“நாம் ஏன் நம்முடைய வீட்டை விட்டு வேறிடத்திற்குச் செல்ல வேண்டும்?” என்று என்னுடைய மகன் கேட்டான். ஓர் ஐந்து வயது சிறுவனுக்கு வீடு என்பது என்ன என்பதை விளக்குவது சற்றுக் கடினம். நாங்கள் எங்கள் இருப்பிடத்தைத் தான் மாற்றுகின்றோம். எங்கள் வீட்டையல்ல. வீடு என்பது நமக்கு அன்பானவர்கள் இருக்கும் இடம். ஒரு நீண்ட பயணத்திற்குப் பின் நாம் திரும்பிவர ஏங்கும் ஓர் இடம் அல்லது ஒரு நாளின் கடின வேலைக்குப்பின் திரும்பி வர எண்ணும் இடம் தான் நம் வீடு.
இயேசு மரிப்பதற்கு முன்னதாக ஒரு மேல் வீட்டறையில் இருந்த போது தன்னுடைய சீடர்களிடம் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்றார் (யோவா. 14:1) இயேசுவின் சீடர்களுக்கு தங்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை, ஏனெனில், இயேசு தான் மரிக்கப்போவதை அவர்களுக்கு முன்னறிவித்தார். ஆனால், இயேசு தன்னுடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடிருக்கும் எனவும், மீண்டும் அவரைக் காண்பார்களெனவும் உறுதியளித்திருந்தார். “என்னுடைய பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; … நான் ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்றார் (வச. 2) அவர் பரலோகத்தைக் குறிப்பிவதற்கு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் நாம் நன்கு பயன்படுத்தும், நன்கு புரிந்து கொள்ளக் கூடிய வீடு என்ற வார்த்தையையே பயன்படுத்தினார். அங்கு இயேசுவும் நாம் நேசிக்கும் நபர்களும் இருப்பார்.
சி.எஸ். லூயிஸ் “நம்முடைய தந்தை, நம்முடைய பயணத்தின் போது நம்மைச் சில மகிழ்ச்சியான தங்கும் விடுதிகள் மூலம் நம்மை பெலப்படுத்துகின்றார். ஆனால், நாம் அவற்றை நிரந்தரமாகத் தங்கும் இடமென நினைத்துவிடக் கூடாது” என எழுதுகின்றார். தேவன் நமக்குத் தரும் மகிழ்ச்சியான விடுதிகளுக்காக அவருக்கு நன்றி சொல்வோம். ஆனால், நம்முடைய நிலையான வீடு பரலோகத்திலிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்வோம். அங்கு “நாம் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். (1 தெச. 4:17)
நாம் தேவனோடு என்றும் வாழும்படியாக,
வரும் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.