் என்னிடம், “மெலிசா இல்லாமல் இது அத்தனை மகிழ்ச்சியாக இல்லை” என்றான். அவனுடைய எட்டு வயது அக்காவையும் அவளுடைய குறும்புகளையும் விரும்பினான். இந்த வார்த்தைகள் எத்தனை ஆழ்ந்த அர்த்தமுள்ளவையென எங்கள் இருவருக்குமே அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. மெல் 17 வயதில் ஒரு வாகன விபத்தில் மரித்ததிலிருந்து பல ஆண்டுகளாக எங்களுடைய வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாகவேயில்லை. காலத்தின் ஓட்டம் ஒருவேளை அந்த வேதனையை சற்று குறைத்திருக்கலாம். ஆனால், அந்த வேதனையை ஒருவராலும் முழுவதும் நீக்க முடியவில்லை. காலம் அந்த காயத்தை குணப்படுத்தவில்லை. ஆனால், இங்கு சில காரியங்கள் நமக்கு உதவியாயிருக்கும். ஆறுதலின் தேவன் நமக்குத் தந்துள்ள ஆறுதலின் வாக்குத்தத்தங்களை நாம் கவனித்து, தியானித்து கருத்துக்களை எடுத்துக்கொள்வோம்.
கவனி: நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (புலம். 3:22)
தியானி: தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். (சங். 27:5)
ருசித்திடு: அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. (சங். 119:50)
நாம் மிகவும் நேசித்த ஒருவரை இழந்தபின்னர் வாழ்க்கை ஒருபோதும் முந்தியது போலாகாது. ஆனால், தேவனுடைய வாக்குகள் நமக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் தரும்.
தேவனுடைய வார்த்தையே உண்மையான ஆறுதலைத் தரும்.